தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய் வோருடன் ருகூவு செய்யுங்கள் (அல் குர்ஆன் 2.43)
அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.(அல் குர்ஆன் 2.83)
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் (அல் குர்ஆன் 2:110)
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் (அல் குர்ஆன் 2:238)
உங்கள் கைகளை (போர் செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்!” என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ் வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சு கின்றனர். ”எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா” எனவும் கூறுகின்றனர். ”இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்” எனக் கூறுவீராக! (அல் குர்ஆன் 4:77)
தொழுகையை நிலை நாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! (அல் குர்ஆன் 6:72)
எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசிய மாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக! (அல் குர்ஆன் 14:31)
அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.295 எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.(அல் குர்ஆன் 22:78)
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(அல் குர்ஆன் 24:59)
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.(அல் குர்ஆன் 29:45)
அவனை நோக்கியே திரும்புங் கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.(அல் குர்ஆன் 30:31)
உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(அல் குர்ஆன் 58:13)
(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன் றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவை யும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர் கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான்.118 எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன்75 கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல் குர்ஆன் 73:20)
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.(அல் குர்ஆன் 98:5)