இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி

 5283 حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ يَا عَبَّاسُ أَلَا تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ رَاجَعْتِهِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي قَالَ إِنَّمَا أَنَا أَشْفَعُ قَالَتْ لَا حَاجَةَ لِي فِيهِ رواه البخاري
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்போன்றுள்ளது. 

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள  கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (5283)
 

மார்க்கத்தின் அடிப்படைய ஆதாரங்கள் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளக்கும் ஹதீஸ் இது! மார்க்க விஷயத்தில் படைத்தவன் மட்டுமே கட்டளையிட முடியும் வேறு எவரும் கட்டளையிட முடியாது. அப்படி கட்டளையிட்டால் அதை ஏற்கத் தேவையில்லை என்பதையும் இச்சம்பவம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. முதலில் இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
 

பரீரா (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார்கள். அப்போது அவர்கள் முஃகீஸ் என்ற நபித்தோழரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்களும் அடிமையாகவே இருந்தார்கள். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அவர்கள் சுதந்திரமானவர்களானார்கள். இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம், விரும்பினால் அவரை விட்டுவிடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள் முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை. ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்கள். 
அவர்களுடன் வாழ விரும்பினார்கள். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். எனினும் பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார்கள். ஆனாலும் பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
மஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) அவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி) அவர்கள், இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது என் சொந்த விருப்பம்தான், நான் பரிந்துரைதான் செய்கிறோன். இது மார்க்க சட்டம் அல்ல! என்று தெளிவுபடுத்திய போது முஃகீஸ் எனக்குத் தேவையில்லை என்று கறாறாக கூறிவிட்டார்கள். இதைத்தான் மேற்கூறிய ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
மார்க்கத்தில் கட்டளையிட அதிகாரம் உள்ளவன் நம்மை படைத்த இறைவன் மட்டுமே! அவனுக்கே முழு அதிகாரமும் உள்ளது என்ற கருத்தையே இந்த சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
 

அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6 : 57)
 

படைத்தவனின் கட்டளைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவற்றை பார்த்தே நாம் எந்த முடிவையும் மார்க்க விஷயத்தில் எடுக்க வேண்டும். அவன் இறக்கிய வேத வசனங்களை விட்டுவிட்டு மனிதக் கூற்றுகளையும் யூகங்களையும் உலக நடைமுறைகளையும் பின்பற்றினால் நாமே நஷ்டவளிகளே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
 

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5 : 44)
 

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 5 : 45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படை யில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (அல்குர்ஆன் 5 : 47)
 

படைத்தவன் இறக்கியது என்று கூறும் போது திருக்குர்ஆன் மட்டுமல்ல! அத்துடன் அதை விளக்குவதற்கு நபி (ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். அவர்கள் கூறிய சட்டத்தையும் நாம் ஏற்றவேண்டும்.
 

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16 : 44)
 

இந்த வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களின் விளகத்தையும் நாம் ஏற்க வேண்டும். மேலும் திருக்குர்ஆன் அல்லாத வஹீயையும் (சுன்னாவையும்) அல்லாஹ் இறக்கியுள்ளான்.
 

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3 : 164)
 

இவ்வசனத்தில் இறைத்தூதர் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஞானம் என்று கூறப்பட்டுள்ளது நாம் ஹதீஸ் என்று கூறுவதைத்தான். எனவே திருக்குர்ஆனோடு ஆதாரப்பூர்வமான ஹதீûஸயும் பின்பற்றுவது கட்டாயமாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்று நடப்பது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பதைப்போலவாகும்.
 

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
 

மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் இரண்டே இரண்டுதான்! இந்த இரண்டு மட்டுமே பின்பற்றப்படுவதற்கு தகுதியானதாகும். எவ்வளவு பெரிய மனிதரின் கூற்றாக இருந்தாலும் அந்த கூற்றை ஏற்று நடப்பது யாருக்கு கட்டாயம் இல்லை.
இதற்கு சிறந்த உதாரணம்தான் பரீரா (ரலி) அவர்களின் சம்பவம். முஃகீஸ் (ரலி) அவர்களுடன் சேர்ந்து வாழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய யோசனையை பரீரா (ரலி) அவர்கள் இது மார்க்கச்சட்டமா? அல்லது உங்கள் சொந்தக் கருத்தா? என்று வினவி நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறப்பட்ட போது நபிகளாரின் கூற்றையே அவர்கள் ஏற்கவில்லை, 

ஏனெனில் அது படைத்தவனின் கட்டளையாக நபிகளார் கூறாததுதான்.
இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தும் கூட, அவர்களின் சொந்தக் கூற்றைக் கூட ஏற்று நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் 

இவ்வுலகத்தில் வாழும் மற்றவர்களின் கூற்று எவ்வளவு மதிப்புடையாத இருக்கும்? ஆனால் இன்று ஷைக், மூரீத் என்ற பெயரில் மனிதனை பக்குவபடுத்துகிறோம் என சில போலி ஷைக்மார்கள் உலா வருகின்றனர். 

அவரிடம் பைஅத் (உடன்படிக்கை) எடுத்துவிட்டால் அவர் சொன்ன அடிப்படையில்தான் நாம் நடக்க வேண்டுமாம். திருமணம் மற்று ஏனைய அனைத்துக் காரியங்களையும் அவரிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டுமாம். இப்படி பலர் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் நபிகளார் சொந்தக் கூற்றாக சொன்ன விசயத்தை ஏற்க மறுத்தார்கள், அதற்காக நபிகளார் கோபப்படவில்லை. நபிகளாரின் கூற்றைக் கூட நாம் இவ்விசயத்தில் ஏற்க வேண்டியதில்லை நம் விருப்படி நடக்கலாம் என்றால் இன்று ஷைகுமார்கள் எம்மாத்திரம் ? சிந்தித்துப்பாருங்கள்.
 

மார்க்க விசயத்தில் பரீரா (ரலி) அவர்களைப் போன்று இன்றைய பெண்களும் ஆண்களும் திகழ்ந்தால் மொத்த மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து திருக்குர்ஆன் நபிமொழிகளின் அடிப்படையில் ஓரிறைக் கொள்கைகளை இலகுவாக நிறைவேற்றிவிடலாம்.

TNTJ
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.