இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.
மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார். ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர். இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன. அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ
அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார். அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார். இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு) அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ