ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

– எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம்.

அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.

இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும்.

நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே நமக்கு ஒன்று திரண்டு நிற்கும்.  ஏராளமானஇடங்களில் இவ்வாறு ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன? இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்வது? இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை இக்கட்டுரை மூலம் காண்போம்.

ஊர் எதிர்ப்பும் பின்னணியும்

மார்க்கத்தைத் தூய முறையில் பின்பற்றும் போது, சில ஊர்களில் மக்கள் திரளாக வந்து எதிர்க்கிறார்கள். மார்க்க விளக்கக் கூட்டத்தைக் கூட நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். இப்படிக் கூட்டமாக திரண்டுவருபவர்களுக்கு பின்னணியில் சில நபர்கள் குள்ள நரிகளாக ஒளிந்து இருக்கிறார்கள். குறிப்பாக, மக்களை வைத்து ஆதாயம் அடைபவர்கள், பேருக்கும், புகழுக்கும் ஏங்குபவர்கள் இதுபோன்றஇடையூறுகளுக்குத் தூபம் போடுகிறார்கள்.

இன்றையச் சூழலில் மட்டுமல்ல, நபிமார்களின் காலம்தொட்டு இதுபோன்ற நபர்கள் இருந்துள் ளார்கள். சத்தியம் வென்றால், “அனைவரும் சமம் எனும் சித்தாந்தம் மேலோங்கும்; சுயநலனுக்காக மக்களைஏமாற்ற இயலாது” என்பதால், இவர்கள் தான் முதல் எதிர்ப்பைக் கிளப்புகிறார்கள். காசு, பணம் இருப்பதாலும், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் மக்கள் இருப்பதாலும் அதிகமாக ஆட்டம் போடுகிறார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் “எதைக் கொடுத்து அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்” என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. “நாங்கள் அதிகமான பொருட் செல்வமும்  மக்கட் செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர்” என்றும் அவர்கள் கூறினர். “என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவழங்கு கிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமா னோர் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(திருக்குர்ஆன் 34:35, 36)

ஊராரின் எதிர்ப்புக்கு காரணம்

தவ்ஹீது பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த ஊர்மக்கள் ஏன் திரள்கிறார்கள் என்பதற்கும் திருக்குர்ஆன் பதில் தருகிறது. அசத்தியவாதிகள் முன்னோர்களின் பெயரைச் சொல்லிச் சொல்லியே தங்களின் வழிகெட்டகாரியங்கள் சரியென வாதிடுவார்கள்; தங்களின் தப்புகளை நியாயப் படுத்துவார்கள். இன்றும் தவ்ஹீதுக்கு எதிராகக் கோஷமிடும் ஆட்கள், இவ்வாறே வாதிடுவதையும் மற்றவர் களை மூளைச் சலவைசெய்வதையும் பார்க்கிறோம்.

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்” என்றுஅவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர் களை எதில் கண்டீர்களோ அதை விட நேர் வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! “எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே” என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 43:23

மூதாதையர்கள் மீது குருட்டுத் தனமான பாசமும் கண்மூடித்தனமான பக்தியும் வைத்திருக்கும் நபர்களை இவர்கள் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே தான் இவர்களின் பேச்சினை நம்பிக்கொண்டு, “எங்களுடைய முன்னோர்களை மட்டம் தட்டுகிறீகள்; கேவலப் படுத்துகிறீர்கள், அவர்களின் மார்க்க வழிமுறைகளை வழிகேடு என்கிறீர்கள்; அவற்றைப் புறக்கணிக்கிறீர்கள்,” என்று பாமர மக்களும்ஒன்றும் புரியாமல் நம்மிடம் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்.

இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம்.அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

திருக்குர்ஆன் 6:123

”இந்தத் தவ்ஹீத்காரர்களை வளர விட்டால் மற்றவர்கள் முன் நீங்கள் செல்லாக் காசாக ஆகிவிடுவீர்கள். அவர்கள் மேலோங்கி விடுவார்கள். ஊரை இரண்டாக ஆக்கிவிடுவார்கள். கடைசியில், உங்களை ஊரைவிட்டும் துரத்தி விடுவார்கள்” என்று ஊளையிட்டும் உளறிக் கொட்டியும் பொது மக்களிடம் ஊர்வெறியைத் தூண்டுகிறார்கள். அழைப்புப் பணிக்கு எதிராக அடுத்தவர்களை உசுப்பேற்றி விடும் கயவர்கள்ஃபிர்அவ்னின் அடியாட்களைப் போன்றவர்கள். அன்று அவர்கள் செய்த அதே வேலையை இன்று இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் என்பதைப் பின்வரும் வசனம் விளக்குகிறது.

“இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர் ஆன் 7:109, 110

ஊர் வெறியும்ஊர் நீக்கமும்

நாம் மட்டுமின்றி அனைவரும் மறுமையில் வெற்றி பெற வேண்டும் எனும் சிறந்த நோக்கத்தோடு செயல்படுகிறோம். பல்வேறு சிக்கல்கள் சிரமங்களுக்கு மத்தியில் சிறிதும் தளராமல், தயங்காமல் சத்தியத்தைமுன்வைக்கிறோம். இதனை உரிய பதிலோடு எதிர்கொள்ள இயலாமல், பொறுத்துக் கொள்ளாமல், நம்மை ஊரிலிருந்து விரட்டுவதாக வெளியேற்றுவதாக மிரட்டுகிறார்கள். அல்லது ஊரை விட்டும் ஒதுக்கிவைப்பதாகப் பயமுறுத்துகிறார்கள்.

இவ்வாறு தான், காலந்தோறும் அசத்தியவாதிகள் சத்தியவாதிகளிடம் சிறு பிள்ளைத்தனமாக பூச்சாண்டி காட்டி வருகிறார்கள். இந்த ஊர் நீக்க மிரட்டல் என்பது இவர்களிடம் மார்க்கப் பற்று முனை மழுங்கிப்போய் விட்டதின் அடையாளம் என்பதே உண்மை.

“ஷுஐபே! உம்மையும், உம்மோடு நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்று வோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று அவரது சமுதாயத்தில் கர்வம்கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.

திருக்குர்ஆன் 7:88

முஹம்மது நபியவர்களை விடுத்து முன்னோர்களை, இமாம்களை மார்க்க வழிகாட்டியாக ஏற்று வாழ்பவர்கள், தவ்ஹீத்வாதிகளுக்கு வீடோ கடையோ வாடகைக்கு விட வேண்டாம் என்று அறிவிக்கிறார்கள்.அவர்களைச் சார்ந்தவர்கள் இறந்தால் மையவாடியில் இடம் கொடுக்காதீர்கள் என்று ஊர் ஜமாஅத் மூலம் எச்சரிக்கிறார்கள். இதைக் கேட்டு ஏகத்துவச் சொந்தங்களுக்குச் தடுமாற்றம் வந்தது கிடையாது;இனிமேலும் வந்து விடக் கூடாது. மார்க்க வரம்புகளைக் கண்டு கொள்ளாமல் ஊரோடு ஒத்துப் போனால் மட்டுமே, நாமும் வசதி வாய்ப்போடு இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது.

(ஏக இறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகள். பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் இது கெட்டது.

திருக்குர்ஆன் 3:196, 197

ஊரை விடவும் உண்மையே முக்கியம்

சுலைமான் நபி காலத்தில், ஸபா எனும் நாட்டினை ஒரு அரசி ஆட்சி செய்து வந்தாள். அவளும் மக்களும் சூரியனை வணங்குகிறார்கள் எனும் செய்தி “ஹுத் ஹுத்’ எனும் பறவை மூலம் சுலைமான் நபிக்குத்தெரிய வந்தது.

அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழுமாறும் தூதராகிய தமக்குக் கட்டுப்படுமாறும் அரசிக்கு சுலைமான் நபி கடிதம் அனுப்பினார்கள். அந்த அரசி மக்களிடம் ஆலோசனை செய்கிறாள். நம்மிடம் வலிமைஇருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனாலும் அரசிக்குத் தயக்கம். இந்தக் கடிதம் எழுதியது, நம்மிடம் பெரும் செல்வத்தைப் பெறுவதற்காகவா அல்லது வேறு எதற்காக என்று அறிந்துகொள்ள அன்பளிப்பை அனுப்பி வைக்கிறாள். அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சி இதோ…

ஸுலைமானிடம் (தூதுவர்) வந்த போது “செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களேமகிழ்ச்சியடையுங்கள்!” என்றார். “அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களைவெளியேற்றுவோம்” (என்றும் கூறினார்).

“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார். “உங்கள் இடத்திருந்து நீங்கள்எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டுவருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.

தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர்தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். “அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா?கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்” என்றார். அவள் வந்த போது “உனது சிம்மாசனம் இப்படித் தான் இருக்குமா?” என்று கேட்கப்பட்டது. “அது போல் தான் இருக்கிறது” என்று அவள்கூறினாள். “இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம்” (என்று ஸுலைமான் கூறினார்).

அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது அவளைத் தடுத்தது. அவள் (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்தாள். “இம்மாளிகையில் நுழைவாயாக!” என்று அவளிடம்கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். “அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை” என்று அவள் கூறினாள். “நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்” என்று அவள் கூறினாள்.

திருக்குர்ஆன் 27:22-44

அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி அறிந்ததும் இஸ்லாத்தை தழுவிய அரசியிடம் நமக்குப் படிப்பினை இருக்கிறது. ஊர் மக்களின் கருத்துக்கும் நடைமுறைக்கும் மாற்றமாக சத்தியக் கருத்துகள் இருந்தாலும்அவற்றை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்கே முக்கியத்தும் தர வேண்டும். இந்தக் குணம் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ஆள்பவர்கள், ஜமாஅத் தலைவர்கள், ஊர்ப் பெரியவர்கள்போன்றவர் களுக்கும் அவசியம் வேண்டும்.

மார்க்கத்தை மறக்கடிக்கும் ஊர்ப்பற்று

நாம் வாழும் தெரு, ஊர், நாடு போன்றவற்றின் மீது பற்று வைப்பது குற்றம் இல்லை. அதன் மீது அக்கறை கொண்டு நலப்பணிகள் செய்வதும், அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும் நல்லதுதான்.அதேசமயம், அந்தப் பாசமும் பற்றும் மார்க்க வரம்புகளை மீறும் வகையில் இருந்துவிடக் கூடாது.

ஏகத்துவத்தை எதிர்ப்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப் பவர்கள் உட்பட அனைவரும் இதனை நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட எதுவும் முதன்மை நேசமாகஇருப்பது கூடாது. இங்கு, எதுவும் என்று குறிப்பிடுவதில் ஊரும் உள்ளடங்கும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது. 2.ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (16)

நம்முடைய ஊர் நிகழ்ச்சியில் நாம் பங்கெடுக்காமல், பங்களிப்பு கொடுக் காமல் இருக்கலாமா? என்று நினைத்துக் கொண்டு, மார்க்கத்திற்கு முரணான காரியங்களை ஆமோதிக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புத்தருகிறார்கள். இனியாவது, அவற்றை விட்டும் விலகி இருந்து, ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். ஒரு ஊரை வெறுப் பதும் நேசிப்பதும் மார்க்கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டும்என்பதை உணரட்டும்.

நாம் பிறந்த ஊராக இருப்பினும், முஃமினாக வாழ விடாமல் அடக்கி ஒடுக்கும் நிலை இருக்கலாம். முஸ்லிமாக வாழ முடியாவிட்டாலும் சரி, சொந்த ஊரில் தான் இருப்பேன் என்று வறட்டுப் பிடிவாதம்கொள்வது சரியல்ல. இதனை ஹிஜ்ரத் தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது…..

…..நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) “ஸாஉ’, “முத்’துஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பாக்கியம் புரிவாயாக!  இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை “ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!” என்றுபிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய்நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) “புத்ஹான்’ எனும் ஓடையில்  மாசடைந்த தண்ணீர்ஓடிக்கொண்டிருந்தது!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 188