கேள்வி : ஒருவருக்கு சக்காத் கொடுக்க நினைத்த பணத்தை ரமழான் மாதத்தில் கொடுக்காமல் அதை பேங்க் ஒன்றில் தேபோசிட் செய்து பிறகு அந்த பணத்துக்கான தேவை அவர்களுக்கு வரும் பொது அதை மீள எடுத்து கொடுக்க Mudiyuma thayavusithu pathil தரவும்.
Nawass, srilanka,Eravur.
பதில் : ஸக்காத் என்பது
ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஸக்காத் கட்டாயக் கடமை.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)
இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 99:5)
நபியவர்களின் உபதேசம்.
ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395
ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை
நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது. ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள். அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 46
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60)
திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அவர்கள் 1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.
ஸக்காத்தைப் பொருத்தவரையில் ரமழானில் தான் கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் சொல்லப்படவே இல்லை. ஸக்காத் கொடுப்பதற்கு மாதங்கள் எதுவும் மார்க்கத்தில் குறிப்பிடப்படாமல் ஸக்காத் கொடுக்கும் படி ஏவப்பட்டிருப்பதில் இருந்து நமக்கு எப்போது ஸக்காத் கடமையாகிறதோ அப்போதுதான் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஸக்காத் பணத்தை டெப்பாசீட் செய்து பின்பு அதனைக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த வழிகாட்டலும் சொல்லப்படவில்லை. மாறாக நமது செல்வம் ஸக்காத்தின் அளவை எட்டியவுடன் அதை வசூலிப்பவர்களிடன் அதனை கொடுத்து ஸக்காத் பெறத் தகுதியான 8 கூட்டத்தில் யாருக்கேனும் அந்த செல்வத்தை பங்கிட்டுக் கொடுக்க செய்ய வேண்டும்.
மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் ஸக்காத்தை உரியவர்களுக்கு அதற்குறிய நேரத்தில் கொடுத்து நமது கடமையை நிறைவேற்றிக் கொள்வதுதான் சிறப்பானதாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc