குரானைத் தொட்டு முத்தமிடலாமா?

கேள்வி : குர்ஆனைத் தொட்டு முத்தமிடலாமா?

syed yusuf – dubai

பதில் : திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது. இதே நேரத்தில் நபியவர்களுக்கு குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கியருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் இறக்கப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி இருக்க முடியாது, அதனால் அவர்கள் குர்ஆன் எழுதப்பட்ட ஏடுகளை முத்தமிட்டிருக்கவும் முடியாது.

ஆனாலும் அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் குர்ஆனை எழுதி வைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவர்களும் இருந்தனர். குர்ஆன் எழுதப்பட்ட ஏட்டை முத்தமிடுமாறு இவர்களில் யாருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக்கட்டளையும் பிறப்பிக்கவில்லை. அல்லது தமது முன்னிலையில் மற்றவர்கள் முத்தமிட்டு அவர்கள் அங்கீகரிக்கவும் இல்லை.

குர்ஆனை மதிக்கும் வழிமுறைகளில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடாததால் குர்ஆனை முத்தமிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். நபிக்குத் தெரியாதது எனக்குத் தெரிந்து விட்டது என்று காட்டி நபியை அவமதிப்பதாகும்.

குர்ஆன் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதும், அது தடை செய்த காரியங்களை விட்டு விலகுவதும் தான் நாம் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையாகும். இவ்வாறு செய்தாலே நாம் குர்ஆனுடைய புனிதத்தைக் காத்தவர்களாக முடியும். எனவே குர்ஆன் பிரதிகளை முத்தமிடுவது கூடாது. அதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.