தஸ்பீஹ் என்பது நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணக்கம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா?அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்துலில்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 936
ஆனால் தஸ்பீஹ் செய்யும் விதத்தில் தான் குழப்பம் ஏற்படுகிறது.நமக்கு தெரிந்த வரையில் கை விரல்களை கொண்டும் ,விரலில் உள்ள கோடுகளை கொண்டும்,சிறு கற்களை கொண்டும்,தஸ்பீஹ் மணியை கொண்டும் தஸ்பேஹ் செய்யும் ஒருவித நவீன கருவியை கொண்டும் பல விதங்களில் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை தஸ்பீஹ் செய்து வருகிறார்கள்.
இது வரை மக்கள் பல விதங்களில் தஸ்பீஹ் செய்த முறைகளை பார்த்தோம்.பார்பவர்களுக்கு இது ஒரு விஷயமாக தோன்றினாலும்,அல்லாஹ்விடம் இது ஏற்றுக் கொள்ளப் படுமா என்று பார்க்க வேண்டும் ஏனென்றால் மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதரோ சொல்லாதது நமக்கு மார்க்கம் ஆகாது.
“செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)
தஸ்பீஹ் மணியை ஆதரவான வாதங்கள்
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: திர்மிதீ 3477
நபி (ஸல்) அவர்களின் மனைவி பேரீச்சம் பழகொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ய வில்லை என்ற காரணத்தினால் தஸ்பீஹ் மணி கூடும் என்று ஒரு வாதமும் சிலரால் வைக்கப் படுகிறது.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், “இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை” என்று குறை கூறியுள்ளார்கள்.
மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர். அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
இதைப் போன்று இன்னொரு செய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவள் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்…
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491
இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறியப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா?என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜ் மற்றும் தஹபீ ஆகியோர் இவரை யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது. தஸ்பீஹ் மணிக்கு எதிரான ஆதாரங்கள்
“உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யுஸைரா (ரலி), நூல்கள்: அஹ்மத் 25841, திர்மிதீ 3507
நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: நஸயீ 1331
நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக வழி காட்டி இருக்கும்போது அதில் மாற்றம் செய்வது தெளிவான வழிகேடாகும். ஹஜ் உம்ரா செல்பவர்கள் திரும்பி வரும்போது பல வண்ணங்களில் தஸ்பீஹ் மணிகளை வாங்கி வந்து தானும் தவறு செய்து மற்றவர்களையும் தவறு செய்ய தூண்டுகிறார்கள்.ஆகவே தஸ்பீஹ் மணியை புறக்கணியுங்கள்.மறுமையில் விரல்கள் தான் சாட்சி சொல்லும் என்ற அடிப்படையில் நபி (ஸல்) காட்டி தந்த வழி முறையில் விரல்களை கொண்டே தஸ்பீஹ் செய்வோம். – Mohamed Rafeek (Saudi Arabia)