TNTJ மற்றும் SDPI கள வேலைகளை (FIELD WORK) சிறப்பாக செய்கிறது. உண்மையா?

கேள்வி sdpi and tntj Tougher in filed work in Muslim community? Yes or no
தமிழாக்கம் : முஸ்லிம் சமூதாயத்தில் TNTJ மற்றும் SDPI கள வேலைகளை (FIELD WORK) சிறப்பாக செய்கிறது. உண்மையா இல்லையா ?

– Haji Mohamed, India

 

 
பதில் இந்தக் கேள்வி மிகவும் விரிவாக அலசப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது தமிழகத்தில் பல இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இயங்கக் கூடிய இயக்கங்கள் பலவும் நாங்கள் இஸ்லாமியர்களுக்காக இயங்குகிறோம் என்றுதான் தங்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

இஸ்லாமியர்களுக்காக இயங்குவதாக தங்களை சொல்லிக் கொள்பவர்கள் முதலில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பிரகாரம் வாழக்கூடியவர்களாகவும், இஸ்லாமிய சட்டங்களின் படி தங்கள் இயக்கத்தை வழி நடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

 

இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தை முக்கியத்துவப் படுத்துவதைப் போல் சமுதாய சேவைகளையும் வலியுறுத்தக் கூடிய ஒரு மார்க்கமாகும்.

 

 

மார்க்கப் பிரச்சாரம் மற்றும் சமுதாய சேவைகளைப் பொருத்த மட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில அளவில் முதன்மை இயக்கமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

 

 

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் அவை இஸ்லாமிய இயக்கம் என்று தங்களை காட்டிக் கொண்டால் முதலாவதாக இஸ்லாமிய நெறிமுறைகள் அவர்களிடம் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். SDPI என்ற இயக்கத்தைப் பொருத்தவரை அவர்களுக்கும் இஸ்லாமிய வரை முறைகளுக்கும் தொடர்பில்லை.

 

 

இயக்கம் நடத்த வேண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் அவ்வளவுதான் சுறுக்கமாக சொன்னால் தமுமுக பாகம் இரண்டு என்று சொல்ல முடியும்.

 

 

இவர்களின் சமுதாய சேவைகளைப் பொருத்த வரையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதையும் இவர்கள் சாதித்துவிடவில்லை.

 

 

இவர்களை விட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் இயங்கும் சிறு அமைப்புக்களே நிறைய சேவைகளை செய்யத்தான் செய்கிறார்கள்.

 

 

சுதந்திர தினத்தில் அணி வகுப்பு என்ற பெயரில் இவர்கள் காட்டும் பில்டப்தான் மக்கள் மத்தியில் இவர்கள் பெரிய இயக்கம் (?) ஒரு தோற்றத்தை உண்டாக்கியுள்ளது. மற்ற படி இவர்களுக்கும் சமுதாய சேவைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 

 

இவர்கள் செய்த பெரிய சாதனை ஆங்கில எழுத்தில் ஒரு எழுத்து விடாமல் அனைத்து எழுத்தின் பேரிலும் இயக்கங்களை ஆரம்பித்தது தான்.

 

 

இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு இயக்கமானாலும் மக்கள் மத்தியில் நற் பெயரையும், மாற்று சமுதாயத்திடத்தில் நற்பெயரையும் பெற்றுக் கொண்டால் தான் தங்கள் சமுதாய சேவையின் வீரியத்தை வெளிக்காட்ட முடியும்.

 

 

இவர்களைப் பொருத்தவரையில் மற்ற மதங்களில் உள்ள அடிதடி இயக்கத்தைப் போல் இஸ்லாமியர்களின் அடிதடி இயக்கம் என்ற பெயர்தான் இவர்கள் சம்பாதித்துக் கொண்ட மிகப் பெரிய சொத்து.

 

 

ஆக இவர்களின் சமுதாய சேவை எந்த விதத்திலும் மெச்சத் தக்க ஒன்றல்ல.

 

இவர்களைப் பற்றிய மார்க்கம் மற்றும் சமுதாய நிலைபாட்டின் மேலதிக விபரத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை நன்கு படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

கொள்கை இல்லாக் கூட்டம்

 

பொதுவாக எந்த ஒரு இயக்கமானாலும் அவர்களுக்கென்று ஒரு கொள்கை, கோட்பாடு, இலட்சியம் இருக்க வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் கொள்கை என்பது உயிர் மூச்சைப் போன்று அவசியமானதாகும். கொள்கை இல்லாத இயக்கம் செத்த உடலைப் போன்றது.

 

அந்தக் கொள்கை சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருந்தாலும் நிலையான கொள்கை இல்லையென்றால் எவராலும் முறையாக இயக்கம் நடத்த முடியாது. இத்தகையவர்கள் இயக்கம், இயக்கம் என்று எவ்வளவு கத்தினாலும் இயக்கத்தின் பெயரால் ஆதாயம் தேட நினைக்கும் கொள்கையற்ற கோமாளிகள் என்றே இவர்களைக் கூற முடியும்.

 

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தன்னை ஒரு இயக்கம் என்று கூறி வருகின்றது. ஆனால் இவர்களுக்கென்று நிலையான எந்தக் கொள்கையும் கிடையாது. கொள்கையற்ற கூட்டத்துக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்பது சமீபத்தில் இவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு. இதற்கு முன்பே இவர்கள் பல்வேறு பெயர்களில் பல இயக்கங்களாக இயங்கி வருகின்றனர்.

 

இவர்கள் மற்றவர்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தான் முதலில் இயக்கத்தைத் துவங்கினார்கள். ஜனநாயகம் என்பது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும். கொடி பிடிப்பதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் தேர்தலில் ஓட்டுப் போடுவதும் கூடாது. மொத்தத்தில் இந்திய அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்வது மார்க்கத்திற்கு விரோதமானது என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்துவந்தனர். இந்தக் கொள்கையை நோக்கி மக்களை அழைத்தனர்.

 

குஜராத் கலவரம் போன்ற, நாட்டில் நடந்த கலவரங்களை எடுத்துக் கூறி மக்களிடையே இனவெறியை ஏற்படுத்த முயற்சித்தனர். தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்கு இந்தக் கலவரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

 

ஆனால் இவர்களின் இக்கொள்கை முட்டாள்தனமானது என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டனர். இவர்களின் வழிகெட்ட இக்கொள்கைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால் இயக்கம் வளரவில்லை.

 

எனவே தனது கொள்கையை அப்படியே மாற்றி விட்டனர். இப்போது ஜனநாயகம் கூடும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கொடி தூக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு கொடிக்கு சல்யூட் அடிக்கின்றார்கள். ஓட்டுப் போடுவது கூடாது என்று சொன்னவர்கள் இன்றைக்கு “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்என்று ஓட்டுப் பொறுக்க ஆரம்பித்து விட்டனர்.

 

தனது கொள்கை தவறு என்பதை உணர்ந்து பிறகு கொள்கையை மாற்றும் நிலை ஒரு இயக்கத்துக்கு ஏற்படலாம். சரியான கொள்கைக்காக மாற்றம் செய்வது தவறல்ல. இந்த மாற்றம் அவசியமானது.

 

ஆனால் இவ்வாறு தனது கொள்கையை ஒரு இயக்கம் மாற்றும் போது அதை முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தங்களது பழைய நிலைபாடு தவறானது என்று மக்களுக்கு முன்னால் ஒப்புக் கொள்ள வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான நியாயமான காரணங்களை மக்கள் மன்றத்தில் விவரிக்க வேண்டும்.

 

இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை மாற்றிய இவர்கள் இவற்றில் எதையும் செய்யவில்லை. மாறாக, கள்ளத்தனமாகக் கொள்கையை மாற்றிக் கொண்டனர்.

 

இன்றைக்கு மார்க்க விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சட்ட விஷயங்கள் மட்டுமல்லாமல் அடிப்படைக் கொள்கை விஷயத்திலும் கூட இந்த வேறுபாடு இருக்கின்றது.

 

உதாரணமாக மரணித்தவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் கருதும் பரேலேவிகள் இருக்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மட்டும் உரிய பின்பற்றுதல் என்ற அந்தஸ்தை, இமாம்களுக்கும் முன்னோர்களுக்கும் பெரியார்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் இருக்கின்றனர். இதே போன்று குர்ஆன் ஹதீஸ் மட்டுமின்றி நபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுவோரும் இருக்கின்றனர். குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் இஸ்லலாத்தின் அடிப்படை என்று நம்பும் ஏகத்துவவாதிகளும் இருக்கின்றனர்.

 

தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இயக்கமானாலும் மேற்கண்ட விஷயங்களில் இது தான் தனது நிலைபாடு என்று தெளிவாகக் கூறி விடுகின்றனர். ஆனால் பாப்புலர் பிரண்ட் இயக்கத்தினர் மட்டும் இதிலிருந்து வேறுபடுகின்றனர்.

 

மேற்கண்ட மாறுபட்ட கொள்கையில் இது தான் தனது கொள்கை என்று எந்த ஒரு கொள்கையையும் இவர்கள் குறிப்பிடுவதில்லை. இவற்றில் எதையாவது ஒன்றை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரச்சாரம் செய்வதில்லை.

 

கப்ரு வழிபாடு, சந்தனக்கூடு, கந்தூரி, மவ்லூது போன்ற இணை வைப்புகளை இவர்கள் சரி காண்பவர்களா? அல்லது எதிர்ப்பவர்களா? மத்ஹபுகளையும் பித்அத்களையும் ஏற்பார்களா? மறுப்பார்களா? இது போன்ற கேள்விகளுக்கு யாராலும் ஆதாரத்துடன் பதில் கூற முடியாது. ஏனென்றால் இவர்கள் எந்தக் கொள்கையும் இல்லாத கொள்கையற்ற கூட்டமாக இருக்கின்றனர்.

 

ஒவ்வொரு மனிதனின் மறுமை வாழ்வும் இந்த உலகத்தில் வாழும் போது அவன் கொண்டிருந்த கொள்கை அடிப்படையில் அது வெற்றியை அல்லது தோல்வியைப் பெற்றுத் தரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இவர்கள் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

 

தங்களுடைய இயக்கம் சமுதாயத்துக்கு நன்மை செய்யும் இயக்கம் என்று கூற இவர்களுக்கு அருகதை இல்லை. இஸ்லாமிய சமுதாய மக்களின் மறுமை வாழ்வை அழித்து நாசமாக்கக் கூடிய இணை வைப்புக் காரியங்களும் பித்அத்களும் இன்னும் பல தீமைகளும் மக்களிடையே பரவியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். இவையெல்லாம் இஸ்லாத்திற்குப் புறம்பானவை என்பதை இவர்களும் புரிந்து வைத்துள்ளனர்.

 

இந்தத் தவறுகளை எச்சரித்து மக்களை இவற்றிலிருந்து காக்கும் கடமை ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்துக்கும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. இத்தகையவர்கள் சமுதாய நலனுக்காகப் போராடக் கூடியவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்?

 

இத்தீமைகளுக்கு எதிராக நாம் பிரச்சாரம் செய்யும் வேளையில் நமது பிரச்சாரத்தை முடக்கும் வகையில் நமக்கெதிராகவும் இவர்கள் செயல்படுகின்றனர். “மென்மை வேண்டும்; நளினம் வேண்டும்என்று கூறி நமது வேகத்தைக் குறைக்க முயற்சிக்கின்றனர்.

 

நபிவழி அடிப்படையில் வாழ வேண்டும் என்று நாம் பிரச்சாரம் செய்து மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றோம். இவர்கள் சத்தியவான்கள் என்றால் இவ்விஷயத்தில் நம்மைப் போன்று இவர்களும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மௌனமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆனால் இவர்கள் நபிவழிக்கு எதிராக முட்டாள்தனமான வாதங்களை எழுப்பி மக்கள் காலா காலத்துக்கும் வழிகேட்டில் நீடித்திருக்கக் காரணமாக இருக்கின்றனர்.

 

சுன்னத் என்பது கடமையல்ல. ஒற்றுமை என்பது ஃபர்ழ். எனவே சுன்னத்தை விட்டால் பரவாயில்லை. தொழுகையை நபியவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் தொழுவது அவசியமில்லை. அவரவர் இஷ்டப்படி குருட்டாம் போக்கில் எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இதைத் தவறு என்று விமர்சனம் செய்யக் கூடாதுஎன்று வாதிடுகின்றனர்.

 

மக்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தி நபிவழியை ஓரங்கட்டுவதற்கு இது போன்ற கேடு கெட்ட வாதங்களை முன்வைக்க இவர்களின் நாவு கூசுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தை அழிவில் தள்ளுபவர்களே தவிர நன்மை செய்பவர்களாக இருக்க முடியாது.

 

நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

 

வீதி வீதியாக இறங்கி, பல்வேறு நலப்பணிகள் செய்வதாகக் கூறி மக்களிடம் வசூல் செய்கின்றனர். மக்களிடம் கணக்கில்லாமல் வசூல் செய்யும் இவர்கள் இதற்கான கணக்கு வழக்குகளை மக்களிடம் தெரிவிப்பதில்லை.

 

வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களில் ஒருவர் கையாடல் செய்தால் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைப்பதற்கு இது வழிகோலும். மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மக்கள் பணம் தனி நபர்களின் சுயலாபத்திற்காக சூறையாடப்படும். எனவே இவர்களைப் போன்று மக்களிடம் வசூலித்துவிட்டுக் கணக்கு காட்டாதவர்களை மக்கள் நம்பக் கூடாது.

 

வசூல் வேட்டையில் இறங்கும் இவர்கள் மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் காசு பணத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

 

நோன்புப் பெருநாளுக்கு முன் ஏழை எளியவர்களின் நலனுக்காக ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இந்தத் தர்மம் இரண்டரை கிலோ தானியம் அல்லது அதன் மதிப்புக்கு நிகரான கிரயமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

 

ஆனால் ஃபித்ராவை நாங்களும் வசூலிக்கிறோம் என்று கூறி களத்தில் இறங்கும் இவர்கள் இஸ்லாம் நிர்ணயித்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல் கைக்குக் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் நோன்புப் பெருநாள் தர்மமாக 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் கொடுத்தால் இது ஃபித்ரா கிடையாது என்று அவருக்கு விளக்கிக் கூறி அவர் முறையாக கொடுக்க வேண்டிய தொகையை வாங்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த 5 ரூபாயையும் 10 ரூபாயையும் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். இந்த அற்பத்தொகையைக் கொடுத்தவன் தான் ஃபித்ரா என்ற நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றிவிட்டதாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இப்படி காசு பணத்துக்காக மக்களின் மார்க்கத்துடன் விளையாடுகிறார்கள்.

 

குர்பானித் தோல்களை ஏழை எளியவர்களுக்கு தர்மமாக கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் குர்பானித் தோல்களைத் திரட்டி கல்வி நிறுவனங்களுக்காகவும் மற்ற மற்ற பணிகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு மக்களுடைய குர்பானி வணக்கத்தில் விளையாடும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

 

குர்பானி மட்டுமின்றி ஸகாத்தாக, தர்மமாக வழங்கப்படும் பொருட்களையும் குறிப்பிட்ட சிலருக்கே வழங்க வேண்டும் என்று மார்க்கம் விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. மார்க்க சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதைப் பேணக்கூடியவர்கள் தான் மக்களிடம் வசூலிக்கும் பொருட்களை அதற்குரியவர்களிடம் முறையாக ஒப்படைப்பார்கள். இவர்களுக்கு கொள்கையோ கோட்பாடோ சட்டதிட்டங்களோ எதுவும் கிடையாது. இப்படிப்பட்டவர்கள் மக்களிடம் வாங்கும் பொருட்களை அதற்குரிய பணிகளுக்கு எப்படி முறையாகச் செலவிடுவார்கள்? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

இயக்கத் தலைவர் ஒரு ஊருக்கு வந்தால் அவரை வரவேற்பதற்காக போஸ்டர்கள் அடித்து தனிமனித வழிபாட்டை அரங்கேற்றுகின்றனர். பல்வேறு வண்ணங்களில் தினம் தினம் ஏதேனும் ஒரு சுவரொட்டியை தமிழகம் முழுவதும் ஒட்டுகின்றனர். சுதந்திர தினக் கொண்டாட்டம், அணி வகுப்பு என்று லட்சக்கணக்கில் செலவு செய்து சுவர் விளம்பரங்கள் செய்கின்றனர். மாதம் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் இதற்காகச் செலவு செய்கின்றனர். இதற்கெல்லாம் வருமானம் என்ன? அதற்கான கணக்கு வழக்குகள் என்ன? யாருக்கும் தெரியாது. அந்த இயக்கத்தின் அடிமட்டத் தொண்டனுக்கோ அல்லது அடிமட்ட நிர்வாகிகளுக்கோ கூடத் தெரியாது.

 

மேலும் இவர்களின் இயக்க நிர்வாகிகள் ஜனநாயக முறையில்  தேர்வு செய்யப்படுவதில்லை. இயக்கத் தொண்டர்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு கதம்பமான முறையிலேயே நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்கும் உரிமையோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்கும் உரிமையோ இயக்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.  தனி மனிதருடைய சொத்தைப் போன்றே இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.

 

பதவிக்காகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தனக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்கின்றனர். இதனால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் இல்லை. குறிப்பிட்ட சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத் தங்கள் இயக்கத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

அரசியல் சாக்கடையில் இறங்கிய இவர்கள் மார்க்க நெறிமுறைகளை மீறத் தொடங்கியுள்ளனர். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தங்களது தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்ச்சிகளிலும் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடவிடுகின்றனர். பெரும் பெரும் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களைக் கொண்டு வந்து இசைக்கின்றனர்.

 

அனைத்து தரப்பு மக்களின் ஓட்டைப் பொறுக்குவதற்காக விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் போன்ற மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவற்றை ஆதரிக்கும் கேவலமான நிலைக்குச் சென்றுள்ளனர்.

 

கொடி வணக்கம் என்ற இணைவைப்பு

 

கொடிக்கு சல்யூட் அடிக்கும் மாற்று மதக்கலாச்சாரத்தை இவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ளனர். கொடிக்கு சல்யூட் அடிப்பது கொடி வணக்கம் என்று நடைமுறையில் கூறப்படுகின்றது. வணக்கமாகக் கருதப்படும் இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் எப்படி செய்ய முடியும்?

 

கொடி என்பது சாதாரண துணி. அதை மனிதன் தான் தயாரித்தான். தன் இயக்கத்துக்கு அடையாளமாக அதைப் பயன்படுத்தினால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் அதை இவர்கள் மனிதனை விட உயர்ந்த, மதிக்கத் தக்க பொருளாகப் பார்க்கின்றார்கள். எனவே தான் அதற்கு சல்யூட் அடிக்கின்றனர்.

 

கொடியை அதற்குரிய அந்தஸ்தில் வைக்காமல் மனிதனை விட உயர்ந்த நிலையில் வைக்கின்றனர். மனிதர்களை விட சிறப்பு பெறுவதற்கு அந்தக் கொடியில் அப்படி என்ன இருக்கின்றது? என்று பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்.

 

கல்லை, கல்லாகப் பார்க்காமல் தன்னை விட மேம்பட்டதாகப் பார்த்த காரணத்தால் தான் சிலை வழிபாடு வந்தது. இணை வைப்பும் மூட நம்பிக்கையும் பெருகுவதற்கு இதுவே காரணம். இஸ்லாம் எதை அழித்து ஒழிப்பதற்காக வந்ததோ அந்த அனாச்சாரங்களை முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றுகிறார்கள். முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

ஜிஹாத் கோஷம்

 

சரியான இஸ்லாமிய கொள்கையைக் கூறி இயக்கம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. மாறாக எந்த வழியில் சென்றால் இலகுவாக மக்களை இயக்கத்தில் சேர்க்க முடியுமோ அந்த வழி மார்க்கம் தடை செய்த வழியாக இருந்தாலும் அறிவார்ந்த வழியாக இல்லாவிட்டாலும் அதில் செல்லத் தயங்கமாட்டார்கள்.

 

ஒரு இஸ்லாமிய அரசாங்கம் நீதிக்காக நடத்தும் அறப்போருக்கு ஜிஹாத் என்று இஸ்லாம் கூறுகிறது. போர் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இஸ்லாமிய அரசின் கீழ் வாழ்பவர்கள் பின்வாங்காமல் போரில் கலந்துகொண்டு இஸ்லாமிய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. குர்ஆனும் ஹதீஸ்களும் இதைத் தான் ஜிஹாத் என்று கூறுகின்றன.

 

ஆனால் இவர்கள் தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக ஜிஹாதிற்குப் புதுமையான விளக்கத்தைக் கொடுத்து மார்க்கத்துடன் விளையாடுகின்றனர். இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை தற்போது இந்தியாவில் கொண்டுவர வேண்டும். இதற்காக இவர்களுடைய இயக்கத்தில் சேர்வது தான் ஜிஹாத். இந்த ஜிஹாதைத் தான் குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன என்று இறைவனுடைய பயம் இல்லாமல் கூறிவருகின்றனர்.

 

பொதுவாகப் போராடுவது, எதிர்ப்பது போன்ற குணங்கள் இயற்கையாகவே இளைஞர்களிடம் மிகைத்திருக்கும். இந்தப் பருவம் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட உணர்வுப்பூர்வமாகவே சிந்திக்கத் தூண்டும். இளைஞர்களிடம் உள்ள இந்த பலவீனத்தையும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இளைஞர்களிடையே இன வெறியை ஏற்படுத்துகின்றனர். தாங்கள் மட்டுமே வீரமாக மிகப்பெரிய இலட்சியத்திற்காகப் பாடுவதைப் போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த போலித் தோற்றத்தின் மூலம் தங்கள் இயக்கத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனர்.

 

இவர்கள் பல வருடங்களாக ஜிஹாத் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றனர். ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இவர்கள் எப்போது எங்கே யாருடன் ஜிஹாத் செய்தார்கள்? தாங்கள் செய்த ஜிஹாதுடைய பட்டியலைத் தர வேண்டும் என்று நாம் இவர்களை நோக்கி கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை.

 

தங்களுடைய திட்டங்கள், லட்சியங்கள், நோக்கங்கள் ஆகியவற்றைப் பகிரங்கமாக இவர்கள் மேடை போட்டு மக்களுக்கு விவரிக்கத் தைரியமற்றவர்கள். எனவே இரகசியமாகக் கூடிக் கூடி பேசிக் கொள்வார்கள். ஆனால் இந்த இரகசியப் பேச்சின் மூலம் இளைஞர்களை ஏமாற்றியதைத் தவிர இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை.

 

நாட்டில் நடந்த குஜராத் போன்ற கலவரங்களைப் பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் அந்தக் கலவரங்களை அடுத்து இவர்கள் செய்த சாதனைப் பட்டியலை இவர்களால் வெளியிட முடியுமா? கலவரத்தைத் தடுப்பதற்கு, முஸ்லிம்களைக் காப்பதற்கு இவர்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன? என்று கூற முடியுமா? இயக்கத்தை வளர்ப்பதை மட்டுமே முழு நோக்காகக் கொண்டு, பொய்யாகப் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றியது தான் இவர்கள் செய்த சாதனை.

 

தீவிரவாதச் செயலைத் தான் ஜிஹாத் என இஸ்லாம் குறிப்பிடுவதாக ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தவறாகச் சித்தரித்து வருகின்றன. மாற்று மதக் கொள்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஜிஹாத் என்றால் தீவிரவாதச் செயல் என்றே புரிந்து வைத்துள்ளனர். இந்தத் தவறான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களின் ஜிஹாத் கோஷம் அமைந்துள்ளது.

 

ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற வணக்கங்களைப் புரிவதும் பாவங்களைப் புரியாமல் ஒழுக்கமாக வாழ்வதும் அவனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. எனவே இந்த ஆன்மீக விஷயங்களில் ஒருவர், “நான் முறையாக நடப்பேன்என அல்லாஹ்விடம் மட்டுமே உறுதிமொழி அளிக்க முடியும். இதற்கு பைஅத் என்று இஸ்லாம் கூறுகின்றது.

 

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஒரே காரணத்துக்காக அல்லாஹ்விடம் செய்ய வேண்டிய இந்த உடன்படிக்கையை அவர்களிடம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிக்கிறான். காரணம் நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு உறுதிமொழி கொடுப்பது தன்னிடம் உறுதிமொழி அளிப்பதற்குச் சமமானது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

 

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அல்லாஹ் வழங்கிய இந்த அதிகாரத்தை இந்த இயக்கத்தினர் தங்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

 

ஆன்மீக விஷயங்களில் முறையாக நடக்க வேண்டும் என அப்பாவி இளைஞர்களிடம் வாக்குறுதி வாங்குகின்றனர். இவ்வாறு வாக்குறுதி வாங்குவதற்கு இவர்கள் என்ன நம்மைப் படைத்த இறைவனா? அல்லது அந்த இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களா?

 

தங்களிடம் பைஅத் செய்ய வேண்டும் என இவர்கள் கூறுவதற்குக் காரணம் தங்கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் தங்களை விட்டும் விலகிச் சென்று விடக் கூடாது என்பதற்காகத் தான். அதாவது நீ வாக்குறுதி தந்திருக்கின்றாய். இந்த வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்தால் இறைவனிடம் நீ பாவியாகிவிடுவாய் என்று அப்பாவிகளைப் பயமுறுத்தி தங்கள் இயக்கத்திலேயே காலகாலத்துக்கும் நீடிப்பதற்காக இந்த மாபாதகச் செயலை செய்கின்றனர்.

 

இயக்கத்தை வளர்ப்பதற்காக மார்க்கத்துடன் விளையாடுவதற்கும் இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்கள்.

 

ஒற்றுமை கோஷம்

 

நன்மையான விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். பாவமான காரியங்களில் ஒன்றுபடக்கூடாது என்று இஸ்லாம் ஒற்றுமையை வேறுபடுத்துகின்றது.

 

சமுதாயத் தீமைகளை நாம் கண்டிக்கும் போது அத்தீமைகளை ஆதரிப்பவர்கள் நம்மை எதிர்ப்பார்கள். தீமைகளை ஆதரிப்பவர்களும் அதை எதிர்பவர்களும் தனித்தனியே பிரிவார்கள். இந்தப் பிரிவை இஸ்லாம் வரவேற்கின்றது. இதற்கு மாற்றமாக தீமையில் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதைத் தான் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

 

ஆனால் இவர்கள் ஒற்றுமை விஷயத்தில் இஸ்லாம் கூறும் இந்த வித்தியாசத்தைக் கண்டு கொள்ளாமல் ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர். இந்த வாதத்தின் மூலம் சமூகத் தீமைகள் அழியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாக இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.

 

இவர்கள் இந்த கோஷத்தின் மூலம் மார்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதைத் தவிர எந்த நன்மையையும் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை.

 

ஒற்றுமை கோஷம் கேட்பதற்கு நன்றாகவும் பாமர மக்களை விரைவாகக் கவரக் கூடியதாகவும் இருப்பதால் இதையும் தங்களுடைய இயக்க வளர்ச்சிக்கு சாதமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

 

வாயளவில் தான் இவர்கள் ஒற்றுமையைப் பேசி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இதற்கு மாற்றமாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒற்றுமை கோஷத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மற்ற இயக்கத்தினர் ஒரு விஷயத்திற்காகப் போராட்டம் நடத்தும் போது அதில் தான் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமே தவிர இவர்கள் தனியாக தன் இயக்கத்தின் பெயரில் போராட்டம் நடத்துவது கூடாது.

 

தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிப்பது? என்ற பிரச்சனை வரும்போது இவர்கள் தனியொரு முடிவை எடுப்பது கூடாது. மாறாக மற்ற அமைப்பினர் எந்த முடிவை எடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக நடக்க வேண்டும்.

 

மொத்தத்தில் இவர்கள் தனியே இயக்கம் நடத்துவது கூடாது. தன் இயக்கத்தைக் களைத்துவிட்டு மற்ற ஏதாவது ஒரு இயக்கத்தின் கீழ் செயல்பட வேண்டும்.

 

ஆனால் இவர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து சாதனை படைத்து வருகின்றனர்.

 

அனைத்து விஷயங்களில் நமது ஜமாஅத் மற்ற இயக்கங்களை விட்டு வேறுபட்டு தனக்குரிய தூய்மையுடன் தனியே நிற்கின்றது. பிற இயக்கங்கள் செய்யக்கூடிய தவறுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயவு தாட்சணையின்றி மக்களிடம் அம்பலப்படுத்தி வருகின்றது.

 

எனவே இவர்களுக்கு நாம் தான் சிம்ம சொப்பனமாக, பெரும் தலைவலியாக இருக்கின்றோம். நம்மை ஒழித்துவிட்டால் இவர்களின் திட்டங்கள் நிறைவேறிவிடும் என்று நினைக்கின்றனர்.

 

சமீபத்தில் திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை. இதை மக்களும் அரசாங்கமும் தெளிவாக உணர்ந்துள்ளது. இது தான் உண்மை என்பதை இவர்களும் அறிந்தே வைத்துள்ளனர்.

 

ஆனால் எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் அன்னியப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த இவர்கள் இந்தப் பிரச்சனையை பெரிய ஆயுதமாகக் கருதினர். தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அழிந்துவிடும். இதன் பிறகு நாம் மக்களை ஏய்த்துப் பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்தனர்.

 

தமிழகத்தில் பல பகுதிகளில் 19 அமைப்புகள் சேர்ந்து திருவிடைச்சேரி சம்பவத்தில் நமக்கு சம்பந்தம் இருப்பதாகவும் நம்மை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் எனவும் கோரி நீண்ட போஸ்டர்களை ஒட்டினர்.

 

இந்த 19 அமைப்புகளில் ஓரிரு அமைப்புகளைத் தவிர மீதமுள்ளவை அனைத்தும் இதுநாள் வரை மக்களுக்கு அறிமுகமில்லாத லட்டர் பேடு அமைப்புகளாகும்.

 

இந்தக் காரியத்தை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் தான் முன் நின்று முழு முயற்சியுடன் செய்தனர். ஆனால் இறைவன் இவர்களுக்கு இந்த முயற்சியில் படு தோல்வியையும் கேவலத்தையும் வழங்கினான். இந்த போஸ்டர்கள் மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

ஒற்றுமை கோஷம் போடும் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் மட்டும் தான் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.

 

சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள்

 

விபச்சாரம், திருட்டு, கொலை போன்ற குற்றங்களுக்குத் தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் தான் இந்த குற்றவியல் தண்டனைகளை செயல்படுத்த முடியும். தனி நபர்களோ தனி குழுக்களோ இதைச் செயல்படுத்த முடியாது.

 

அதிகாரம் இல்லாதவர்கள் குற்றவாளிகளிடம் அவர்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கலாம். அல்லது காவல் துறையிடம் அவர்களை ஒப்படைக்கலாம். இதைத் தவிர அவர்களை அடிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

 

ஆனால் இவர்கள் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு தவறு செய்பவர்களைத் தண்டித்து வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகள் என்று கருதும் நபர்கள் உண்மையில் குற்றம் செய்தவர்களா? என்பது ஒருபுறம் இருக்க, தவறு செய்யும் அனைவரையும் இவர்கள் தண்டிப்பதில்லை. ஏன் இவர்களின் இயக்கத்தில் இருந்து கொண்டே மார்க்கத்திற்கு மாற்றமான எத்தனையோ காரியங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ இல்லை.

 

இந்த விஷயத்திலும் நேர்மையான போக்கை இவர்களிடம் காண முடியவில்லை. இவ்வாறு தண்டிப்பதற்கு விதிமுறைகளையோ ஒழுங்கு முறைகளையோ இவர்கள் கடைபிடிப்பதில்லை. திடீரென ஒருவனைத் தாக்க வேண்டும் என்று நாடினால் தாக்கி விடுவார்கள்.

 

இந்தக் காரியத்தில் ஈடுபடும் இவர்கள் இதன் பிறகு வரும் விளைவுகைள எதிர்கொள்ளும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ பிரச்சனை வரும் போது ஓடி ஒளியும் கோழைகளாக உள்ளனர்.

 

ஒருவனை அடிக்க வேண்டியது. அவன் காவல் துறையிடம் சென்று புகார் கொடுத்து காவல் துறை வந்தால் ஊரை விட்டும் ஓடிவிடுவது. காவல் துறையினர் பிரச்சனையில் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களை இழுத்துச் செல்வார்கள்; தரக்குறைவாகப் பேசுவார்கள்; தண்டனை கொடுப்பார்கள். இப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் இருக்கின்றனர்.

 

இவர்கள் தான் சமுதாயப் பாதுகாவலர்களாம். இந்தக் கோழைகள் தங்களுக்கு ஜிஹாதிகள் என்று வேறு வெட்கமில்லாமல் கூறிக் கொள்கின்றனர். 

 

ஒரு பிரச்சனை ஏற்படும் போது சமுதாயத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பின் விளைவுகளை யோசித்து ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரச்சனைகளை அணுகுகின்றனர்.

 

இவர்களின் அவசர புத்தியால் ஒரு சிறிய பிரச்சனை பூதாகரமாகி பெரும் கலவரமாக உருவெடுக்கின்றது. இதன் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர்.

 

சத்தியவாதிகள் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துக்களை வரவேற்று அவற்றுக்குச் சரியான விளக்கத்தை அளிப்பார்கள். கருத்தை கருத்தால் வெல்வார்கள். அசத்தியவாதிகள் தங்களது வழிகேட்டை நியாயப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். இவர்களைப் பற்றி பிறர் விமர்சனம் செய்யும் போது அதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் அடிதடியில் இறங்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இவர்களுக்கு இல்லை. எனவே அடிதடியில் இறங்குவார்கள். தோல்வியைத் தழுவார்கள்.

 

நமது மார்க்க அழைப்பாளர்கள் இவர்களின் சறுகல்களையும் வழிகேடுகளையும் மக்களுக்கு விளக்கும் போது இவர்கள் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதை விட்டுவிட்டு நமது அழைப்பாளர்களைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

 

இந்தத் தாக்குதலில் கூட இவர்கள் கோழைகள் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். மார்க்க சம்பந்தமாக கேள்வி கேட்பதாக நமது அழைப்பாளரை அழைத்துச் சென்று கூட்டாகப் பலர் சேர்ந்து கொண்டு தனி நபரை ஆயுதங்களால் தாக்குகிறார்கள் என்றால் இவர்களின் கோழைத் தனத்தை எப்படி வர்ணிப்பது என்று நமக்குத் தெரியவில்லை.

 

இவர்களின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொண்டு இவர்களின் இயக்கத்திலிருந்து பலர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களை இவர்கள் விட்டுவிடுவதில்லை. மீண்டும் தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். இதற்குக் கட்டுப்பட மறுப்பவரை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்வதற்குக் கூட இவர்கள் தயங்குவதில்லை.

 

ஜிஹாத் செய்ய வேண்டும் என்று பேசும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்று பார்த்தால் முஸ்லிம்களைத் தான் இவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதைப் புரிய முடிகின்றது. தங்களுக்கு எதிராகச் செயல்படுவர் முஸ்லிமாக இருந்தாலும் பராவாயில்லை, அவரை அழிக்க யோசிக்க மாட்டார்கள்.

 

இவர்களின் இதே சிந்தனையில் ஊறிப் போனவர்கள் இன்றைக்கு பாகிஸ்தானிலும் இன்னும் பிற நாடுகளிலும் தாங்கள் ஜிஹாத் செய்வதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம்களையே கொன்று குவித்து வருகின்றனர்.

 

இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு மார்க்கத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். “மார்க்கம் அவ்வாறு கூறவில்லை; இது பற்றி உண்மையை மக்களுக்கு விளக்க விவாதத்திற்கு வாருங்கள்என நாம் இவர்களுக்கு அழைப்பு விட்டால் அதிலும் தாங்கள் கோழைகள் என்பதை வெளிப்படுத்துகின்றனர்.

 

விவாதம் செய்யக்கூடாது என இஸ்லாம் கூறுவதாகப் பொய் கூறி விவாதத்துக்கு வர மறுக்கின்றனர்.

 

மனித குலத்துக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டைக் கொள்கையாகக் கொண்டவர்கள் மட்டுமே ஈருலகத்திலும் வெற்றி பெற முடியும்.

 

ஆனாôல் இவர்களோ இவ்விரண்டிலுள்ளவற்றில் எந்த அம்சம் இயக்கத்தை வளர்க்க உதவுமோ அவற்றை மட்டும் பேசுவார்கள். உதாரணமாக ஜிஹாத், பைஅத், ஒற்றுமை கோஷங்கள். இந்த ஓரிரு விஷயங்களைக் கூட இவர்கள் முறையாக சமுதாயத்துக்குக் கூறவில்லை. மாறாக இவற்றுக்குத் தவறான விளக்கங்களைக் கொடுத்து இஸ்லாத்தை களங்கப்டுத்த முயற்சிக்கின்றனர்.

 

குர்ஆன்  ஹதீஸ் ஆகிய இரண்டும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய ஏராளமான கடமைகளை கற்றுத் தருகின்றன. இவற்றில் எந்தக் கடமையை ஆற்றினால் மக்களிடம் எதிர்ப்பு வருமோ, ஆதரவு கிடைக்காதோ அது மாதிரியான விஷயங்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள்.

 

எனவே அறிவுச் சிந்தனை உள்ள யாரும் இந்த சந்தர்ப்பவாதிகளின் இயக்கத்தில் அங்கம் வகிக்க மாட்டார்கள். பலர் சிந்திக்கத் தொடங்கி இவர்களை விட்டு வெளியேறி தங்களை காத்துக் கொண்டுள்ளனர். சமுதாயத்துக்குப் பலனில்லாத, சமூகத்திற்குத் தீங்கிழைக்கக்கூடிய இந்த இயக்கத்தினரை இஸ்லாமிய சமூதாயம் முற்றிலுமாகப் புறக்கணிப்பது அவசியம்.

 

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.


– பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.