தலாக்கும் பொதுசிவில் சட்டமும்
ஆக்கம் பீ. ஜைனுல் ஆபிதீன்
இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும், பெண்களுக்குக் கேடு விளைவிக்கும் தலாக் முறையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.
கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்ய அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு தடவை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் மனைவியுடன் வாழ்க்கை நடத்தலாம். பின்னர் மீண்டும் விவாகரத்து செய்தால் மீண்டும் சேர்ந்து வாழலாம். இதன் பின் மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாமிய தலாக்.
(இது பற்றி பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.)
முஸ்லிம்களில் சிலர் தமக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதை அறியாமல் ஒரே தடவையில் மூன்று தலாக் எனக் கூறி மூன்று தலாக் நிகழ்ந்து விட்டதாகக் கருதி கணவன் மனைவியைப் பிரித்து விடுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் கருதப்பட்டது. ஒரு சமயத்தில் மூன்று தலாக் கூறி அதை மூன்றாகக் கருதுவது அதற்கு மாற்றமாக அமைந்துள்ளது.
(இதுவும் பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)
இந்திய முஸ்லிம்களில் மத்ஹப் எனும் கோட்பாட்டை (அறிஞர்களின் சொந்தக் கருத்தை) பின்பற்றுவோரும் உள்ளனர். இவர்கள் தான் மூன்று தலாக் எனக் கூறினால் அது மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்ற கருத்தில் உள்ளவர்கள்.
மத்ஹபுக் கோட்பாட்டை எதிர்க்கும் அஹ்லே ஹதீஸ், நத்வதுல் முஜாஹிதீன், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஜமாஅத்துகளைச் சேர்ந்தவர்கள் மூன்று தலாக் என்று சொன்னாலும் ஒரு தலாக் தான் என்ற கொள்கையில் உள்ளவர்கள் ஆவர். சவூதி அரேபியாவிலும் இதுதான் சட்டம்.
1937 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு மதத்தினருக்குமான சிவில் சட்டங்கள் புணரமைக்கப்பட்ட போது ஒரு சமயத்தில் மூன்று தலாக் கூறி முற்றாகப் பிரிந்து விடும் சட்டத்தை நீக்க அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அன்றைக்கு செல்வாக்கு பெற்றிருந்த தேவ்பந்த் மதரஸாவின் எதிர்ப்பு காரணமாக வெள்ளையர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதுவே சுதந்திர இந்தியாவிலும் நீடிக்கிறது.
மூன்று தலாக் முறையால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தக்க முறையில் அணுகாததே இப்போது எழுந்துள்ள குழப்பத்துக்குக் காரணம்.
அந்த விபரம் இதுதான்:
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாயிரா பானு, ராஜஸ்தான் மானிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பெண், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய மூவர் முத்தலாக்கை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இவர்கள் தொடுத்த வழக்கு முத்தலாக் என்பது இஸ்லாத்தில் இல்லை என்பதேயாகும்.
இவ்வழக்குகள் கீழ் நீதிமன்றங்களைக் கடந்து முடிவில் ஒரே வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
இதை முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும், சில முஸ்லிம் அமைப்புகளும் எதிர்த்தன.
அஹ்லே ஹதீஸ் பிரிவினரிடம் முத்தலாக் முறை இல்லை; நபிகள் நாயகத்தின் காலத்திலும் இல்லை. வழக்குத் தொடுத்த பெண்கள் நபிகள் நாயகத்தின் காலத்து இஸ்லாமியச் சட்டத்தைக் கோரி வழக்கு போட்டுள்ளதால் முத்தலாக் என்பது ஒரு தலாக் தான் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்திருக்க முடியும். அப்படி பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் உள்ளன. இப்படி தீர்ப்பு அளித்து இருந்தால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அதிகமான முஸ்லிம்கள் கருத மாட்டார்கள். மாறாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஒரு பிரிவினரின் சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கருதப்பட்டு இருக்கும்.
ஹனஃபி பிரிவினரும், அஹ்லே ஹதீஸ் பிரிவினரும் மதச்சடங்கு சம்மந்தமாக பல விஷயங்களில் மோதிக் கொண்டு நீதிமன்றங்களை அணுகிய போது அஹ்லே ஹதீஸ் பிரிவினர் அவர்களின் கோட்பாட்டுப்படி நடக்க உரிமை உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
மேலும் கேரளாவிலும், காரைக்காலிலும் ஷாஃபி மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டப்படி நீதிமன்றங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இங்கே ஷாஃபி கோட்பாட்டை பின்பற்றுவோர் தான் அதிகம் உள்ளதால் அதை முஸ்லிம் தனியார் சட்டம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் தமிழகத்தில் ஹனஃபி மத்ஹபின் படி தீர்ப்பளிக்கப்படுகின்றன.
இப்படி இஸ்லாமியப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்குரிய சட்டப்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தால் அது தனியார் சட்டத்தில் தலையிடுவதாக ஆகாது. முஸ்லிம்களும் அப்படிக் கருத மாட்டார்கள்.
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கையாளாமல் மத்திய அரசிடம் தேவையில்லாமல் கருத்து கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
மத்திய அரசின் கருத்தைக் கேட்காமலே இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நின்று அப்பெண்களுக்கு நியாயம் வழங்க வழி இருந்தும் நீதிமன்றங்கள் மத்திய அரசிடம் கருத்து கேட்டது அறிவீனமாகும்.
இதன்படி மத்திய அரசும் பின்வரும் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
மூன்று தலாக் பிரச்சனைக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டால் அது பற்றி மட்டும் கருத்து சொல்லாமல் ஒட்டு மொத்த தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது மடத்தனமானதாக உள்ளது.
ஒரு செய்தியில் முரண்பட்டு அறிக்கை தாக்கல் செய்யும் அளவுக்கு மத்திய அரசுக்கு மூளை வரட்சி ஏற்பட்டுள்ளதை முதலில் நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
தலாக் நடைமுறையை, மதநம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை.
இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
இவ்விரு வாக்கியங்களையும் பாருங்கள்!.
தலாக் என்பதை மத நம்பிக்கையின் ஓருபகுதியாகக் கருத வேண்டியதில்லை என்று முதல் வாசகம் கூறுகிறது. இரண்டாம் வாசகம் மத அடிப்படையிலான சட்டங்களுக்கு மதச்சார்பற்ற நாட்டில் இடமில்லை என்று நேர்முரணாகக் கூறுகிறது.
தலாக் மத நம்பிக்கை தான்; ஆனால் மத நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு நிகரான மடமை எதுவும் இருக்குமா? அரசியல்வாதிகளுக்குத் தான் அறிவு போதாது என்றால் சட்டம் படித்த மேதாவிகளுக்காவது முரண்பாடு இல்லாமல் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய அறிவு இருக்க வேண்டாமா?
அடுத்து மத்திய அரசின் சட்ட அறிவு சந்தி சிரிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
மதச்சார்பற்ற நாடு என்பதால் மத அடிப்படையிலான தலாக் சட்டத்துக்கு இடமளிக்கக் கூடாது
என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.
மதச்சார்பற்ற நாடு என்று மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படவில்லை. அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போதே அறிவிக்கப்பட்டது. அரசியல் சாசனத்திலும் இவ்விதி சேர்க்கப்பட்ட்து. மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கும் போதே பல்வேறு மதத்தினருக்க்காக 1937ல் உருவாக்கப்பட்ட தனிச்சட்டத்தையும் அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்கிறது.
குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்’
என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுகிறது.
இதன் பொருள் என்ன? அனைவருக்கும் தற்போது ஒரே சிவில் சட்டம் இல்லாமல் உள்ளது. அதை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
வெள்ளையர் காலம் முதல் இருந்து வரும் தனியார் சிவில் சட்டங்களை ஏற்றுக் கொண்டு இவ்வாசகம் அங்கீகாரம் அளிக்கிறது. இருந்தாலும் அனவருக்கும் ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரைதான் கூறப்படுகிறது.
சில தனியார் சிவில் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டது மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று அன்றைய அரசியல் சாசன சிற்பிகள் கருதியிருந்தால் அன்றைக்கே அனைத்து தனியார் சிவில் சட்டங்களையும் அரசியல் சாசனம் மூலம் ரத்து செய்திருப்பார்கள்.
பொது சிவில் சட்டத்துக்காக முயற்சிக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அது கட்டாயம் நிறைவேற்ற வேண்டியதில்லை என்பது பற்றியும் மத்திய அரசுக்கு அறிவில்லை.
இதை அரசியல் சாசனமே தெளிவாக்குகிறது.
ஐந்து தலைப்புகளின் கீழ் அரசியல் சாசணம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கொள்கை விளக்கம் என்பது ஒரு தலைப்பாகும். இத்தலைப்பில் 36 முதல் 51 வரை உள்ள விதிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் உள்ள 36 முதல் 51 வரை உள்ள விதிகள் அறிவுரைகள் தான். கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல.
‘இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது’
என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.
நீதிமன்றம் தலையிடக் கூடாது; தலையிட முடியாது என்ற தரத்தில் உள்ள கொள்கை விளக்கம் பகுதியில் தான் பொது சிவில் சட்டத்துக்கு முயற்சிக்க வேண்டும் என்ற 44 வது பிரிவு அடங்கியுள்ளது.
மத்திய அரசுக்கு சட்ட அறிவும், அரசியல் சாசன அறிவும் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இது குறித்து கருத்து கேட்கவும், தலையிடவும் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அரசியல் சாசனத்தைக் காப்பாற்றி இருக்க வேண்டும்.
அடுத்து முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் சில தனியார் சட்டங்கள் உள்ளன என்பதை மாற்றத் துடிக்கும் மத்திய அரசு முஸ்லிமல்லாத மக்களுக்கும் இது போல் சில சட்டங்கள் உள்ளதை அறியவில்லை.
மதச்சார்பற்ற நாடு என்பதற்காக தலாக் கூடாது என்றால் இந்துக்களுக்கு மட்டும் தனியான சிவில் சட்டங்கள் உள்ளனவே அவற்றை நீக்க மத்திய அரசுக்குத் துணிவு உண்டா? நீக்குவோம் என்று பேசுவதற்காகவாவது துணிவு உண்டா?
இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிமுக்கு அதிக வரியும் இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.
தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.
நிர்வாணமாகத் திரிவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர். பிரதமரே நேரில் சென்று அம்மண சாமிகளிடம் ஆசி வாங்குகிறார். சில மாநில சட்டசபையிலும் நிர்வாணச் சாமியார்கள் உரை நிகழ்த்த முடிகிறது. இது இந்து தனியார் சட்டம் காரணமாகவே சாத்தியமாகிறது.
இப்படி பொதுசிவில் சட்டத்துக்கு மாற்றமாக இந்துக்களுக்கு மட்டும் உள்ள தனிச்சட்டம் எவ்வளவு தெரியுமா?
முன்னாள் சட்ட அமைச்சரும் அறிவுஜீவியுமான வீரப்ப மொய்லி சொல்கிறார்:
இந்தியாவில் மொத்தம் 300 தனியார் சட்டங்கள் உள்ளன. அவற்றில் முஸ்லிம்களுக்கு நான்கு, கிறித்தவர்களுக்கு நான்கு தனியார் சட்டங்கள் உள்ளன. மீதமுள்ள 292 சட்டங்களும் இந்துக்களுக்கு மட்டும் உரியதாகும்.
292 சட்டங்கள் நாட்டின் பொதுவான சட்டப்படி இல்லாமல் இந்துக்களுக்கு மட்டும் தனியாக உள்ளதே அது மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகா? மத்திய அரசு இது குறித்து வாய் திறக்க முடியுமா?
இந்துக்களுக்கு 292 சட்டங்களும், முஸ்லிம்களுக்கு நான்கு சட்டங்களும், கிறித்தவர்களுக்கு நான்கு சட்டங்களும் பொதுசிவில் சட்டத்தில் இருந்து வெள்ளையர்கள் காலத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இதை சுதந்திர இந்தியாவும் ஏற்றுக் கொண்டது.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தனியார் சட்டம் குறித்த விபரம் இதுதான்:
(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772ஆம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் இந்தியக் குற்றவியல் சட்டம்’ (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது. பின்னர் 1937ஆம் ஆண்டில் ‘ஷரீஅத் சட்டம்’ (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் சரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப் படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட விஷயங்கள் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தின் கீழ்தான் கொண்டுவரப்படுவார்கள்.
இந்து மதம் பல மதங்களின் தொகுப்பாகும். சாதிகள் அடிப்படையிலும் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட இந்து சாதியினருக்கு ஒரு வழக்கம் மதச் சடங்காக இருந்தால் அந்தப் பிரிவினர் அதைக் கடைப்பிடிப்பார்கள். அதை இந்து தனியார் சட்டம் அனுமதிக்கிறது.
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் நீதிமன்றம் தலையிடும் வாசலை மத்திய அரசு திறந்து வைத்தால் என்ன ஆகும்? பிராமணருக்கு உள்ள சட்டம், அல்லது ஏதேனும் ஒரு பிரிவுக்கு உள்ள சட்டம் மற்ற அனைத்து சாதியினருக்கும் என்று ஆக்கப்படும். அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் சட்டத்தைக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு இனத்தவரும் புரட்சியில் இறங்கும் நிலை ஏற்படும். இது சாதாரணமான விஷயம் அல்ல.
இதனால் தான் தனியார் சட்டத்தை வெள்ளையன் அங்கீகரித்து வைத்தான். அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகள் இதை உணர்ந்து இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு உள்ள நான்கு சட்டங்கள் பற்றியதாக மட்டும் இப்பிரச்சனை இருந்திருந்தால் அன்றைக்கு பாகிஸ்தான் பிரிவினையின் போது அந்தப்பழியைச் சுமந்திருந்த முஸ்லிம்களுக்கு எதிராக இதைச் செய்வது அன்று எளிதானது தான்.
யாதவரும், ஜாட்டும், பட்டேலும், நாடாரும், தேவரும், தலித்தும், ஒவ்வொரு சாதியினரும் தம்மீது பிற சாதியின் மதச் சட்டம் திணிக்கப்பட்டால் பொங்கி எழுவார்கள். இதை நாடு தாங்காது. இதைக் கருத்தில் கொண்டே பொதுசிவில் சட்டம் பற்றி வெறும் அறிவுரையாக மட்டுமே கூறிவிட்டு அரசியல் நிர்ணய சபை ஒதுங்கிக் கொண்டது.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோதும் முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தமது மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது.
வெள்ளையர்களும், மொகலாய முஸ்லிம் மன்னர்களும் வழங்கிய தனி சிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும் கொந்தளிப்பும் ஏற்படும்.
மற்ற நாடுகளில் இப்படி தனியார் சட்டங்கள் உள்ளனவா என்று சிலர் கேட்கின்றனர்.
புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.
புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது.
கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.
சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் தனி சட்டம் இல்லை என்று சிலர் அறியமையால் கேள்வி எழுப்புகின்றனர்.
சவூதி அரேபியாவில் முஸ்லிம்களைத் தவிர யாரும் சொந்த நாட்டவர் அல்லர். பிழைக்கச் சென்றவர்கள் ஆவர். பிழைக்கச் சென்ற வெளிநாட்டவருக்கு எந்த நாடும் சொந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் சட்டத்தை வழங்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு பிழைக்க வந்தவர்கள் அல்லர். இந்துக்களைப் போல் குடிமக்களாவர். இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இக்கேள்வி எழாது.
அடுத்து தலாக் பற்றி மத்திய அரசுக்கு கடுகளவு அறிவும் இல்லை என்பதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை மூலம் இனம் காட்டிவிட்டது.
தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும்.
தலாக் என்பதை பாலின பாகுபாடு என்ற அடிப்படையிலும், இருபாலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையிலும் அணுக வேண்டுமாம்.
இஸ்லாத்தில் ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவு மத்திய அரசுக்கு இல்லை. இதைப் பின்னர் விரிவாக விளக்கியுள்ளோம்.
இந்து மதத்தில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லையே? இது பாலின பாகுபாடு இல்லையா? இதற்காக இந்துச் சட்டத்தை மத்திய அரசு திருத்துமா?
ஆணுடைய உணவுக்கு ஆண் பொறுப்பு. பெண்ணின் உணவுக்கு பெண் பொறுப்பு. எனவே கணவன் மனைவிக்கு செலவினம் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தையும் பாலின சமத்துவ அடிப்படையில் மத்திய அரசு அணுகுமா? இதுபோல் ஆயிரக்கணக்கான சட்டங்கள் உள்ளன. அவற்றில் பாலின சமத்துவம் பேச திராணியில்லாத மத்திய அரசு, விவாக ரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் போது பாலின சமத்துவம் என்று காரணம் காட்டுவது கெட்ட நோக்கம் கொண்டதாகும்.
நாட்டின் குடிமக்களின் குறிப்பிட்ட சாதியினர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் கேவலப்பட்டவர்கள் என்றும் ஆக்கப்பட்டுள்ளனரே இந்த மனிதகுல சமத்துவம் பற்றி மோடி அரசுக்கு அக்கறை இல்லை
இஸ்லாத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட தலாக் எனும் விவாகரத்து உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள குலா எனும் விவாகரத்து உரிமையும் இரு பாலருக்கும் அதிக நன்மை தருவது என்பதை விளங்கிக் கொண்டால் தலாக்கும், குலாவும் இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டமாக இருக்கக் கூடாதா என்று பிறமத மக்களும் ஆசைப்படுவார்கள்.
திருக்குர்ஆனின் 2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை, பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறாகும்.
கணவனுக்கு மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்துச் செய்ய அனுமதி இல்லாவிட்டாலோ, அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும். இதனால் கீழ்க்காணும் தீமைகள் நிலவுவதை சமுதாயத்தில் நாம் காண்கிறோம்.
1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; அவளைப் பராமரிக்கவும் மாட்டான்.
2. அல்லது எளிதில் விவாகரத்து பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
3. அல்லது மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டுத் தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடித் தப்பித்துக் கொள்வான்.
இஸ்லாம் அல்லாத மதங்களில் விவாகரத்தை அனுமதிக்காததாலும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருப்பதாலும், நீதிமன்றங்கள் வழியாகவே விவாரத்து பெற முடியும் என்ற நிலை இருப்பதாலும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை நாம் கண்டு வருகிறோம்.
எனவே பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் இஸ்லாம் எளிதாக்கியிருக்கிறது.
விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.
முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.
அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.
அதுவும் பயன் தராதபோது இலேசாக அடித்துத் திருத்த வேண்டும்.
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.
இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
“உன்னை விவாகரத்துச் செய்கிறேன்” என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பின் பெண்களுக்குப் பாதுகாப்புத் தொகை வழங்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளதால் அதைத் தீர்மானித்து பெற்றுத் தருவதற்கேற்ப ஜமாஅத்தினர் முன்னிலையில் இதை உறுதி செய்ய வேண்டும்.
வேறு எந்தச் சடங்குகளும் இல்லை.
விவாகரத்துச் செய்திட ஒவ்வொரு கணவனுக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் திருமண உறவு அடியோடு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க : திருக்குர்ஆன் 65:4)
இந்தக் காலக்கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
முதல் தலாக் கூறி இருவரும் சேர்ந்து கொண்ட பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.
முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அந்தக் காலக்கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும்போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இதுதான் இறுதி வாய்ப்பாகும்.
மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.
ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை முறைப்படி விவாகரத்துச் செய்துவிட்டால் முதல் கணவன் மறுபடியும் அவளது சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
(திரும்பவும் அழைத்துக் கொள்ளத்தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான் என்று கூறும் 2:229 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு தடவைதான் விவாகரத்து நிகழ்ந்துள்ளது. ஒரு தடவை விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அதுபோல் இப்போதும் செய்து கொள்ளலாம்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 2932, 2933, 2934
ஒரு நேரத்தில் கூறப்பட்ட மூன்று தலாக் மூன்று தலாக்காகவே கருதப்படுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.
விவாகரத்துச் செய்த உடன் மனைவியை ஆதரவற்ற நிலையில் விட்டு விடக் கூடாது. அவளது எதிர்காலப் பாதுகாப்புக்காக போதுமான பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும். இதைச் செய்து கொடுப்பது ஜமாஅத்தார்களின் கடமையாகும்.
இது ஆண்கள் விவாகரத்துச் செய்வது குறித்த சட்டமாகும். விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
நூல் : புகாரீ 5273, 5275, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த பெண்களுக்கான விவாகரத்து நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து அவள் பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும். திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும். இதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவர்களுக்குத் தான் நல்லது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின் அதிகச் சிரமத்துக்கு பெண்களே ஆளாவதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வரக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் பெண்களுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே பெண்களுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழியை உலகில் எங்குமே காணமுடியாது. இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியுள்ளனர்.
திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே (4:21) என்றும்
கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (2:228) என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்படாவிட்டால் தீய விளைவுகள் ஏற்படுவது போல் பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படாவிட்டாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
விஷம் கொடுத்துக் கணவரைக் கொல்கிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவேதான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது. இதை 2:228-232 ஆகிய வசனங்களில் காணலாம்.
முஸ்லிம்களாகிய நாங்கள் உரத்துச் சொல்கிறோம். நெஞ்சுயர்த்தி சொல்கிறோம்:
அற்புதமான விவாகரத்துச் சட்டம் இஸ்லாத்தில் வழங்கப்பட்டு இருக்கும் போது அதை ரத்து செய்து விவாக ரத்துக்காக நீதிமன்றங்களுக்கு ஆண்டுக்கணக்கில் அலைய நாங்கள் தயாராக இல்லை.
விவாகரத்துக்காக காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்க நாங்கள் தயாராக இல்லை. கள்ளக் காதல் கொலைகள் எங்க்க் சமுதாயத்திலும் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
எவ்விதச் செலவும் இல்லாமல் ஜமாஅத்துகள் முன்னிலையில் எளிதாக மறுவாழ்வை அமைக்க வழி இருக்கும் போது எங்களின் பொருதாரத்தை வழக்குக்காகவும், வழக்கறிஞருக்காகவும் வாரி இறைத்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்க நாங்கள் தயாராக இல்லை. (சில விவாகரத்து வழக்குகளில் 70 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு அளிக்கப்பட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது.)
விவாகரத்து பெறுவதற்காக குடும்ப ரகசியங்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தி அவமானப்பட நாங்கள் தயாராக இல்லை.
எனவே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எங்களின் எளிமையான சட்ட உரிமை பறிக்கப்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
இஸ்லாம் எங்களைப் படைத்த இறைவனின் மார்க்கம். அதில் குறைமதி உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட யாரும் கை வைக்க அனுமதிக்க மாட்டோம்.