பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, கடந்த 2011ஆம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்தது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி கைதானார். இதையடுத்து இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இப்படி ஜாமினில் இருக்கின்ற ஒரு விசாரணைக் கைதியான ஜனார்த்த ரெட்டி தான், கடந்த 16ஆம் தேதி தனது மகள் பிராமணிக்கு ஜமீன் போன்று ஜாம் ஜாமென்று 650 கோடியில் ஆடம்பரமாகத் திருமணம் செய்தார்.
நாடெங்கிலும் உள்ள மக்கள், கொடியவன் மோடியால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசலில் வயிற்றெரிச்சலுடன் கால் கடுக்க, மணிக்கணக்கில் அல்ல நாள் கணக்கில் நிற்கும் போது ரெட்டியின் குடும்பம் மட்டும் காசு பணத்தை எப்படி தண்ணீராக வாரி இறைக்க முடிகின்றது? வைர நகை அணிமணிகளுடன் வலம் வர முடிகின்றது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்தக் கேள்விக்கு விடை காண விழைவதற்கு முன்னால் இந்தத் திருமணத்தை விமர்சனம் செய்வதற்காகவும் விளாசித் தள்ளுவதற்காகவும் நாம் ரெட்டியின் திருமண அரங்கத்திற்குள் ஒரு குட்டி விசிட் அடித்து விட்டு வருவோம்.
ஆறு கோடி செலவில் ஆடம்பர அழைப்பிதழ்
பார்ப்போர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்.சி.டி. வடிவத்தில் தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் முப்பதாயிரம் பேர்களுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டிருந்தன. அந்த அழைப்பிதழ்களுக்கு மட்டும் ஆறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது.
அந்த அழைப்பிதழைத் திறந்தால் அதில் திருமண அழைப்பு கொடுக்கும் வீடியோ தெரியும் வகையில் ஸ்மார்ட் போன் போல் எல்.சி.டி. திரையுடன் தயாரிக்கப்பட்டு இருந்தது.
வெற்றிலை பாக்கில் விரயமான லட்சங்கள்
வெற்றிலை பாக்கில்லாத கல்யாணம் ஒரு கல்யாணமா? அதனால் வெற்றிலை பாக்கு விளம்புவதில் ரெட்டி சகோதரர்கள் வெற்றி முத்திரை பதிக்கும் வகையில் அதற்கென்று வெறும் (?) ஐம்பது லட்சத்தை ரெட்டி சகோதரர்கள் செலவழித்திருக்கின்றனர். இதில் திருமண நாளன்று 20 லட்சம் ரூபாய் ஆகி உள்ளது. வெற்றிலை மடித்துத் தருவதற்கு 500 மாடல்களும் 500 பெண்களும் வரவழைக்கப் பட்டிருந்தனர். பாக்குகளுக்கு பெயர் போனது பெல்லாரி. எனவே பாக்குகள் பெல்லாரியிலிருந்து வரழைக்கப் பட்டன
36 ஏக்கர் நிலத்தில் முகூர்த்த நிகழ்ச்சி
பெங்களூருவில் உள்ள அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்துக்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதே போல திருப்பதி, ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரி கிராமம், தாமரை குளத்துடன் கூடியகிராமிய விளையாட்டு மைதானம் போன்ற திரைப்பட பாணியிலான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செட்டுகளை உருவாக்கிய சினிமா பட இயக்குநர்கள்
இந்த பிரமாண்டமான செட்டுகளை ஒன்றரை மாத கால உழைப்பில் தமிழ், தெலுங்கு, இந்திப் பட இயக்குநர்கள் உருவாக்கினர். அதனால் கலைத் துறையின் கை வண்ணம் மைதானத்தின் பகட்டான படைப்புகளில் கொஞ்சியது. அரண்மனை மைதானம் எங்கிலும் பெரும் பெரும் கேமிராக்கள், பார்வைகளைப் பறிக்கின்ற எல்இடி திரைகள், பரவசமூட்டுகின்ற ராட்சத பலூன்கள், அலங்கார வளைவுகள், மின்னலாய் வெட்டுகின்ற மின்விளக்குகள் ரெட்டியின் பணக்காரத்தன்மையைப் பறைசாட்டின.
அமர்க்களமான ஐந்து நாட்கள்
12ந்தேதி இரவு நலங்கு நிகழ்ச்சியில் தொடங்கி ஒவ்வொரு இரவும் மருதாணி வைபவம் நடைபெற்றது. ஆடல், பாடல் கச்சேரிகள் என்று ஐந்து நாட்களும் அமர்க்களப்பட்டன.
சவாரி செய்த சாரட் வண்டி!
திருப்பதி வெங்கடேஷ்வரா கோயிலை போன்று அமைக்கப்பட்ட செட்டுக்கு ஜனார்த்தன ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் குதிரைகள் பூட்டிய 40 சாரட் வண்டிகளிலும் மாடுகள் மாட்டிய 40 மாட்டு வண்டிகளிலும் ஊர்வலமாக வந்து சேர்ந்தனர்.
திரைப்பட பாணியில் திருமண வைபவம்
திரைப்படத்தில் காதல் ஜோடிகள் தத்தி தாவி வரும் போது அவர்கள் பஞ்சுப் பாதங்கள் கொஞ்சிக் கொஞ்சி நடப்பதற்காக, தரை நெடுகிலும் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். இது நிஜ வாழ்க்கையில் நடப்பது கிடையாது. நிஜ வாழ்க்கையில் தலைவர்களுக்கு நடத்தப்பட்ட தடபுடல் வரவேற்புக்கு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் ரெட்டி வீட்டுத் திருமணத்தில் உண்மையில், திரைப் படப் பாணியில் மணமகளும் மணமகளும் நடந்து வருவதற்காக சிவப்பு பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.
திரைப் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் வருகின்ற வழிகள் தோறும் வான் மழையாக வசந்த மலர்கள் பொழிந்து கொண்டிருக்கும். ரெட்டி வீட்டுக் கல்யாணத்தில் இந்தக் காட்சியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மணமகள், மணமகனுக்கு மட்டுமல்ல திருமணத்திற்கு வருகையளித்த விருந்தினர்கள் அனைவருக்கும் வான் மழையாக வசந்த மலர்கள் பொழிந்தன. அதுவும் காஷ்மீர் ரோஜாக்கள், ஆம்பூர் மல்லிகை பூக்கள் தூவப்பட்டன. இதற்காக மும்பை, சென்னை, பெங்களூரிலிருந்து ஆண் பெண் மாடல்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆண்களுக்கு வெள்ளை நிற வேட்டி, சட்டைகளும் பெண்களுக்கு வெள்ளை நிறப் பட்டுப் புடவை கவரிங் நகைகள் வழங்கப்பட்டிருந்தன.
வைரக்கல் பதித்த வண்ணச் சேலை
மணமகள் அணிந்த சேலையோ சாதாரண சேலையல்ல! தங்க ஜரிகையில் நெய்யப்பட்டு இளஞ்சிவப்பு, வெண்ணிற வைர கற்கள் பதிக்கப்பட்ட சேலை. அதன் மதிப்பு 17 கோடி! அணிந்திருந்த நகைகளின் மதிப்பு 84 கோடி! நகைக்கும் சேலைக்குமே 101 கோடி ரூபாய்! மணப்பெண் மட்டுமல்ல ரெட்டியின் ஒட்டு மொத்த குடும்பப் பெண்களும் மணமகன் வீட்டு குடும்பத்தினரும் வைர நகைகளிலும் ஒட்டியானங்களிலும் காப்புகளிலும் ஜொலித்தனர். பளப்பளப்பான பட்டு சேலைகளில் பகட்டாக பளிச்சிட்டனர்
நடிகர், நடிகைகளின் நட்சத்திர பிரவேசம்
திருமண அரங்கமே திரைப்பட பாணியில் அமைக்கப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் போது திரைப்பட நடிகர், நடிகைகள் அங்கு திரளாமல் போனால் அது இருள் சூழ்ந்த சுரங்கமாகி விடுமல்லவா? அதனால் அங்கு சூப்பர் ஸ்டார், புது இந்தியாவின் முதல் தர தேசபக்தன், பாமர ஏழைகளின் பரம நண்பன், பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலன் ரஜினிகாந்த் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட பட நடிக, நடிகையர் வந்து கலந்து, அரங்கத்தை ஜொலிக்கவும் கலகலக்கவும் வைத்தனர். இதேபோல தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஷால், சரத்பாபு, சாய்குமார் ஆகியோரும், கன்னட நடிகர்கள் ரவிச்சந்திரன், சாது கோகிலா உட்பட ஏராளமான திரையுலகினரும் பங்கேற்றனர்.
அணி வகுத்த அரசியல் ஆட்சித் தலைவர்கள்
கருப்புப் பண விவகாரத்தில் நாடு களேபரமாகிக் கிடக்கும் கடுமையான சூழலில் இதையெல்லாம் கண்டு கொள்ளாத, தேச பக்தியை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பாஜகவின் பரிவாரங்கள் பெரும் படையுடன் ரெட்டியின் படோடப, பகட்டுக் கல்யாணத்தில் வந்து கலந்து கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியும் விதிவிலக்கு கிடையாது. கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊர்வலமாக வந்த உயர் ரக கார்கள்
ஜனார்த்த ரெட்டி மகள் திருமணத்துக்காக பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வந்தன. இதேபோல 1800 டாக்ஸிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகளின் ஆடி, ஜாகுவார், பிஎம்டபுள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களும் படையெடுத்தன. இதுதவிர சிங்கப்பூர், மலேசியா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த விவிஐபிகளின் வசதிக்காக 15 ஹெலிபேடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. விருந்தினர்கள் தங்குவதற்காக பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பன்னாட்டு சுவைகளில் பரிமாறப்பட்ட உணவுகள்
இந்த்த் திருமணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கு ஆந்திரா, உடுப்பி, சீனா, இத்தாலி ஆகிய ஸ்டைலில் 152 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
வேத மந்திரம் ஓத விஷேச பூசாரிகள்
திருமணத்தில் வேத மந்திரங்கள் ஓதுவதற்கென்று திருப்பதியிலிருந்து எட்டு விஷேச பூசாரிகள் வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் மந்திரம் ஓத ஜனார்த்தன ரெட்டி முன்னிலையில் ராஜீவ் ரெட்டி, பிரமாணியின் கழுத்தில் தாலி கட்டினார்.
உலக அடிப்படையில் ஒரு சில கேள்விகள்
ரெட்டியின் ஆடம்பரத் திருமணத்தைப் பார்த்து விட்டு இந்திய நாடே அரண்டு போயுள்ளது. அதன் அதிர்வுகள் பத்திரிக்கைகளில் பதிவாகி உள்ளன. 500 ரூபாய்க்கு வங்கிகளின் வாசலில் மக்கள் காத்திருக்கும் நிலையில் ரூ.650 கோடி செலவில் முன்னாள் பாஜக அமைச்சரின் மகள் திருமணம் என்று பத்திரிக்கைகள் தலைப்பிட்டுள்ளன என்றால் அந்த ஆடம்பர திருமணத்தின் அதிர்வுப் பரிமாணத்தை விவரிக்கத் தேவையில்லை.
ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாத பட்சத்தில் ரெட்டி சகோதர்களுக்கு இம்மாபெரிய தொகையைச் செலவு எப்படி சாத்தியமாயிற்று? என்ற கேள்வியை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இதே கேள்வியை எல்லோருடனும் இணைந்து நாமும் எழுப்புகின்றோம். இந்தக் கேள்விக்கு பாஜகவால் ஒரு போதும் பதில் சொல்லவே முடியாது.
எதற்கெடுத்தாலும் தேசப் பற்று என்று வேஷம் போடுகின்ற பச்சோந்தி பாஜக அரசு தனது பரிவாரங்களுக்கு பணம் செல்லாது என்ற அறிவிப்பை முன்னரே தெரிவித்ததால் தான் ஜனார்த்தன ரெட்டியால் 650 கோடிக்கு மேலான ரூபாயை அள்ளி வீச முடிந்திருக்கின்றது. ஆறாய் பெருக்கெடுத்து ஓடச் செய்திருக்கின்றது. இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. இதை பாஜக மறுக்கவே முடியாது.
நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதை விமர்சிப்பவர்களின் விமர்சனம் அனைத்தும் ‘மக்கள் ஐநூறு ஆயிரத்தை மாற்றுவதற்கு அலையாய் அலைகின்ற போது அதற்காக ஆலாய்ப் பறக்கின்ற போது ரெட்டி குடும்பம் இப்படி செலவு செய்யலாமா?’ என்ற அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கின்றது.
அப்படியானால், மோடி ஆயிரம், ஐநூறுகளை செல்லாது என்று அறிவிக்காதிருந்தால், ரெட்டி வீட்டுத் திருமணம் விமர்சனத்திற்குள்ளாகி இருக்காது! இது தான் உண்மை நிலையாகும். பத்திரிக்கைகள் இதைக் கண்டு கொண்டுமிருக்காது. மாறாக அதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகார வர்க்கங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று அத்தனை பேர்களின் படங்களைப் பல்வேறு கோணங்களில் போட்டு பத்திரிக்கைகளை அமர்களப் படுத்தியிருக்கும். இங்கு தான் ஏகத்துவம் இதழின் அதாவது இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வை வித்தியாசப்படுகின்றது; வேறுபடுகின்றது.
திருமணம் என்பது எப்போதும் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. அதற்காக அதிகமான காசு பணத்தை அள்ளி செலவு பண்ணக் கூடாது.
நிதானமான பார்வை – நீதியான கோணம்
ஆடம்பரத் திருமணம் தொடர்பாக இஸ்லாமியப் பார்வையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு நிதானமான, நீதமான பார்வையைப் பார்ப்போம்.
கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா கூறுகிறார்:
கொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர்.
ஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்.
இவ்வாறு கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.
“கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்’’ என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்ட அமைச்சர் இதை எப்போது தெரிவித்தார்?
கடந்த ஜூன் 2014ஆம் ஆண்டில் ஆனந்த்ஜி என்ற ஒரு பெரிய வியாபாரி. தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.
பெங்களூரில் ஒரு நட்சத்திர ஓட்டல் அளவில் நடந்த இந்த டாம்பீக, ஆடம்பரத் திருமணம் தான் அன்று கர்நாடக அரசின் கழுகுப் பார்வையைத் திருப்பியது. அப்போது தான் கர்நாடக சட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். அத்துடன், ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது அப்போது ழிஞிஜிக்ஷி சேனலில் வெளியானது.
ஆனந்த்ஜி வீட்டுத் திருமணத்தை ரெட்டி வீட்டு திருமணத்துடன் ஒப்பிடும் போது அது ஒன்றுமே கிடையாது. அதை விடக் கடுமையான வரி விதிப்பையும் கடுமையான தடையையும் போட வேண்டிய கல்யாணம் ஆகும் இது. ஆனால் கர்நாடக அரசு ரெட்டி கல்யாணத்தைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருப்பதுடன் இரு அமைச்சர்கள் அந்த ஆடம்பரக் கல்யாணத்தில் போய் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கொடுமையான விஷயமாகும்.
ஆடம்பரக் கல்யாணத்தின் மீது பதிகின்ற நிதானமான, நீதமான இந்தப் பார்வையைத் தான் இஸ்லாமிய மார்க்கம் ஆழமாகப் பார்க்கின்றது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை இஸ்லாமிய மார்க்கம் அழுத்தமாகப் பார்க்கின்றது.
எதிர்விளைவுகள் – எதிர்வினைகள்
செல்வந்தர்கள் இது போன்ற திருமணத்தை நடத்துகின்ற போது ஏழைகளும் தங்கள் பங்கிற்கு திருமணத்தை தங்கள் அளவில் பெரிதாக நடத்த முனைகின்றனர். அதனால் கடன் வாங்குகின்றனர். கடன் கிடைக்காத பட்சத்தில் வட்டிக்கு வாங்குகின்றனர். கடைசியில் தங்களிடம் இருக்கின்ற வீடு வாசல்களை, வயல் வெளிகளை, தோப்புத் துறவுகளை விற்கின்றார்கள். இதைத் தான் கர்நாடக சட்ட அமைச்சர் 2014ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பிரதிபலித்தார். இந்த விளைவை நாம் பார்த்து விட்டோம்.
ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் வாழ்கின்ற நாட்டில், வாங்கிய கடனை அடைப்பதற்கு வசதியில்லாமல் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் நடக்கின்ற நாட்டில், கிட்னி டயாலிஸிஸ் போன்ற வைத்தியச் செலவுகளுக்கு வகையில்லாமல் அன்றாட நோயாளிகள் உயிர் இழப்பு நடக்கின்ற ஒரு நாட்டில் ரெட்டி போன்ற வகையறாக்கள் அதிலும் ஓரிரு வைர நகைகளில் ஜொலித்தால் பரவாயில்லை. வைர நகைகளில் குளித்தால் அது ஏழை மக்களிடம் புரட்சியைத் தான் உருவாக்கும். நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் தோன்றியது இந்த அடிப்படையில் தான்.
கல்யாணம் எளிதாகத் தான் இருக்க வேண்டும். கல்யாணம் கடுமையான செலவுகள் கொண்டதாக இருந்தால் பருவ வயது அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி திருமணம் முடிப்பதற்குக் கால தாமதமானால் அது நிச்சயமாக விபச்சாரத்தில் தான் போய் முடியும்.
சொந்த பந்தங்களில் உள்ள பையன் உயர் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பதற்குப் போதிய பொருளாதாரமின்றி தவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு உதவி செய்ய முன் வராத சொந்த பந்தங்கள் கல்யாணப் பந்தலிலும் களறிப் பந்தியிலும் பணத்தைக் காலி செய்கின்ற ஈவு இரக்கமற்ற மனப்பான்மைக்கு இது கொண்டு செல்லும். விளம்பர மோகத்தை மென்மேலும் இது வளர்த்து விடும்.
இது போன்ற காரணங்களால் தான் இஸ்லாமிய மார்க்கம் திருமணத்தை மிக சிக்கனமாக நடத்த வேண்டும் என்று கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணத்தில் ஓர் ஆட்டை அறுத்தேனும் விருந்து வை (நூல்: புகாரி 2048) என்று கூறியிருந்தாலும் அதற்கு ஒரு கட்டுப்பாடும் விதிக்கின்றார்கள்.
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்‘’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388
நாட்டில் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை மோடி அரசு தடை செய்ததால் பணத் தட்டுபாடும், பரிதவிப்பும் மக்களிடத்தில் நிலவுவதால் ரெட்டியின் இந்த பகட்டான, படோடமான திருமணம் பெரிதாகப் பார்க்கப் படுகின்றது. நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இதைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்கள்.
இவர்கள் யாருக்கும் இப்படி ஒரு விமர்சனத்தை செய்வதற்கு அறவே தகுதியே இல்லை. காரணம் அவர்கள் தங்களது வீட்டுத் திருமணங்களில் தங்களது தகுதிக்கேற்ப செலவு செய்கின்றார்கள். சிக்கனம் என்பது மருந்துக்குக் கூட பார்க்க முடியவில்லை.
திருமணத்தில் சிக்கனம் என்பது நடைமுறையில் இருந்து வருகின்ற தடபுடல் விருந்து போன்ற செலவுகள் கூட இல்லாத அளவுக்கு மிக எளிமையாக இருக்க வேண்டும். விருந்து என்று இறங்கி விட்டால் கண்டிப்பாக ஒரு பெரிய தொகையைக் காவு கொள்ளக் கூடியதாக ஆகி விடுகின்றது. அங்கே எளிமை என்பது அடிப்பட்டு போய் விடுகின்றது.
ரெட்டியின் திருமணத்தைப் பார்த்து சுன்னத் வல்ஜமாஅத்தினரும் முகம் சுளிக்கின்றார்கள். அவர்களுக்கும் முகம் சுளிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. காரணம் இவர்கள் தங்களுடைய திருமணங்களில் தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப அள்ளி வீசுகின்றார்கள்.
இவர்கள் தங்கள் பொருளாதாரத்திற்குத் தக்க செலவு செய்கின்றார்கள் என்றால் ரெட்டி தனது பொருளாதார அளவுக்கு செலவு செய்கின்றார். இரண்டும் ஒரு வகையில் சமம் தான்.
எனவே ரெட்டியைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் எந்த ஒரு தார்மீக அடிப்படையும் இவர்களுக்கு இல்லை.
அந்தத் தகுதி, யோக்கியதை, அருகதை தவ்ஹீது ஜமாஅத்துக்கு மட்டும் உள்ளது. காரணம் அது மட்டும் தான் இந்த ஹதீஸுக்கு முழு மூச்சாக முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எளிமைத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்து, ஏழை எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆக்கம் : ஏகத்துவம் இதழ் – டிசம்பர் 2016