கேள்வி : ஒவ்வொரு 5 நேர தொழுகையிலும் ஜமாத்துடன் சேர்ந்து தொழுகும்போது என்ன நிய்யத் வைத்து தோழா வேண்டும்?
– sharfudeen UAE
பதில் : எந்த ஒரு தொழுகையானாலும் தொழுவதற்கு முன் நிய்யத் என்ற பெயரில் சொல்லும் படி எந்தவொரு வார்த்தையையும் நபியவர்கள் கற்றுத் தரவில்லை.
எல்லா வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
‘அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி… என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
– பதில் : ரஸ்மின் MISc