இறை தூதர்களின் அழைப்பும் ,
எச்சரிக்கையும் !!
அல் குர்ஆன் அத்தியாயம் 7 : 59 – 101 வரை
அல்லாஹ் கூறுகிறான்
7: 59. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.
7:60. “நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்” என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.
7:61. “என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்” என்று அவர் கூறினார்.
7:62. “என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்”
7:63. “உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (இறைவனை) அஞ்சவும், உங்களுக்கு அருள் செய்யப்படவும், உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?” (என்றும் கூறினார்.)
7:64. ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.
7:65. ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.
7:66. “உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.
7:67. “என் சமுதாயமே! என்னிடம் எந்த மடமையும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்” என்று அவர் கூறினார்.
7:68. “என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். நான் உங்களின் நலம் நாடுபவன்; நம்பிக்கைக்குரியவன்”
7:69. “உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலிமையை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!” நீங்கள் வெற்றியடைவீர்கள் (என்றும் அவர் கூறினார்).
7:70. “எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.
7:71. “உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர்பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.
7:72. அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரைக் கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
7:73. ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சி வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் அதை மேயவிட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கிழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்” என்று அவர் கூறினார்.
7:74. “ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!” (என்று அவர் கூறினார்).
7:75. “ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?” என்று அவரது சமுதாயத்தில் கர்வம் பிடித்த பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர். அதற்கு, (பலவீனர்கள்) “அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினர்.
7:76. “நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்” என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர்.
7:77. பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். “ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” எனவும் கூறினர்.
7:78. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
7:79. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். “என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு நல்லதையே விரும்பினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் விரும்பவில்லை” எனக் கூறினார்.
7:80. லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.
7:81. “நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்.)
7:82. “இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்” என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
7:83. எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.
7:84. அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். “குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்பதைக் கவனிப்பீராக!
7:85. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.
7:86. “ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!”
7:87. “எனக்குக் கொடுத்தனுப்பப்பட்டதை உங்களில் ஒரு சாரார் நம்பி, மற்றொரு சாரார் நம்பாமல் இருந்தால் அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருங்கள்! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்” (எனவும் அவர் கூறினார்.)
7:88. “ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்” என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?” என்று கேட்டார்.
7:89. உங்கள் மார்க்கத்தை விட்டும் அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிய பின்னர் அதற்குத் திரும்பினால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோராக ஆவோம். எங்கள் இறைவன் நாடினால் தவிர அதற்கு (உங்கள் மார்க்கத்திற்கு) திரும்புதல் எங்களிடம் ஏற்படாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன் (எனவும் ஷுஐப் கூறினார்.)
7:90. “ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் நட்டமடைந்தோராவீர்கள்” என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.
7:91. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
7:92. ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே நட்டமடைந்தோரானார்கள்.
7:93. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். “என் சமுதாயமே! என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். உங்களுக்கு நல்லதையே நாடினேன். எனவே (ஏகஇறைவனை) மறுத்த கூட்டத்திற்காக எவ்வாறு கவலைப்படுவேன்?” என்றார்.
7:94. எந்த ஊருக்கு நபியை நாம் அனுப்பினாலும் அவ்வூரார் பணிய வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையினாலும், நோயினாலும் நாம் பிடிக்காமல் இருந்ததில்லை.
7:95. பின்னர் கெட்டதற்குப் பகரமாக நல்லதை மாற்றிக் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகியபோது “(எங்களுக்கு மட்டுமின்றி) எங்கள் முன்னோருக்கும் துன்பமும், இன்பமும் ஏற்பட்டன” எனக் கூறினர். எனவே அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம்.
7:96. அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
7:97. அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?
7:98. அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது முற்பகலில் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்சமற்று இருக்கிறார்களா? நட்டமடைந்த கூட்டத்தினர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
7:100. நாம் நாடியிருந்தால் பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் தண்டித்திருப்போம் என்பதும், அவர்கள் செவியுறாதவாறு அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டிருப்போம் என்பதும் விளங்கவில்லையா?
7:101. (முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
அல் அஃராப் – தடுப்புச் சுவர்
வசனங்கள் 7:59-101