வட்டியும் நமது நிலையும்

வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு
பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும்  உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில்  நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.
2:275   الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ  ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ  ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)


இஸ்லாத்தின் பார்வையில் வட்டி

வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.
‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)’ (அல்குர்ஆன் 2:279)
வட்டி பெரும் பாவங்களில் ஒன்று
 
வட்டியை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் வைக்கிறது.வட்டி பெரும் பாவம் என்று அறிந்தே மக்கள் சர்வ சாதாரணமாக சிறிதும் பயமில்லாமல் வெளிப்படையாக வட்டி வாங்குவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ‘பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857

வட்டியில் அல்லஹ்வின் அருள் இல்லை

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.நம்முடைய தேவைகள் அனைத்தும் சிறிய உழைப்பிலோ அல்லது சிறிய அளவிலான செல்வதிலோ பூர்த்தி ஆகிவிட்டால் அதை அருள் என்று கூறலாம்.கோடி கோடியாக செல்வம் இருந்தும் அந்த செல்வத்திற்கு மேல் அவனுடைய தேவை இருந்தால் அந்தாள் செல்வதில் அருள் இல்லை என்றே அர்த்தம்.இப்படிப் பட்ட அருளை அல்லாஹ்வால் மட்டுமே கொடுக்க முடியும்.அல்லாஹ்விடம் அதிக செல்வதை கேட்பதை விட அல்லாஹ்வின் அருளை கேட்பதே சிறந்தது.அல்லாஹ்வே தேவையை உண்டாகுகிறான் ஆகையால் அவனிடமே அதை கேட்க வேண்டும்.அல்லாஹ் அந்த தேவையை வேறு வழியில் நிறைவேற்றுவான் அல்லது அவனது வல்லமையினால்  நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த தேவையே இல்லாமல் ஆகிவிட போதுமானவன்.
வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.
2:276   يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)

30:39   وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ  ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)

வட்டி மறுமையின் நிலை
 
மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
4:161   وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
“அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.”
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085
வட்டி சாபத்திற்கு உரியது 

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (3258)

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347
மற்ற மனிதர்களின் சபிப்பதர்க்கும் நபிமார்கள் சபிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு.நபிமார்கள் ஒரு விஷயத்தை மார்க்கம் என்று கூறினால் அது அல்லாஹ்வின் புறத்தே வருகிறது என்று தான் அர்த்தம்.அதே போல் ஒரு செயலை நபிமார்கள் சாபமிட்டால் அதை அல்லாஹ் சபிக்கிறான் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.வட்டி சாபத்திற்கு உரியது என்பதை மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் விளங்க முடிகிறது.

ஃபிரான்சும் வட்டி கலாச்சாரமும்

உலகில் உள்ள பல நாடுகள் வட்டியை மையமாக கொண்டே இயங்கி வருகின்றது.அதில் பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாம் கடையில் வாங்கும் சிறு பொருள் முதல் நாம் வாங்கும்  வீடு போன்றவைகள் வரை இந்த நாட்டில்  வட்டி எங்கும் நிறைந்திருக்கிறது.வட்டி வாங்குவது இஸ்லாத்தில் ஹராம் என்று வைத்திருந்தும் தங்களின் பணத்தை பெருக்கிக் கொள்வதர்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் பலர் வட்டி விழுந்து விடுகின்றனர்.வட்டி வாங்காமல் இந்த நாட்டில் வாழவே முடியாது ஆகையால் நிர்பந்தத்தின் அடிப்படையில் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று சில இஸ்லாமிய மார்க்கக அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள் பத்வாவும் கொடுத்திருக்கின்றனர்.நாம் ஒரு செயயலை செய்யா விட்டால் உயிர் வாழவே முடியாது போன்ற நிலை ஏற்பட்டால் அதை நிர்பந்தம் என்று கூறலாம்.இவர்கள் வட்டி வாங்குவதை நிர்பந்தம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.இவர்கள் எந்த காரணத்தை வைத்து வட்டி நிர்பந்தம் என்று கூறுகிறார்கள் என்பதையும் அதற்க்கு என்ன தீர்வு என்பதையும் பார்போம்.
பிரான்ஸ் நாட்டில் வட்டியை வாங்குவதயும் கொடுப்பதயும் முக்கியமான நான்கு காரணங்களாக பிரிக்கலாம்
பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி

விலை அதிகமான பொருட்களை அதிகமானோர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்கள் விற்கப் படுகிறது.இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் இன்ஸ்டால்மென்டில் வாங்கும்போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் இல்லை அதை  இஸ்லாம் தடுக்க வில்லை.ஆனால் நீங்கள் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தல் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.இதற்க்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :
  1. முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .
  2. சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி
 
ஒருவருடைய வங்கிக கணக்கின் தொகையை பொருத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொருத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது,இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.வட்டியை மூலதனமாக கொண்டு இயங்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக இதை விரும்புகிறார்கள்.
செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக : வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இப்படி பெறப்படும் செல்வம் வட்டி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் அல்லாஹ்வுடைய கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் அஞ்சிக் கொள்ள வேண்டும்.நம்மை சுற்றி இருக்கின்ற பல மக்கள் இந்த பாவத்தை செய்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலை.
பாதுகாப்பு : வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது ? என்ற கேள்வி எழுகிறது.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது(ஏழைகளுக்கு) கொடுத்து விடலாம் என்றும் சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது.ஏனெனில் அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.
வாகனம் வாங்குவதில் வட்டி
வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்தினால் வருமான வரி(Income Tax) போன்ற சிக்கல் இருப்பதால் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதை ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம்.இந்த பிரச்சனைக்கும் இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம் :
  1. பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்கும்.அந்த வகையில் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
  2. வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும் என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மருமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.
வீடு வாங்குவதில் வட்டி
வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதிர்க்கும் பொருந்தும்.வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும்.நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர் சற்று ஃபிரவ்னுடைய மனைவி கூறியதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! (அல் குர் ஆன்  66:11)
நகை அடமானம்
சிலர் தங்களது அவசர தேவைக்காகவும் ,அனாவசிய அனாச்சரங்களுக்காகவும்  தங்களது நகைகளை வங்கியிலோ வட்டிகடையிலோ அதன் மதிப்பைவிட குறைந்த தொகைக்காக அடமானம் வைக்கிறார்கள்.பின்பு அதற்கு வட்டியும் கட்டி பின்பு அதை மூழ்கவும் செய்து விடுகிறார்கள்.தன்னுடைய நகைக்கு தானே முட்டாள்தனமாக பணம் செலுத்துகிறார்களே..இவர்களை என்னவென்று  சொல்வது ? தனது தேவைக்கு மட்டும் நகையை  விற்று விட்டு பின்பு வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனை கூட இவர்களிடம் இல்லை.அல்லாஹ் உங்களை சோதித்து பார்பதற்காக ஒரு அவசர தேவையை உண்டாக்குகிறான்  என்று தெரியாமல் அடமானம் என்ற பெயரில் நரகப்படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள்.

ஏலச்சீட்டு 
 
ஏலசீட்டில் இரண்டு முறைகள் உள்ளது.முதலாவது மாதா மாதம் ஆளுக்கு ஒரு தொகை உதாரணமாக 100€ கட்டுவார்கள் பின்பு பணத்தேவை அல்லது குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு  மொத்த தொகையில்(1000€ ல்) கழிப்பு போக அதாவது வட்டி போக மீதம் உள்ளதை (900€) கொடுப்பார்கள் , இதில் கழிப்பு தொகையை (100€)என்பதுதான் அதை நடத்துபவரின் லாபமாகும் ,அவர் வட்டி வாங்குகிறார் மற்றவர்கள் வட்டி கொடுக்கிறார்கள் இரண்டும் நரகத்திற்கு இழுத்துச்செல்லும்   நேரடியான வட்டியாகும்.எனவே இதில் கலந்துக் கொள்ளக் கூடாது.
ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கழிப்பு ஏதும் இல்லாமல் எந்த ஆதாயம் இல்லாமலும் செய்கிறார்கள் இதில் எதுவும்  தவறில்லை.

வட்டியினால் ஏற்படும் விளைவுகள்

நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடியவர்கள் கடன் கொடுக்கும்போது சிரித்த முகத்தோடும் நட்போடும் பழகுவார்கள்.அந்த  பணத்தை திருப்பி கொடுக்க தாமதமானலோ அல்லது தொகையை குறைத்து கொடுத்தாலோ அவர்களுடைய சுய ரூபம் வெளிப்படுவதை காண்கிறோம்.இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது,அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கொச்சைப் படுத்துவது போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது.இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வட்டியினால் உலகிலும் கெடும் மறுமையிலும் கேடு என்பதை மக்கள் என்று உணரப் போகிறார்களோ?

நாட்டுக்கும் கேடு : ஒருவன் தொழில் தொடங்கும்போது தன் சொந்த செலவில் அந்த தொழிலை துவக்கினால் அவன் உற்பத்தி செய்யும் பொருளில் கணிசமான லாபத்தை வைத்து விற்கப்படும்.ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் உற்பத்தி செய்யும் பொருளில் லாபம் மட்டும் இல்லாமல் அவன் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்துதான் அந்த பொருளை விற்க வேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப் படுவான்.அந்த வியாபாரி செலுத்த வேண்டிய வட்டிப் பணத்தை அந்த பொருளை வாங்குபவர்கள் மீது திணிக்கப் படுகிறது.இப்படி வட்டிக்கு வங்கி தொழில் செய்வதால்தான் விலை வாசி அதிகரிக்கிறது.

இந்தியா போன்ற நாடுகள் உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி இப்போது நாட்டில் வரும் வருமானத்தில் கால்வாசிக்குமேல் உலக வங்கியில் பெற்ற கனுக்காக வட்டி தொகையை செலுத்தி வருகிறது.வட்டிக்கே இந்த நிலைமை என்றால் அசலை எப்போது கொடுப்பது?சமீபத்தில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் வட்டி தான் மூலக் காரணம்.பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன,இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த நிலையையும் நாம் பார்த்தோம்.இதெல்லாம் நடந்தும் கூட உலக நாடுகள் திருந்துவதாக தெரியவில்லை.

வட்டிக்கு என்ன தீர்வு?

வட்டி இல்லாத வங்கி தான் இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.முஸ்லிம்கள் அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கி அதிகரிக்கும்.வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுதலாம்.பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிளிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகள முடியும்.
நீங்கள் வட்டி வாங்குபவரா ?
மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன திருமறையிலே கூறுகிறான்.எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
2:278   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

3:130   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً  ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)

ஆசிரியர்  : Mohamed Insaaf (FRANCE)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.