உளூவின் சட்டங்கள்

உளூ இல்லாமல் தொழுகை  இல்லை 

உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 135, முஸ்லிம் 330


நிய்யத் எனும் எண்ணம்

அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தேஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத் என்பதை முஸ்ம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

முன் கைகளைக் கழுவுதல்

உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்.


… ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
நூல்: நஸயீ 147

வாயையும்மூக்கையும் சுத்தம் செய்தல்

இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும்மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்துமூக்கையும் சுத்தம் செய்தார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது. 
நூல்: புகாரீ 160, 164

வாய் கொப்புளிப்பதற்கும்மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும்மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) இப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்‘ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140

ஒரு கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்துமூக்கையும் சீந்தினார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.

நூல்: புகாரீ 160, 164


அலீ (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச் செய்துவாய்கொப்பளித்துமூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி,இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் இது தான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையாகும்‘ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்து கைர்
நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ 696

முகத்தைக் கழுவுதல்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். (அல்குர்ஆன் 5:6)

இரு கைகளால் கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஒரு கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: புகாரீ 140

ஒரு கையால் கழுவுதல்

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போதுதமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186

தாடியைக் கோதிக் கழுவுதல்

தாடி வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24779

இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்

முகத்தைக் கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போதுமுகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160

முகம்கைகால்களைச் சிறப்பாகக் கழுவுதல்

முகத்தைக் கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும்கைகளைக் கழுவும் போது முழங்கை வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம் இல்லை.

உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம்கைகால்கள் வெண்மையானவர்கள்‘ என்று அழைக்கப்படுவார்கள். யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362 எனவே முகம்கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.

தலைக்கு மஸஹ் செய்தல்

இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போதுதம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டு சென்று பிறகு அப்படியே எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346

இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப் போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.

தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும்தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.



எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?

தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போதுகையை (பாத்திரத்தில்) நுழைத்து இரு கைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் கொண்டு வந்து பின்னர் பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை செய்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186

நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: நஸயீ 98

காதுகளுக்கு மஸஹ் செய்தல்

தலைக்கு மஸஹ் செய்யும் போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும்தமது ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும்கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: நஸயீ 101

பிடரியில் மஸஹ் செய்ய வேண்டுமா?

தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.

இரண்டு கால்களையும் கழுவுதல்

இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும்பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்
நூல்: புகாரீ 140

கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போதுஇரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160

உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச் செய்யுங்கள். குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான்‘ என்று நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்‘ என்றார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸியாத்
நூல்: புகாரீ 165

எத்தனை தடவை கழுவ வேண்டும்?

தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தடவையோஅல்லது இரண்டிரண்டு தடவையோஅல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).
நூல்: புகாரீ 157

நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரீ 158

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும் போதுதமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160

எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும்இரண்டு தடவை கழுவுவதும்மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும்விருப்பத்திற்கும் ஏற்ப எதை வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.

மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது

உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம் என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்வரம்பு மீறி விட்டார்அநியாயம் செய்து விட்டார்‘ எனக் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அம்ர் பின் ஷுஐப் (ரலி)
நூல்கள்: நஸயீ 140, அஹ்மத் 6397

வரிசையாகச் செய்தல்

மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓதுவது நபிவழியாகும்.

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

அல்லது

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 345

ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை


புகைப்படங்கள் : www.islam1.org

நூல் : தொழுகையின் சட்டங்கள்
ஆசிரியர் : எம்.ஐ.சுலைமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.