எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் எழுந்து சிறுவன் தூங்கி விட்டானா? என்று கூறி (தொழுகைக்காக) நின்றார்கள். நானும் எழுந்து அவர்களின் இடது புறம் நின்றேன். என்னைத் தமது வலது புறத்திற்கு மாற்றினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்கும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் (பஜ்ரு) தொழுகைக்காகப் புறப்பட்டார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 117, 697
இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரு தொழுகையை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 472, 998
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத் தொழுவதை அறவே விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1159, 1182, 1163
பஜ்ரு நேரம் தெளிவாகி பாங்கு சொல்பவர் பஜ்ருடைய பாங்கு சொன்னவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து பஜ்ருக்கு முன் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இகாமத் சொல்வதற்காக பாங்கு சொல்பவர் வரும் வரை வலது பக்கம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: புகாரி 626, 994, 1123, 1160, 6310
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்திவிட்டு எனது வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரை சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்று தொழும் போது நின்ற நிலையில் இருந்தே ருகூவுக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள். உட்கார்ந்து தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்தே ருகூவு, ஸஜ்தா செய்வார்கள். பஜ்ரு நேரம் வந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக் , நூல் முஸ்லிம் 1201
‘ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விளக்கம் அளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) , நூல்: புகாரீ 1147, 2013, 3569
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். இதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 994, 4569, 1123, 1140, 6310
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் எட்டு ரக்அத்களும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். (பஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இத்தொழுகையை அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ,நூல்: புகாரி 1159
….நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். அவர்கள் செய்தது போல் நானும் செய்து அவர்களின் விலாப் புறத்தில் நின்றேன். அவர்கள் தமது வலது கையை என் தலையில் வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பினார்கள். (1) இரண்டு ரக்அத்கள் (2) பின்னர் இரண்டு ரக்அத்கள் (3) பின்னர் இரண்டு ரக்அத்கள் (4) பின்னர் இரண்டு ரக்அத்கள் (5) பின்னர் இரண்டு ரக்அத்கள் (6) பின்னர் இரண்டு ரக்அத்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள்….அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) , நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் நீள நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனீ (ரலி), நூல்: முஸ்லிம் 1284
நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுதார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 1138
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஐந்தாவது ரக்அத்தில் தவிர உட்கார மாட்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1217
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1222
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1215