அன்பின் இணையத்தள வாசகர்களே!
நபிமார்கள் வரலாறு என்ற இந்தத் தொடரின் மூலம் நாம் ஆதம் நபி முதல் நமது ஆருயிர் நபி(ஸல்)அவர்கள் வரை அனைவரைப் பற்றிய வரலாற்றையும் திருக்குர்ஆன் ஆதாரப் பூர்வமான நபிமொழி அடிப்படையில் ஆராய இருக்கிறோம்.
இது தவிர்ந்த எந்தக் கட்டுக் கதையும் இதில் இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.
இவையணைத்தையும் சரியான முறையில் அறிந்து கொள்ள நமக்கு எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை.
அது போல் பலங்கால கல்வெட்டுகளோ அல்லது வேறு எந்த ஆதாரமோ நம்மிடம் இல்லை அப்படியென்றால் இந்த வரலாறுகளை நாம் எப்படி அறிந்து கொள்வது?
அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபியவர்களும் கூறிய கருத்துக்களை மாத்திரம் வைத்துத் தான் நாம் நபிமார்களுடைய வரலாறுகளை ஆராய முடியும்.
இந்த இரண்டு வழிமுறை தவிர்ந்த எந்த வழி முறையை நாம் கையாண்டாலும் அதில் பெரும்பாலும் பொய்யும் இட்டுக் கட்டும் தான் கலந்திருக்கும் ஆதலால் இந்தத் தொடர் திருமறைக் குர்ஆணையும் ஸஹீஹான நபி மொழிகளையும் மாத்திரம் வைத்தே தொகுக்கப் படுகிறது.
நபிமார்கள் என்றால் யார்?
மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான்.இவ்வாறு அனுப்பப் படுவோரை இறைத்தூதர்கள் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.
முதல் மனிதரிலிருந்து இருதித் தூதர் நபிகள் நாயகம் வரை ஏறாலமானவர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பல்வேறு மொழி பேசுபவர்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.இவ்வாறு அனுப்பப் பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ ஆதாரப் பூர்வமான நபிமொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.
தூதர்களான அனுப்பப் படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர்.தூதர்களான அனுப்பப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படாது.இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அவர்களுக்குறிய முக்கிய சிறப்பம்சமாகும்.
நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகள் உடையது எனச் சிலர் கூறுகின்றனர்.இந்தக் கருத்து எந்தவித ஆதாரமும் அற்றதாகும்.
நபியும் ரசூலும் ஒன்றே!
நபியும் ரசூலும் ஒன்றே என்பதற்கு ஆதாரமான திருமறை வசனங்கள்.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர் இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீது (பிணைக் கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி இவரைக் கண்ணியப்படுத்தி இவருக்கு உதவியும் செய்து இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்(7:157)
‘மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான் மரணிக்கச் செய்கிறான் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தை களையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்(7:158)
இந்த நபிக்குத் தொல்லை தருவோரும் அவர்களில் உள்ளனர். காதில் கேட்பதையெல்லாம் இவர் நம்புபவர் என்றும் கூறுகின்றனர். உங்களுக்கு நன்மை தருபவற்றை அவர் கேட்கிறார். அல்லாஹ்வை நம்புகிறார். நம்பிக்கை கொண்டோரின் கூற்றை நம்புகிறார். உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அருளாக இருக்கிறார் என்று கூறுவீராக! அல்லாஹ்வின் தூதரைத் தொல்லைப்படுத்துவோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(9:61)
இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவ+ட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.(19:51)
இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவ+ட்டுவீராக! அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும் தூதராகவும் நபியாகவும் இருந்தார்.(19:54)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நபியும் ரசூலும் ஒன்றுதான் வேறு வேறு அல்ல என்பதை தெளிவாக அறிவிக்கிறது.
ஆனால் நபியும் ரசூலும் வேறு வேறு என்று சொல்பவர்கள் அதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தை முன் வைக்கிறார்கள் அது பற்றி ஆராய்வோம்.(இது தொடர்பாக சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் விளக்கம் பகுதியில் கொடுத்துள்ள ஆய்வையே நாமும் இங்கு குறிப்பிடுகிறோம்.)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும் தூதரானாலும் அவர் ஓதும் போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும் கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.(22:52,53)
இவ்வசனத்தில் நாம் அனுப்பிய எந்த நபியானாலும் எந்தத் தூதரானாலும்… என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல வேறானவை எனக் கூறுவோர் இதை ஆதாரமாகக் காட்டுவார்கள்.
இரண்டும் ஒன்று தான் என்பதற்குரிய சான்றுகளை பொருள் அட்டவணையில் நபிமார்கள் என்ற தலைப்பில் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே அவற்றுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.
இதை அப்படியே பொருள் கொண்டு நபி வேறு ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.
மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி தனித் தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர் மறையாகப் பேசும் போது அது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.
எனக்கு எந்தக் கூட்டாளியும் நண்பனும் வேண்டாம்.
எனக்கு எந்தச் சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.
… தொடரும் இன்ஷா அல்லாஹ்
– ஆசிரியர் : RASMIN MISc