இசை ஓர் ஆய்வு

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.
ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், தற்காலத்தில் தோன்றிய யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ  இன்னும் சிலர் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள்.
இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள். எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது.
இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
ஆதாரம்: 1
அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் ‘நாளை எங்களிடம் வா’ என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.
நூல்: புகாரி 5590
‘விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப் பட்டிருப்பதாலும்,’இவற்றை ஆகுமாக்குவார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என விளங்கிக் கொள்ளலாம்’ என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.
ஒருவர் நல்ல மனனத் தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பி விட்டால், அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டு விட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.
மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாத்தம் கூறியுள்ளார்.
அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.
நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 30, பக்கம்: 242
இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா? அல்லது பின்பு அறிவித்தாரா? என்ற தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை, இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.
இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
நூல்: அஸ்ஸனனுல் குப்ரா பாகம்: 3, பக்கம்: 272
இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் போதிய ஆதாரமாக உள்ளது.
பைஹகீயில் உள்ள இந்தச் சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.
ஆதாரம்: 2
நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.
அவர்கள் ‘(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?’ என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, ‘எனக்குக் கேட்கவில்லை’ என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்’ என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 4307
குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஆதாரம்: 3
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்’ என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் 1619
ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டு விடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.
இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
ஆதாரம்: 4
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2494
மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.