நபிமார்கள் வரலாறு 8 (ஆதம் நபி வரலாறு 4)

முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா? என்பதைப் பற்றிய செய்திகளை இது வரை நாம் பார்த்தோம். இந்தத் தொடரில் ஆதம் நபியவர்களின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.
ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும்.
இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள்.இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.
பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே, குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)
இறைவன் ஒரு முடிவெடுத்து விட்டு அதனை வானவர்களிடம் கூறிக் காட்டுகிறான், அப்போது அந்த முடிவிற்கு மாற்றமாக மலக்குமார்கள் தங்கள் கருத்தை சொல்கிறார்கள். அதாவது உலகில் மனித இனத்தைப் படைக்க கூடாது என்று சொல்கிறார்கள்.
அதற்கு இறைவன் சொன்ன பதில் மிகவும் கவணிக்கத் தக்கதாகும்.
அதாவது இறைவனின் வார்த்தைக்கு மேல் எவறுடைய வார்த்தைக்கும் முக்கியத்துவம் கிடையாது. இறைவன் ஒரு முடிவெடுத்து விட்டால் அதனை ஆட்சேபிக்கும் உரிமை எவறுக்கும் கிடையாது. அதனால் தான் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்” என்று இறைவன் வானவர்களுக்கு பதில் கொடுக்கிறான்.
அப்படியானால் இறைவன் வானவர்களிடம் ஏன் மனித உருவாக்கத்தைப் பற்றி கேட்க வேண்டும் கேட்க்காமலே இருந்திருக்கலாமே என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாத்துதான்.
தான் இறைவன் என்பதையும் தான் நினைத்தால் அது சரியாகத் தான் இருக்கும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே அல்லாஹ் அப்படி செய்கிறான்.
ஏன் என்றால் இறைவன் என்றால் அவன் நினைத்ததை முடிப்பவன் என்பதுதான் அவனுடைய இலக்கணம். மனிதனைப் படைக்க வேண்டும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டு அந்தச் செய்தியை வானவர்களிடம் சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கு உடன் பட்ட கருத்துக்கு வர வேண்டும். இறைவனின் கருத்துக்கு மாற்றமாக அவர்கள் கருத்துச் சொல்வதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்பதே யதார்த்தம்.
தனது கருத்துக்கு மாற்றமாக மலக்குமார்கள் கருத்துத் தெரிவித்ததை இறைவன் கண்டித்தான். தான் கண்டித்தது சரியானது என்பதையும், மலக்குமார்கள் நினைத்தது தவறு என்பதையும் அவர்களுக்கு உணர்த்துவதற்காக இறைவன் ஒரு பரீட்சையை வைத்தான்.
மனிதனின் வெற்றியும், மலக்குகளின் தோல்வியும்.
இறைவன் வைத்த பரீட்சையைப் பற்றி திரு மறைக் குர்ஆன் இவ்வாறு பேசுகிறது. 
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்” என்று கேட்டான். (அல் குர்ஆன் 2:31)
இறைவன் வைத்த பரீட்சைக்கு வானவர்களினால் முகம் கொடுக்க முடியவில்லை தங்கள் தோல்வியை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.
“நீ தூயவன் நீ எங்களுக்க கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன், ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர். (அல் குர்ஆன் 2:32)
வானவர்கள் தங்கள் தோழ்வியை தாமாக முன் வந்து ஒத்துக் கொண்டாலும் வானவர்களின் ஆட்சேபனையை மீறி படைக்கப்பட்ட ஆதம் நபியவர்களின் திறமையை வானவர்களுக்கு இறைவன் காட்டினான்.
“ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது “வானங்களிலும், புமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான். (அல் குர்ஆன் 2:33)
மலக்குமார்களுக்கு சொல்ல முடியாமல் போன பெயர்களை எல்லாம் ஆதம் நபியவர்கள் சொல்லிக் காட்டினார்கள் இதன் மூலம் தான் நினைத்தால் அவற்றை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்பதையும், ஆட்சேபித்தால் அது தவறு என்பதையும் மனித குலம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மலக்குமார்கள் விஷயத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.
கலீபா என்ற சொல்லின் விளக்கம்.
மனிதனை இறைவன் படைக் எண்ணி மலக்குமார்களிடம் கருத்துக் கேட்ட நேரம் “அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்?” என்று கூறி ஆட்சேபனை தெரிவித்தார்கள். இந்த ஆட்சேபனையை சிலர் தவறான விளக்கம் கொடுத்து தங்கள் கருத்தை நிலை நிறுத்த முனைகிறார்கள்.
நபி ஆதம் (அலை) அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய செய்தி என்பதினால் அதைப் பற்றிய விளக்கத்தையும் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.
அதாவது மறைவான ஞானம், மறைவானவற்றை அறியும் ஆற்றல் இறைவனிடம் மாத்திரமே உள்ளது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு.
மறைவான ஞானம் பெரியார்களுக்கும், மகான்களுக்கும் கூட உண்டு என்று சொல்லிக் கொள்ளும் சிலர் இந்த வசனத்தை காட்டி மலக்குமார்களுக்கும் கூட மறைவான ஞானம் இருந்ததினால் தான் மேற்கண்டவாரு தெரிவித்தார்கள் என்று வாதிடுகிறார்கள். ஆனால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறான பொய்யான வாதமாகும். 
மேற்கண்ட வசனத்தில் “புமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்” என்று இறைவன் கூறும் இடத்தில் தலைமுறை என்பதைக் குறிக்க கலீஃபா (இன்னி ஜாஇலுன் பில் அர்ழி கலீஃபா) என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிறான். இந்த வாசகத்தை வைத்துத் தான் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மலக்குமார்கள் அடையாளம் கண்டு கொண்டார்களே தவிர அவர்களுக்கு மறைவான ஞானம் என்பது கிடையாது.
கலீஃபா எனும் அரபிச் சொல் “ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுபவர்” என்ற பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்குச் சான்று உண்டு. (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மத் 25417)
மனிதன் வழிவழியாகப் பெருகி வருகிறான். இவ்வாறு வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில் தான். அதனால் தான் ஒரு கலீஃபாவைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் கூறியவுடன் ஒரே ஒரு மனிதர் மட்டும் படைக்கப்பட்டால் எப்படி இரத்தம் சிந்த முடியும் என்று எண்ணாமல் “அவர்கள் இரத்தம் சிந்துவார்களே’ என்று வானவர்கள் கூறினர்.
இந்தச் சொல்லிலிருந்து ஆதமுக்கு ஒரு துணைவி படைக்கப்படுவார் என்பதையும், அவ்விருவர் வழியாக மக்கள் பெருகி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பதையும் வானவர்கள் விளங்கிக் கொண்டனர்.
எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றிக் கூறும் இடங்களில் வழி வழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலை முறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு மற்றொரு மனிதன் பிரதிநிதியாக இருக்க முடியும் (அல் குர்ஆன் 7:142).
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் பிரதி நிதியாக இருந்து செயல்பட்ட அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபா (நபிகள் நாயகத்தின் பிரதிநிதி) என்று அழைத்ததும் இந்தப் பொருளில் தான்.
இறைவன் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.
அல்லாஹ் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். (நூல்: முஸ்லிம் 2392) அல்லாஹ் வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது.
கலீஃபாவுக்கு அல்லாஹ்வின் பிரதிநிதி என்று சிலர் மொழி பெயர்த்திருப்பது மிகவும் தவறாகும்.(மேலதிக தகவல்களுக்கு 2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7)
வரலாறு தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஆசிரியர்  : Rasmin Misc

நபிமார்கள்  வராலாறு முழு தொடரையும் காண இங்கே சொடுக்கவும்.

One thought on “நபிமார்கள் வரலாறு 8 (ஆதம் நபி வரலாறு 4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.