திருச்சி தீர்மானம்

இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் அணிதிரண்ட இந்த மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பின் வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.

தீர்மானம் 1:
தலாக் :- தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம் :
இஸ்லாம் ஆண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கியுள்ளதுபோல், பெண்களுக்கும் வழங்கியுள்ளதால்
இஸ்லாம், பெண்களுக்கு அனீதி இழைக்கவில்லை என்று முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் அறிவிக்கிறோம்.
தம்பதியர் சேர்ந்து வாழமுடியாத நிலை, மிகச் சிலரது வாழ்வில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதனால் சில வேளைகளில் கணவனோ சில வேளைகளில் மனைவியோ பாதிக்கப்படுவார்கள் என்றாலும் அதைவிட பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.
விவாகரத்து கிடைக்காது அல்லது அதிக காலம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால் கணவனை மனைவியும்… மனைவியைக் கணவனும் கொலை செய்வது நாள் தோறும் அதிகரித்து வருகின்றது. இஸ்லாம் வழங்கிய எளிதான விவாக ரத்து முறையினால் இந்தப் படுகொலைகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த தலாக் தாய்குலத்தை சித்திரவதை, கொலையை விட்டும் காக்கின்றன தற்காப்புக் கவசம் என்று முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2:
பழியிலிருந்து பாதுகாப்பு :
விவாகரத்து பெறுவதற்காக ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துதல், கள்ள உறவுகளை ஏற்படுத்துதல் இஸ்லாமிய விவாகரத்து முறையினால் தவிர்க்கப்படுகிறது என்பதை முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறோம்.

தீர்மானம் 3:
இழுத்தடிக்கும் அநியாயம் இனியும் வேண்டாம் :
பிடிக்காத கணவனுடன் மனைவியும், பிடிக்காத மனைவியுடன் கணவனும் வாழ முடியாத நிலையிலும் பல்லாண்டுகள் விவாகரத்து வழங்காமல் இழுத்தடிப்பதால் இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே பிற சமுதாய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களின் விவாகரத்து சட்டத்தை எளிமைப்படுத்திட நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
பிற மதத்தவர்கள்குடும்ப விவாகரங்களுக்காக கோர்ட் படியேறி,தங்களது இளமை,பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் நலன் போன்றவற்றை இழந்துஅலைக்கழிக்கப்பட்டு வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த முறையானது பெண்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதால் நீதிமன்றங்களின் அதிகார வரம்பிலிருந்து பிறசமய மக்களின் விவாகரத்து உரிமையை நீக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பலதார மணத்துக்கு முஸ்லிமல்லாத மக்களுக்கு அனுமதி இல்லை என்று போலித்தனமாக சொல்லிக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொண்டு பெண்களுக்கு அநீதியிழைப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து பலதாரமணத்தை சட்டப்பூர்வமாக ஆக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் 4 :
விபச்சாரத்தை குற்றமாக அறிவித்தல்:
ஆண்களில் சிலர், கண்ட பெண்களுடன் விபச்சாரம் செய்து மனைவிமார்களுக்குத் துரோகம் இழைக்கின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் உறவு கொண்டு மனைவிமார்களைப் புறக்கணிக்கின்றனர். மனைவிமார்களுக்கும் பால்வினை நோய்களைப் பரப்புகின்றனர். எனவே விபச்சாரம் செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து குடும்பப் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும்
விபச்சாரம் நடத்துவதற்காக அனுமதித்துள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
திருமணம் மூலம் அல்லாமல் வேறு வழிகளில் ஆண்களும் பெண்களும் உறவு வைக்கக் கூடாது என்று சட்டமியற்ற வேண்டும் என்றும் திருமணம் செய்யாமல் பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு ஏமாற்றப்பட்ட குஷ்பு கவுதமி போன்றவர்களின் நிலைமை மற்ற எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் 5 :
சாத்தியமற்ற பொது சிவில் சட்டம் :
இஸ்லாம் கூறும் விவாக ரத்து முறையே சிறந்தது என்றும் பொது சிவில் சட்டம் அறவே இந்தியாவுக்கு சாத்தியமற்றது என்பதை முஸ்லிமல்லாத மக்களும் புரிந்து கொள்ள உதவும் வகையில், பொதுசிவில் சட்டம் பற்றிய விவாதத்தை துவக்கி வைத்த மோடிக்கும் பாஜகவுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 6:
பல்வேறு மத, இன,பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்தியமக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில்சட்டம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று ஒருமனதாக நாங்கள் தீர்மானிக்கிறோம்

தீர்மானம் 7 :
எங்களின் எச்சரிக்கை:
எங்களது குடும்ப விவாகரங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், பல பெண்களின் வாழ்வை சீரழித்த மோடி போன்றவர்கள் முதலைக் கண்ணீர் விடத் தேவையில்லை என்பதை மத்திய பா.ஜ.க.அரசிற்கு கூறிக்கொள்வதோடு, இந்தப்பிரச்சினையை மேலும் பெரிதாக்க நினைத்தால், அதை உரிய முறையில் சந்திக்கும் தெம்பும் திராணியும் இந்திய முஸ்லிம் பெண்களுக்கு உண்டு என்று கூறி அவர்களை கடுமையாக எச்சரிக்கிறோம்

தீர்மானம் 8:
போபால் போலி என்கவுண்டர்:
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் போபாலில் அதிக பாதுகாப்பு கொண்டதாக மத்திய சிறை அமைந்துள்ளது.
யாரும் தப்பிக்க முடியாத அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து எட்டு முஸ்லிம்கள் தப்பிச் சென்றதாகக் கூறி அவர்களைச் சுட்டுக் கொன்ற மத்தியப் பிரதேச அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
உயிரோடு முஸ்லிம் கைதிகளை வெளியே கொண்டு சென்று சுட்டுக் கொன்ற காவல் துறையினருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.