மதுரை, சென்னையில் ஜன.27 தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்’-“தினமணி” நாளிதழ்

திருநெல்வேலி,ஜன.9: பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் மறு விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி மதுரை, சென்னையில் இம் மாதம் 27-ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் கூறினார்.

 திருநெல்வேலியில் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 அலாகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகள் நிலுவையில் இருந்த பாபர் மசூதி தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஆதாரம், சட்டங்களின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்யக் கோரி இம் மாதம் 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை முன் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

 இந்த இரு இடங்களில் நடைபெறும் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் இருந்து எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

உயர்நிலை குழு: தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் இந்த இட ஒதுக்கீடு ஓரளவுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு எழுத்தளவில்தான் உள்ளது.

 எனவே, வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த உயர்நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 வக்ஃபு வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதில் 75 சதவிகித சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வக்ஃபு வாரியத்தை கலைத்துவிட்டு, ஒவ்வொரு ஊரிலும் உள்ள வக்ஃபு வாரிய சொத்துக்களை அந்தப் பகுதி முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் ஜெயினுலாபிதீன்.

 பேட்டியின்போது அமைப்பின் மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, எம்.எஸ்.சுலைமான், மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ûஸஃபுல்லாஹ், மாவட்டத் தலைவர் யூசுப்அலி, செயலர் செய்யது அலி, பொருளாளர் நேஷனல் சாகுல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

நன்றி : தினகரன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.