இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
ஹிஜ்ரத் செய்தவர் என்றாலும் நாம் தீர்ப்பளிக்க முடியாது
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறினேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.”
நூல்: புகாரி 1243
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், “அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’ எனக் கூறுகிறார். நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபியவர்கள் கூட ஒரு நபித்தோழரின் நிலையை அறிய முடியாது என்றால் இன்று நாம் அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது?
தனக்கு அறிமுகமான ஒரு நபித்தோழர் குறித்து இன்னொரு நபித்தோழர் இறைநேசர் என்று கூறியது நபியவர்களால் கண்டிக்கப்பட்டு இருக்கும் போது நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத, நம்முடைய காலத்தில் வாழாத ஒருவரை இறைநேசர் என்று பட்டம் சூட்டுவது சரிதானா?
Published on: November 1, 2016, 6:16 PM Views: 594