அர்ஷ் என்பதும் குர்ஸ் என்பதும் ஒன்றா ?

கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் இறவன் அர்ஷ்ன் மீது அமர்ந்து இருப்பதாக குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது ஆனால் 2-255 இல் ஆசனம் என்று குர்ஸ் என்ற வார்த்தை இருக்கிறதே அப்படிஎன்றால் அர்ஷ் என்பதும் குர்ஸ் என்பதும் ஒன்றா ? தயவு செய்து இரண்டுக்கும் தனி தனிய விளக்கம் தரவும்.
– Anuar Abdullah, malaysia

பதில் : அர்ஷ் என்பதும் குர்ஷ் என்பதும் இரு வேறு வார்த்தைகளாக இருந்தாலும் இரண்டும் ஒன்றைத் தான் குறிப்பிடுகின்றன.
ஒன்றுக்குறிய இரண்டு பெயர்களாகத் தான் அவைகளை இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான்.
இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் பிரமாண்டமான ஆசனத்திற்குறிய இரண்டு பெயர்களே இவை. அந்த ஆசனம் வானங்களையும், பூமியை விடவும் பெரியதாகும். இறைவனின் இருக்கைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்து இறைவன் திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (அல் குர்ஆன் 7-54)
உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். காரியங்களை நிர்வகிக்கிறான். அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா? (அல் குர்ஆன் 10-03)
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல் குர்ஆன் 13-02)
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல் குர்ஆன் 20-05)
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக! (அல் குர்ஆன் 25-59)
வானங்களையும், பூமியையும், அவற் றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? (அல் குர்ஆன் 32-04)
வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (அல் குர்ஆன் 57-04)
குர்ஷ் என்பதும் இறைவனின் ஆசனத்திற்குறிய இன்னுமொரு பெயராக இறைவன் பயன்படுத்தியுள்ளான்.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது (குர்ஷ்) இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.(அல் குர்ஆன் 2-255)
மேற்கண்ட வசனத்தில் தனது இருக்கையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது குர்ஷ் என்று சொல்லிக் காட்டுகிறான். 
திருமறைக் குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றைக் குறிப்பவைகள் தாம் என்பது தெளிவாக விளங்குகிறது.
ஆனால் திருமறைக் குர்ஆனுக்கு விளக்கம் (தப்ஸீர்) என்ற பெயரில் சிலர் அர்ஷ் என்பது இறைவனின் ஆசனம் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டு, குர்ஷ் என்றால் இறைவனின் பாதம் வைக்கும் இடம் என்று விளக்கம் தருகிறார்கள்.
ஆனால் திருமறைக் குர்ஆனிலோ, ஸஹீஹான நபிமொழிகளிலோ இவர்கள் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
திருமறைக் குர்ஆனில் “அர்ஷ்” என்று இறைவன் பயன்படுத்திய இடங்களில் “இறைவன் அர்ஷின் மீது அமர்ந்தான்” என்று பயன்படுத்தியுள்ளான். இதே நேரத்தில் 2 வது அத்தியாயம் 255வது வசனத்தில் “அவனது (குர்ஷ்) இருக்கை” என்று பயன்படுத்தியுள்ளான். 
இறைவன் “அர்ஷின் மீது அமர்ந்தான்” என்பதும், அவன் அமரும் இடம் “குர்ஷ்” என்பதும் முரண்பட்டது அல்ல. 
இரண்டு பெயர்கள் ஆனால் ஒரே இடம். இறைவனின் அமர்விடத்திற்குப் ஒரு பெயர் “அர்ஷ்” இன்னொரு பெயர் “குர்ஷ்” ஆகும்.ஆக இரண்டும் ஒன்றுதான் என்பதே சரியான கருத்தாகும்.அல்லாஹ்வே மிகவும அறிந்தவன்!
பதில் : ரஸ்மின் MISc 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.