கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

பிறையை தீர்மானிப்பது

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்று தான் அதைக் கூற வேண்டும்.

விஞ்ஞான அடிப்படையிலும் சரி தகவல் அடிப்படையிலும் சரி உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக்கூடியவர்கள் அமெரிக்காவில் தோன்றும் சந்திர கிரகணத்திற்கு இந்தியாவில் தொழ வேண்டும் என்று கூற மாட்டார்கள்.

1999ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கிரகணம் முதன் முதலில் லண்டனில் தோன்றியது. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கிரகணம் என்பதால் உலகமெங்கும் இருந்து மக்கள் அந்தக் கிரகணத்தைக் காண லண்டனுக்குச் சென்றனர்.

லண்டனில் சூரிய கிரகணம் ஏற்படும் போது இந்திய நேரம் பிற்பகல் சுமார் 3 மணி. கிரகணத்தின் காரணமாக அங்கு இருட்டாகி இரவைப் போல் காட்சியளித்ததை பி.பி.சி தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்தோம். அதே நேரத்தில் சென்னையில் சூரியன் ஒளிவீசிக் கொண்டிருந்தது. லண்டனிலிருந்து கிரகணம் படிப்படியாக துருக்கி ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து இறுதியில் சென்னையில் 6 மணியளவில் கிரகணம் ஏற்பட்டு விலகியது.

இப்படி ஊருக்கு ஊர் கிரகணம் வெவ்வேறு நேரங்களில் தோன்றியதை நாம் கண்கூடாகக் கண்டோம்.கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா?
இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் கோள்விகளை நாம் எழுப்பும் போது சிலர் வீம்புக்காக கிரகணம் ஏற்பட்ட தகவலைக் கேட்டும் கிரகணத் தொழுகை தொழலாம் என்று வாதிடுகின்றார்கள். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்பது போல் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போது சூரிய கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறு கிரகணத் தொழுகை தொழ வேண்டும் என்று ஒப்புக் கொண்டாலும் எந்த நேரத்தில் தொழ வேண்டும்?

லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள்.
கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?இந்தக் கேள்விகளுக்கு அவர்களது மனோ இச்சைப் படி என்ன தான் பதில் கூறினாலும் கிரகணம் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதை அவர்களால் மறுக்க முடியாது.
இதற்கு இவர்கள் அளிக்கும் மறுப்பு வேடிக்கையாக உள்ளது.

கிரகணத்தைப் பிறையோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் கிரகணம் ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் பிறை உள்ளே இருக்கிறது என்று தான் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே கிரகணத்தை ஆதாரமாகக் காட்டி பிறையையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று இவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுவது இவர்களின் அறியாமையையே காட்டுகிறது. கிரகணம் ஏற்படும் போது தான் தலைப்பிறை என்று நாம் கூறவில்லை. மாறாக ஒரு பகுதியில் தெரிந்த சந்திர கிரகணம் மற்ற பகுதியில் ஏன் தாமதமாக ஏற்படுகிறது என்ற காரணத்தையே சிந்திக்கச் சொல்கிறோம். இந்தக் காரணம் தலைப் பிறைக்கும் பொருந்தும் என்பது தான் நமது வாதம்.

தொழுகை முறை 

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
  • கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
  • பள்ளியில் தொழ வேண்டும்
  • இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.
  • இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும் 
  • ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்
  • நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்
  • கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

‘நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, முஸ்லிம் 1515

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்…
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, முஸ்லிம் 1502

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் – முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் – ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் 1500

‘நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515

‘கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, முஸ்லிம் 1499

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும், பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059, முஸ்லிம் 1518


நூல் : பிறை ஓர் விளக்கம் & தொழுகையின் சட்டங்கள்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.