குஜராத் கலவரம்: “துணைநின்றார் மோடி”

குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

குஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.


இந்துக்கள் அச்சமயம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.மோடியின் உத்தரவை உயர் போலீஸ் அதிகாரிகள்கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் பட் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆமதாபாத் கொண்டுவருவதும், விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிப்பதும் ஆமதாபாத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அதை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறியபோதிலும், அவர் அதை நிராகரித்துவிட்டதாக பட் கூறியுள்ளார்.

மேலும் கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியதாக போலீஸ் அதிகாரி தனது மனுவில் கூறியுள்ளார்.இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தான் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக்குழு தனது கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் ண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.
நன்றி : BBC தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.