உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா?

கேள்விஅஸ்ஸலாமு அழைக்கும் !!!ஒழு இல்லாமல் குரான் ஐ தொடலாமா? மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு நிற்காத போது மூன்று நாட்கள் கழித்து குரான் ஐ தொடுவதும் ஓதுவதும் கூடுமா ? ஹதீஸ் ஆதாரங்களோடு கூறவும் .
Mubashareena S. – India

பதில்உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும், உழு இல்லாமலும், மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம்.

தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள்.

முதல் வாதமும், பதிலும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள்.

(முஸ்னத் பஸ்ஸார் – 279)
முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ, அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்)

பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்)

இரண்டாவது வாதமும், பதிலும்.

அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின் 79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் – 56 : 79)

இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக் கிடைக்கிறது.

மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.

முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள்.

ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு இங்கு தேவை ஏற்படும்.

ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம்.
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல்குர்ஆன் – 56 : 77. 79)
56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது.

இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் – 80 : 11-16)

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் – 26 : 210 212)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம்.

தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள்.

தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும், அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும், ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

காபிர்களுக்கே நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7, 2941

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆகவே திருமறைக் குர்ஆனை உழு இல்லாதவர்களும், மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.