இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

ஒரு தாய் எவ்வாறு தன பிள்ளைகள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கித் தந்து மகிழ்ச்சியுறச் செய்வாளோ அதை விட பன்மடங்கு இறைவன் தன்னுடைய அடியார்கள் வாய்விட்டு கேட்பதையும் மனதிற்குள் இரகசியமாக ஆசைப்படுவதையும் சளைக்காமல் கருணையுடன் செய்து தருகிறான். நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றாலோ அல்லது ஒரு துன்பம் நீங்கவேண்டும் என்றாலோ ஓயாமல் பிரார்த்தனை செய்யும் நாம் அக்காரியம் நிறைவேறிய உடன்,அல்லது அத்துன்பம் நீங்கிய உடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையே மறந்து நமது திறமையால்தான் கிடைத்ததுபோல் நடந்து கொள்கிறோம். இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பார்ப்போம்,
மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் ‘எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது’ எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக் கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.(அல்குர்ஆன் 17:67)
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் – 4:147)

‘எனவே என்னை நினையுங்கள். நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு நன்றி மறவாதீர்கள்’.     (அல்குர்ஆன் 2: 152)

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் – (16:114) என்று கூறியிருக்கிறான்.
அல்லாஹ் தன் அருட்கொடைகளை மனிதர்களாகிய நமக்கு வழங்கும்போது நாம் நம்முடைய திறமையால்தான் அனைத்தும் கிடைத்தது என்று பெருமை கொள்கிறோம் ஆனால் அது அல்லாஹுடைய சோதனை என்று அறியாமல் ஆணவம் கொண்டு இதை என்னால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் கர்வம் கொள்கிறோம். அல்லாஹ் தன் அருட்கொடைகளை செல்வமாகவோ அல்லது வேறுவிதமாகவோ வழங்கினால் அதை நாம் அல்லாஹ்வின் வழியில் செலவிடுகிறோம என்பதர்க்காகவேயன்றி பூட்டிவைத்து பாதுகாக்க அல்ல. மேலும் நம்முடைய தேவைக்கதிகமாக செல்வம் வழங்கப்பட்டால் அதன்மூலம் சோதனை செய்யப்படவும் நன்மைகளைப் பெருவதுமேயாகும், மேலும் அல்லாஹ் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கியிருக்கும்போது நன்றி மறந்தவனாக எனக்கு நோய் வராது என்றும் பெருமை பாராட்டுகிரோமே தவிர இந்த அருட்கொடைகளுக்கெல்லாம் ஒருபோதும் நன்றி செலுத்துபவர்களாக இல்லை. இது தவிர நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்விடம் அந்த துன்பத்தை நீக்கச்சொல்லி மன்றாடுகிறோம் நீக்கியபின் அல்லாஹ்வை மறந்துவிடுகிறோம்.
மனிதனுக்குத் தீங்கு ஏற்படு மானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவ னாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.(அல்குர்ஆன்10:12)

மனிதனுக்கு, அருளை அனு பவிக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் எடுத்து விட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நன்றி மறந்தவனாகவும் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் ‘என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன’ என்று கூறுகிறான். அவன் பெரு மிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங் களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.(அல்குர்ஆன் 11:9,10,11)

ஒரு காரியத்தை செய்துவிட்டு அது வெற்றியடைந்துவிட்டால் அது நம்மால்தான் நடந்தது என்று கூறிக்கொண்டிருக்கிறோமே ஒவ்வொரு காரியத்தையும் நாம் இப்படி நினைத்தால் அல்லாஹ் அது உன் திறமையாலேயே செய்துகொள் என நம்மை விட்டுவிட்டால் நமது நிலை என்னவாவது இதை சற்றும் சிந்தித்துப் பார்த்து உணர்ந்தோமேயானால் ஒவ்வொரு விசயத்திற்கும் நாம் நன்றி செலுத்துபவர்களாக மாறிவிடுவோம். அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் அவனுடைய அருட்கொடைகளை மட்டும் நம்ப மறுக்கிறோம். மேலும் சிலர் அதிர்ஷ்டத்தை நம்புவார்கள் ,அல்லது விரலில் அணிந்திருக்கும் நவரத்தினகல் மோதிரத்தை நம்புவார்கள் இறைவனின் அருட்கொடைகளை நம்பாமல் தன மோதிரத்தால் கிடைத்தது என்பார்கள் ,இவர்கள்தான் மிக நன்றிகெட்டவர்கள்
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என மக்களிடம் கேட்டார்கள். பிறகு, “என் அடியார்களுக்கு நான் எனது அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் (இதற்கெல்லாம் காரணம்) கிரகங்கள்தாம்; கிரகங்களால்தான் (இது எங்களுக்குக் கிடைத்தது) என்று கூறி, அந்த அருட்செல்வத்தின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாகி விடுகின்றனர் என்று அல்லாஹ் சொன்னான்” என்றார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 105)
“அல்லாஹ் வானத்திலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும் போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விஷயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடுகின்றனர். (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். அவர்களோ, இன்ன இன்ன கிரக மாற்றம் (மழை பொழிவித்தது) என்று கூறுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 106)
குறிப்பு :
இதே ஹதீஸ் முஹம்மத் பின் ஸலமா அல் முராதீ (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “இன்ன இன்ன கிரகங்கள் (நகர்வின்) மூலம்தான்” என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தபோது நபி (ஸல்)அவர்கள், ”மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர்; நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, வானிலை மாற்றம் மெய்யாகி விட்டது என்று கூறுகின்றனர்” என்றார்கள்.அப்போது தான் “நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்” என்று தொடங்கி, “ (இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக, என்னை நம்புவதில்) உங்களது மறுதலிப்பைக் காட்டுகிறீர்களோ?” என்று முடியும் இறைவசனங்கள் (56:75–82) அருளப் பெற்றன.
அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி),முஸ்லிம் அத்தியாயம்: 1, பாடம்: 1.32, எண் 107)
அல்லாஹ்வின் திருப்பெயரால் என ஆரம்பம் செய்கிறோமே அவன் உதவியின்றி நம்மால் செயல்படவே முடியாது என்பதை என்றாவது உணர்ந்தோமா? அவன் கைவிட்டால் நம்மை காப்பவர் யாருமில்லை ஒவ்வொரு காரியத்தை செய்யப்போகும்போது இன்ஷா அல்லாஹ் சொல்கிறோம் முடித்துவிட்டு எத்தனைபேர் நன்றி செலுத்துகிறோம்? மேலும் நம் உடல் ஆர்ரோக்கியதிற்கு காரணம் நம்முடைய உணவு கட்டுப்பாடு மற்று உடற்பயிற்சிதான் காரணம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அவ்வாறல்ல அது இறைவனின் அருட்கொடையும் சில சமயங்களில் சோதனையும் ஆகும் .நம்முடைய உணவுக்காகத்தான் உழைக்கிறோம் என்றபோதும் அந்த உணவில் அல்லாஹ் பரக்கத் செய்கிறான், நம்முடைய குறைவான சம்பாத்தியத்தில் அணைத்து தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றுகிறான் இது நம்முடைய சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்த மாபெரும் அருட்கொடை ஆனாலும் நாம் குறைவாகவே நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் ,மேலும் வயிறு நிறைந்தாலும் மனது நிறைந்தாலும்” அல்ஹம்துலில்லாஹ்” என்ற அல்லாஹ்விற்கு நன்றி கூறவும் அவனது திருப்தியை நாடவும் மறந்துவிடக் கூடாது .
அடியான் ஒரு கவள உணவை சாப்பிட்டதும் “அல்ஹம்துலில்லாஹ் ” என கூறும்போது அல்லது பானம் அருந்திவிட்டு “அல்ஹம்துலில்லாஹ் ” எனக் கூறும்போது இறைவன் திருப்தி கொள்கிறான்.
அறிவிப்பாளர் :அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 5282.
ஆசிரியர் : முஹமது இன்சாப்(FRTJ செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.