நபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)

நபித்துவம் இறைவனின் நியமனம்

நபித்துவம் என்பது இறைவனின் பாக்கியமாகும்.மற்ற மதங்களின் கருத்துக்களைப் போல் இஸ்லாமிய மார்கத்தில் யாரும் பக்தியால் நபியாக மாற முடியாது.

முனிவர்களைப் போல் காடுகளிலும் மலைகளிலும் தங்கியிருப்பதால் ஒன்றும் அவர்கள் இறைவனின் நபியாக அங்கீகரிக்கப் படமாட்டார்கள்.அது போல் வயதின் அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் என்று எந்த அடிப்படையும் இதற்கு இல்லை.நபித்துவத்திற்கு இருக்கும் ஒரே அந்தஸ்து இறைவன் யாருக்கு விரும்புவானோ அவர்களுக்கு அந்தத் தகுதியை அந்தஸ்தை வழங்குவதுதான்.அந்த அந்தஸ்தைப் பெருபவர் சிறுவராகவும் இருக்களாம் பெரியவராகவும் இருக்களாம் வயோதிகராககவும் இருக்களாம்.இறைவனின் நாட்டம் தான் முக்கியம்.

இதை இறைவன் தனது திருமறையில் தெளிவாக அறிவித்துத் தருகிறான்.

நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

யஹ்யா ஈஸா (அலை)ஆகியவர்களை அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே நபியாக நியமிக்கிறான்.

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம்(19:12)

வேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சிலர் சித்தரிக்கின்றனர்.


யஹ்யா நபியவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள் சிறுவராக இருக்கும் போதே அவருக்கு வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது.

உடனே அவர் (அக்குழந்தை)நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான் நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான் என்னை துர்பாக்கிய சாலியாகவும் அடக்குமுறை செய்பவனாக வும் அவன் ஆக்கவில்லை.(19:30,31,32)

மேலும் 19:30 வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனேயே தம்மை இறைவன் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாகக் கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும்.

முஹம்மது நபிக்கு விதிவிலக்கா?

சிலர் நபியாவதற்கு இறைவனின் நாட்டம் தான் முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மாத்திரம் இதில் விதிவிலக்குப் பெற்றவர்கள் என்று வாதிடுவர்.

ஆனால் நபியும் அதற்கு விதிவிலக்கல்ல.நபி(ஸல்)அவர்கள் ஒன்றும் பிறப்பிலிருந்து நபியல்ல அவர்களுக்கும் தான் நபியாகும் வரை அதைப்பற்றிய எந்த செய்தியும் தெரியாது.

உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்(93:7)

மேற்கண்ட வசனத்தில் நபியவர்கள் பிறப்பில் நபியில்லை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இறைவன் அவர்களை நபியாக ஆக்கினான் என்பது தெளிவாகிறது.

ஆக இறைவன் நபி(ஸல்)அவர்கள் பற்றி என்ன திருக்குர்ஆனில் கூறியுள்ளானோ அதைத் தான் நாம் கூற வேண்டுமே தவிர நாமாக வரலாறு என்ற பெயரில் எதையும் சொல்லக் கூடாது.

நபிமார்களைப் புரியும் மூன்று முறைகள்.
  1. தோற்றத்திலும்(புறத்தோற்றம்)அவர்கள் மனிதர்கள்.
  2. அகத்தோற்றத்திலும் அவர்கள் மனிதர்கள்.
  3. ஆற்றலிலும் அவர்கள் மனிதர்கள்.

நபிமார்களும் மனிதர்களே!

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும் அதிகாரத்தையும் நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்! என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும் அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!(என்றே நபி கூறுவார்.)(3:79)

மக்களை எச்சரிப்பீராக என்றும் நம்பிக்கை கொண்டோருக்கு தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நற்செய்தி கூறுவீராக என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? இவர் தேர்ந்த சூனியக்காரர் என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்(10:2)

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம் என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.(11:27)

வானங்களையும் ப+மியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும் குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவை களை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!” என்று அவர்கள் கேட்டனர்.(14:10)

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்” என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.(14:11)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம் அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும் ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம் நீங்கள் அறியாதிருந்தால அறிவுடையோரிடம் கேளுங்கள் மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்(16:43)

மேலும் படிக்க 17:93.17:94.18:110. 21:3 போன்ற வசனங்களை பார்க்கவும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆசிரியர் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.