வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும் |
வரதட்சணைன் என்று நேரடியாகச் சொல்லித் தந்தால தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான்.
பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்எ ன்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்என்று கூறினார்கள். பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.
புஹாரி 6979
அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
25158حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَبَّادٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ لِخَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا فَافْعَلُوا فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَطْلَقُوهُ وَرَدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا رواه أحمد
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மக்காவாசிகள் கைதி(களாக இருந்த தங்களது உறவினர்)களுக்காக பிணைத் தொகையை அனுப்பிய போது ஸைனப் (ரலி) அவர்கள் (தனது கனவர்) அபுல் ஆஸ் அவர்களுக்காக செல்வத்தை பிணைத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். அச்செல்வத்துடன் அவர்களுடைய கழுத்து மாலை ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அம்மாலை (இதற்கு முன்பு) கதீஜா (ரலி) அவர்களிடம் இருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் அந்த மாலையுடன் ஸைனப் (ரலி) அவர்களை அபுல் ஆஸிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த மாலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தவுடன் கதீஜா (ரலி) அவர்களை நினைத்து கடுமையாக மனம் இளகினார்கள். மேலும் (நபித்தோழர்களிடம்) ஸைனபுக்குரிய கைதியை அவருக்காக நீங்கள் விடுதலை செய்து அவருக்குரிய (செல்வத்)தை அவரிடமே திருப்பி அனுப்பலாம் என நீங்கள் கருதினால் (அவ்வாறு செய்யுங்கள்) என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஆம் (அவ்வாறே செய்கிறோம்) என்றனர். ஸைனப் (ரலி) அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸிடம் உடன்படிக்கை எடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸாவையும் ஒரு அன்சாரித் தோழரையும் அனுப்பி நீங்கள் இருவரும் யஃஜஜ் என்ற பள்ளத்தாக்கில் இருங்கள். உங்களை ஸைனப் கடந்து சென்றால் அவரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
நூல் அஹ்மத் 25158
மகள் தன் தந்தையிடம் விரும்பியதைக் கேட்டுப் பெறுவதும் தறவல்ல.
2753حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ قَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا تَابَعَهُ أَصْبَغُ عَنْ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ رواه البخاري
“உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்” என்னும் (26:214) இறை வசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), “ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,)அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலி-)
நூல் : புகாரி (2753)
திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ நகையாகவோ பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.
மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் வரதட்சனையாகும்.
அன்பளிப்பு என்பது தந்தை தானாக விரும்பிக் கொடுப்பதாகும். அவர் விரும்பினால் கொடுப்பதற்கும் கொடுக்காமல் இருப்பதற்கும் உரிமை உள்ளது. எவ்வளவு அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்பதையும் தந்தையே தீர்மானிப்பார்.
உங்கள் மகளுக்கு நீங்கள் நகை போட வேண்டும். அந்த நகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால் இவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள் என்றால் இவள் நம்முடைய வீட்டுக்கு வர இருக்கின்றாள். இவள் அதிகமான நகையுடன் வந்தால் பிறகு அந்த நகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையே இதற்குக் காரணம். எனவே இது தந்தை மகளுக்கு கொடுப்பது என்ற போர்வையில் வாங்கப்படுகின்ற வரதட்சனையாகும்.மேலும் சீர் என்ற பெயரில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பொருட்களை வாங்கித் தருகின்றனர். இதுவும் வரதட்சனையாகும்.
நீங்கள் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பே அவருக்காக நகைகள் வாங்கிக் கொடுத்திருந்தால் அது உங்கள் மகளின் உடமையாக இருக்கும் வரை வரதட்சனையாக ஆகாது. உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுத்ததை திருமணத்தைக் காரணம் காட்டி மாப்பிள்ளை வீட்டார் உரிமை கொண்டாடினால் அது வரதட்சனையாகாது.
திருமணம் முடிந்து மருமகன் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆன பின் உறவினர் என்ற முறையில் அவருடைய முன்னேற்றத்துக்கு உதவினால் அதுவும் வரதட்சனையாகாது. திருமணம் செய்வதற்கு நேரடியான அல்லது மறைமுகமான நிர்பந்தனையாக பணமோ பொருளோ கேட்கப்பட்டால் அல்லது நாம் கொடுக்காவிட்டால் நம் மகளை நல்ல படி நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக கொடுத்தால் அது வரதட்சனையாக ஆகும். இது மிகவும் நுணுக்கமான விஷயம். கவனமாக இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் நிஜமான அன்பளிப்பும் பாவமாகத் தென்பட்டு விடும். அல்லது வரதட்சனையும் அன்பளிப்பாக கருதப்பட்டு விடும்.
நன்றி : ஆன்லைன்பி.ஜே.காம்