புத்தாண்டு கொண்டாடலாமா?

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.

– ஆன்லைன்பிஜே.காம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.