ஹாஜி – யார் ?

இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஓட்டப் படுவதை பார்த்திருக்கின்றோம்.ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக,காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும்,ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஹாஜி பக்கிர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப் பட்டு ஒட்டப்படுகின்றன.
ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை,நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குரான்3:97)

பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகை, நோன்பு ஹஜ் போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். அதில் முகஸ்துதி, விளம்பர நோக்கு கலந்து விடக் கூடாது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாரும், ஸக்காதைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குரான் 98:5)

வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத் தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குரான் 39:11-14)

இந்த வசனங்கள் வணக்கத்தைக் கலப்பற்றதாக்கி வணங்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ஆனால் இன்று வியாபாரத்தை விளம்பரப் படுத்துவது போல் ஹஜ்ஜையும் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பொருட்செலவு செய்து, பெரும் சிரமத்துடன் செய்கின்ற பெரும்பாலானவர்களின் ஹஜ் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாமல் போவதைப் பார்க்க முடிகின்றது.
ஹஜ்ஜைப் பற்றி இறைவன் கூறும்போது, அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்!(அல்குரான் 2:195) என்று கூறுகின்றான்.
அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க பெரும்பாலும் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுபவர்கள் விளம்பர நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்க முடிகின்றது.
விருந்து வைபவங்கள்
இன்று ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் வீடு வீடாகச் சென்று நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன், நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன் என்று பயணம் சொல்லும் வழக்கம் இருக்கின்றது. இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு ஒருவர் போகும்போது யாரிடமுமும் சென்று நான் தொழுகைக்குப் போகின்றேன் என்று கூறுவதில்லை.அதுபோல் நான் நோன்பு வைக்கப் போகின்றன் என்று யாரிடமும் போய் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.ஆனால் அதுபோன்ற கடமைகளில் ஒன்றான, அதே சமயம் வசதி படைத்தவர்கள் மட்டும் செய்யும் கடமையான ஹஜ்ஜுக்கு மட்டும் இவ்வாறு சொல்கின்றார்கள் என்றால் தங்களது செல்வதைத் தம்பட்டம் அடிப்பதாகவே இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஹஜ்ஜுக்குப் போகும்போது உயிருடன் திரும்புவோமா இல்லையோ என்ற சந்தேகம் இருப்பதால் எல்லோரிடமும் சொல்லி சொல்லி விட்டு செல்கின்றோம் என்று இதற்கு காரணம் கூறுகின்றார்கள். ஆனால்
இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் வேறு எந்தப் பயணம் மேற்கொண்டாலும் இதுபோன்று ஊர் முழுக்க பயணம் சொல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்வதில்லை.
மேலும் ஹஜ் என்பது முந்தைய காலத்தைப் போன்று நீண்ட காலப் பயணமாகவும் இல்லை. 30 நாட்களுக்குள் முடிந்து விடும் இலகுவான பயணமாக இன்று ஆகி விட்டது. இப்படியிருக்கையில் இவர்களின் இந்த
வாதம் ஏற்புடையதாகாது.
இவ்வாறு பயணம் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. ஊரை அழைத்து விருந்து போடும் கொடுமையும் பல ஊர்களில் நடைபெறுகின்றது. ஹஜ் விருந்து என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து
பெரிய விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தானே என்று இவர்கள் கேட்கலாம். ஆனால் ஒரு வணக்கத்தை மையப்படுத்தி விருந்து வைக்க வேண்டுமானால் அதற்க்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஆதாரம் இருக்க வேண்டும் இல்லையென்றால் அது பித்அத் எனும் வழிகேடாகவே அமையும்.நபி (ஸல்) அவர்களும், அவர்களது காலத்தில் எத்தனையோ நபித் தோழர்களும் ஹஜ் செய்துள்ளனர் ஆனால்
அதற்காக விருந்தளித்ததாக எந்த ஹதீசும் இல்லை.
இந்த ஹஜ் விருந்துகள் ஒரு சமூக நிர்பந்தமாகவே ஆக்கப்பட்டு வருகின்றன.ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் விருந்து வைக்கவில்லைஎன்றால் அது ஏதோ மட்டமான ஒரு செயல் போல கருதப்படும் நிலையும் உள்ளது .
பொதுவாக ஹஜ்ஜுக்கு செல்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவை என்றால் விருந்து,வழியனுப்பு என்ற விளம்பர வகைக்காக லட்சகணக்கில் செலவு செய்யப் படுகின்றது ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் ஹஜ் கடமையாகி விடும் என்றால்,இந்த விருந்துக்காக மேலும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வரை அவர் ஹஜ் செய்யாமல் தாமதிக்கின்றார்.விருந்து வைக்காமல் ஹஜ்ஜுக்கு சென்றால் நம்மை மக்கள் மதிக்க மாட்டார்களே என்று இவர் நினைப்பது தான் இதற்க்குக் காரணம்.இது போன்று ஒரு நிர்பந்தத்தை இந்த ஹஜ் விருந்துகள் ஏற்படுத்தியுள்ளன.
சில ஊர்களில் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், சில ஊர்களில் திரும்பி வரும் போதும்,சில ஊர்களில் இரண்டு வேளைகளிலும் இத்தகைய விருந்துகள் வைக்கப்படுகின்றன. வணக்கத்தை விளம்பரமாக்கி,மற்றவர்கள் ஹஜ் செய்வதைத் தடுக்கும் இத்தகைய விருந்துகளை சமுதாயம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.
ஹாஜி பட்டம்
ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் மற்றொரு நடைமுறை ஹாஜி பட்டம். அதுவரை சாதாரண கருத்த ராவுத்தராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி கருத்த ராவுத்தராக
விடுவார். அதன்பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள்.சிலர் கையெழுத்தில் கூட ஹாஜி ஹாஜியைச்சேர்த்துப் போடுகின்றார்கள்.ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும் இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம்.
ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி( ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்த பிறகு தமது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூடதங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி பெயரை சூட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் இவர்கள் தங்களது பெயருக்கு முன்னாள் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர் என்றால் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து இருக்கின்றது நிச்சயமாக இவை நம் வணக்கத்தின் நன்மைகளை பாழ்படுத்தி விடும்.அல்லாஹ் நம்மை காப்பானாக.
– TNTJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.