தஹஜ்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ?

 

தஹஜ்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ?

கேள்வி : Assalamu allaikkum,Tahajath Tolighai 4 Rakkatha ? or 8 Rakkatha ? EVVARU THOLA VNDUM ?
தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ,தஹஜ்ஜத் தொழுகை 4 ரக்அதா?8 ரக்அதா ?எவ்வளவு தோழா வேண்டும்?
– Sharfudeen,abudhabi
பதில் : இந்தக் கேள்வி தொடர்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார் அந்தக் கட்டுரையையே நாமும் இங்கு பதிலாகத் தருகிறோம்.
4+5=9 ரக்அத்கள்
எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் எழுந்து சிறுவன் தூங்கி விட்டானா? என்று கூறி (தொழுகைக்காக) நின்றார்கள். நானும் எழுந்து அவர்களின் இடது புறம் நின்றேன். என்னைத் தமது வலது புறத்திற்கு மாற்றினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்கும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் (பஜ்ரு) தொழுகைக்காகப் புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 117, 697
இஷாவுக்குப் பின் நான்கு ரக்அத்களும் தூங்கி எழுந்த பின் ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் ஆக மொத்தம் 11 ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
இதில் கடைசியாகக் குறிப்பிடப்படும் இரண்டு ரக்அத், இரவுத் தொழுகை கணக்கில் அடங்காது என்பதை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம்.
இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரு தொழுகையை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 472, 998
வித்ரு தொழுகை என்பது ஒற்றைப் படையாகத் தொழும் தொழுகையாகும். மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அது வித்ரு தொழுகை தவிர வேறில்லை. வித்ரு தான் கடைசித் தொழுகை என்றால் அதன் பிறகு தொழுத இரண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகையாக இருக்காது. மாறாக ஃபஜ்ரு தொழுகையின் முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும். இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தூங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுகைக்குத் தான் புறப்பட்டார்கள் என்று மேற்கண்ட ஹதீஸிலேயே கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்தை விட்டதேயில்லை என்று ஹதீஸ் உள்ளதால் இந்த இரண்டு ரக்அத் பஜ்ருடைய முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத் தொழுவதை அறவே விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1159, 1182, 1163

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத் தொழுது விட்டுச் சற்று நேரம் தூங்குவார்கள். அதன் பின்னர் பஜ்ரு தொழ வைக்கச் செல்வார்கள் என்று பல்வேறு ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பஜ்ரு நேரம் தெளிவாகி பாங்கு சொல்பவர் பஜ்ருடைய பாங்கு சொன்னவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து பஜ்ருக்கு முன் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இகாமத் சொல்வதற்காக பாங்கு சொல்பவர் வரும் வரை வலது பக்கம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: புகாரி 626, 994, 1123, 1160, 6310
எனவே மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இரண்டு ரக்அத்கள் பஜ்ரின் முன் சுன்னத் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையாக நான்கு ரக்அத்களும் ஐந்து ரக்அத்களும் தொழுதுள்ளனர் என்பது தெளிவாகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று புகாரி 937, 1169 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு ரக்அத்களை வீட்டில் தான் தொழுவார்கள் என்று புகாரி 1173, 1181 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். அதாவது இஷாவின் பின் சுன்னத்தை அவர்கள் தொழாமல் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்பது தெரிகிறது.
எனவே மேற்கண்ட நபிவழியை நடைமுறைப்படுத்த விரும்புவோர் இஷாவின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழாமல் அதற்குப் பதிலாக நான்கு ரக்அத் மட்டும் தொழுது விட்டு, தூங்கி எழுந்து ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் போதும். இவ்வாறு செய்பவர் தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவராவார். இதுவும் நபி வழி தான்.
ஏழு அல்லது ஒன்பது ரக்அத்கள்.

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடமையல்லாத தொழுகைகள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் என் வீட்டில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் புறப்பட்டு லுஹர் தொழுகை நடத்துவார்கள். பின்னர் வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மக்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தி விட்டு வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்திவிட்டு எனது வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரை சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்று தொழும் போது நின்ற நிலையில் இருந்தே ருகூவுக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள். உட்கார்ந்து தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்தே ருகூவு, ஸஜ்தா செய்வார்கள். பஜ்ரு நேரம் வந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக் , நூல் முஸ்லிம் 1201

வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரு எத்தனை? வித்ரு அல்லாத தொழுகை எத்தனை என்று பிரித்துக் கூறப்படவில்லை.
 
8+1 அல்லது 6+3 அல்லது 4+5 என்று தொழுதிருக்கலாம். அது போல ஏழு ரக்அத்கள் தொழும் போது 6+1 அல்லது 4+3 என்றும் தொழுதிருக்கலாம். வித்ரையும் சேர்த்து ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கை வரும் வகையில் தொழுதால் அவர் நபிவழியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவர் தான்.
 
8+3 ரக்அத்கள்.
‘ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) , நூல்: புகாரீ 1147, 2013, 3569
வித்ரு தவிர எட்டு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிவழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
 
வித்ரையும் சேர்த்து 11 ரக்அத்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். இதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 994, 4569, 1123, 1140, 6310

10 ரக்அத்கள் மட்டும் தொழுதல்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் எட்டு ரக்அத்களும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். (பஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இத்தொழுகையை அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ,நூல்: புகாரி 1159

இரவுத் தொழுகை பற்றிய அறிவிப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரு தொழாமல் இருந்ததாகக் கூறப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பில் ஒற்றைப்படையாக அவர்கள் எந்தத் தொழுகையும் தொழுததாகக் கூறப்படவில்லை. சில சமயங்களில் இப்படி ஒருவர் தொழுதாலும் அவர் நபிவழியில் தொழுதவராவார்.
12 ரக்அத்துடன் வித்ரும் தொழுதல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கினேன்…
….நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். அவர்கள் செய்தது போல் நானும் செய்து அவர்களின் விலாப் புறத்தில் நின்றேன். அவர்கள் தமது வலது கையை என் தலையில் வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பினார்கள். (1) இரண்டு ரக்அத்கள் (2) பின்னர் இரண்டு ரக்அத்கள் (3) பின்னர் இரண்டு ரக்அத்கள் (4) பின்னர் இரண்டு ரக்அத்கள் (5) பின்னர் இரண்டு ரக்அத்கள் (6) பின்னர் இரண்டு ரக்அத்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள்….
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) , நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572
இரண்டிரண்டாக ஆறு தடவை தொழுது விட்டுப் பின்பு வித்ரு தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரின் எண்ணிக்கை இங்கே கூறப்படவில்லை. குறைந்த பட்ச வித்ரு ஒரு ரக்அத் என்று வைத்துக் கொண்டால் பதிமூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தலைப்பில் வித்ரு ஒரு ரக்அத் என்றே கூறப்படுவதால் அதற்கேற்ப இதையும் புரிந்து கொள்வது நல்லது.
வித்ரையும் சேர்த்து 13 ரக்அத்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் நீள நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனீ (ரலி), நூல்: முஸ்லிம் 1284
நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 1138
இரண்டிரண்டாக ஆறு தடவையும் ஒரு ரக்அத் வித்ரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர். இவ்வாறு தொழுவதும் நபிவழி தான்.
5 ரக்அத் வித்ருடன் 13 ரக்அத்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஐந்தாவது ரக்அத்தில் தவிர உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1217
இரவுத் தொழுகை எட்டு ரக்அத்துடன் வித்ரு ஐந்து ரக்அத்கள் தொழலாம். ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் முதல் நான்கு ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதுவதற்காக உட்காரக் கூடாது. கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார வேண்டும். இப்படித் தொழுவதும் நபிவழி தான்.
ஒரு ரக்அத் வித்ருடன் 11 ரக்அத்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1222
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1215
– பதில் : ரஸ்மின் MISc 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.