கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

கேள்வி : கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
– Seeni Ismath, Dubai,UAE

பதில் : கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
இஸ்லாத்திற்கு மாற்றமான இணை வைக்கும் கருத்துக்களை கொண்ட கவிதைகளை எடுதுவதற்கோ பாடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை.(அல் குர்ஆன் 36-69)
நபிகள் நாயகத்திற்கு இறைவன் இறக்கி வைத்த திருமறைக் குர்ஆனை காபிர்கள் கவிதை என்று கூறி நபியவர்களை கவிஞர் என்று கூறியதினால் நபியவர்களுக்கு கவிதை கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
தீய, இணைவைப்புக் கருத்துக்களை கொண்ட கவிதைகளை இஸ்லாம் தடை செய்கிறது.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் : எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். – (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் – ரஹ் – அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்) – அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள். (புகாரி – 4001)
மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களே சில சந்தர்ப்பங்களில் நபித் தோழர்களை கவிதை பாடும் படி சொல்லியிருக்கிறார்கள்.
நல்ல கவிதைகளை பாடிய சிறுவர்களை தடுத்த நபித்தோழர்களை அவர்களைத் தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
நபித் தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்கள் மிகப் பெரிய கவிஞராக இருந்தார்கள். இவர் நபியவர்களின் கவிஞர் என்றே அறியப்பட்டுள்ளார். கவிதை எழுதுவது முற்றிலும் தவறானது என்றிருக்குமானால் நபியின் கவிஞர் என்று இவர் அழைக்கப்பட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (பனூ குறைழா நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார் என்று கூறினார்கள். (புகாரி – 4123, 4124)
இணை வைப்பாளர்களை தாக்கி வசைக்கவி பாடும் படியும் அப்படி பாடும் போது ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் ஹஸ்ஸான் அவர்களுக்கு உதவியாக இருப்பார் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நல்ல கவிதைகள், இணை வைப்பை எதிர்க்கும் வகையில் உள்ள கவிதைகள் அனுமதிக்கப் பட்டதுதான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன். (முஸ்லிம் – 4540)
உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகள் இஸ்லாமியக் கருத்துக்கு உட்பட்டவையாக இருந்த காரணத்தினால் தான் நபியவர்கள் அவற்றைப் பாடச் சொன்னார்கள். அவருடைய கவிதைகளில் 100 கவிதைகளை ஒரே நேரத்தில் ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் பாடிக்காட்டியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன “அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி – 3841)
சிறந்த கருத்துக்களை உடைய கவிதைகளை இஸ்லாம் தடுக்கவில்லை. இணை வைப்பிற்கு எதிரான ஏகத்துவக் கருத்துக்களைத் தாங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.
தமிழக கவிஞர் மு. மேத்தா நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை கவிதையில் தொகுத்து “நாயகம் ஒரு காவியம்” என்ற பெயரில் ஓர் புத்தகம் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் நபியவர்களைப் பற்றி அவர் வர்ணிக்கும் போது இப்படி எழுதுகிறார்.
காவிய நாயகர்.
மனிதர்களில் இவர் ஒரு மாதிரி….
அழகிய முன்மாதிரி!
………………………………..
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம் –
காலடியில் மகுடங்கள் காத்துக் கிடந்தன……..
இவரோ ஓர் எழையாகவே இறுதி வரை வாழ்ந்தார்!
உலக அதிசயங்களில் இது ஓர் ஒப்பற்ற அதிசயம்!
…………………………………….
எல்லாரும் வாயிற் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தார்கள்.
இறுதி நபியாய் எழுந்தருளிய இவர்தான் தாழிட்ட மனக்கதவைத் தட்டினார்.
……………………………………..
முழு நிலவே! வள்ளல் முஹம்மதே!
உங்களை நான் பிறை நிலாச் சொற்களால் பேசுகிறேன்.
……………………………………….
எழுதப் படிக்கத் தெரியாதவர்தான்……………
ஆனால் இவர் தான் புவியின் புத்தகம்!
…………………………………………
சிம்மாசனங்களில் இவர் வீற்றிருந்ததில்லை……
அண்ணலார் அமர்ந்திருந்த இடமெல்லாம் அரியணையானது!
…………………………….
கிரீடங்களை இவர் சூட்டிக் கொண்டதில்லை……..
பெருமானார் தலையில் தரித்ததெல்லாம் மணிமகுடம் என்றே மகத்துவம் பெற்றது.
…………………………………..
மக்கத்து மண்ணை இவர் போர் தொடுத்து வென்றார்.
அகில உலகத்தையும் போர் தொடுக்காமலே வெற்றி பெற்றார்.
…………………………………
நடை பயிலும் கால்கள் எங்கேனும் நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவில் இருந்து மதீனாவுக்கு இவர் நடந்தார் – ஹிஜ்ரி என்னும் ஆண்டுக் கணக்கு ஆரம்பமானது.
…………………………………….
இவர் இறைவனின் துறைமுகம்! இங்கே தான் திருமறை இறக்குமதியானது!
இவர் – இறைவனின் துறைமுகம்! இங்கிருந்து தான் திருமறை எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதியானது.
குறிப்பு : கவிஞர் மு. மேத்தாவின் கவிதைகளில் மார்க்க முரணான கருத்துக்களும் உள்ளடங்கியுள்ளன. வாசகர்கள் அவற்றை இணங்கண்டு படிக்கவும். – புத்கத்தை முழுமையாக நாம் உறுதி செய்யவில்லை. எடுத்துக் காட்டாக ஒரு பகுதியை குறிப்பிட்டுள்ளேன்.
பதில் : ரஸ்மின் MISc






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.