முதல் இருப்பில் அத்தஹிய்யாத்துக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

கேள்வி tholugayil 4 rakat tholumbothu muthal irupil athahiyathuvuku piragu salavaat otha venduma atharathudan vilakavum.

கேள்வி தமிழாக்கம் : தொழுகையில் 4 ரகாத் தொழும்போது முதல் இருப்பில் அத்தஹயாத்துக்கு பிறகு ஸலவாத் ஓத வேண்டுமா ?ஆதாரத்துடன் விளக்கவும்.

பதில்முதல் இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று ஆரம்பிக்கும் துஆவை ஓத வேண்டும் என்று ஸஹீஹானா ஹதீஸ்களில் பார்க்கிறோம்.


அத்தஹிய்யாத் துஆ

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: புகாரீ 1202, முஸ்லிம் 609

அத்தஹிய்யாத்தில் ஓத வேண்டிய மற்றொரு துஆ.
அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி’ என்று நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 610
மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதிக் கொள்ளலாம்.

ஸலவாத்.

மேற்கண்டவராரு அத்தஹிய்யாத் ஓதிய பின் நபியவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும். ஸலவாத் ஓதுவதைப் பொருத்தவரையில் முதல் அத்தஹிய்யாத்தில் இல்லை, இரண்டாவது அத்தஹிய்யாத்தில் தான் இருக்கிறது என்று சிலர் வாதிடுவது தவரான வாதமாகும்.

ஏன் என்றால் அத்தஹிய்யாத்து துஆவில் ஓதப்பட வேண்டிய ஸலவாத்தைப் பற்றிய ஹதீஸ்கள் அத்தஹிய்யாத்துக்குப் பின் ஸலவாத்து ஓத வேண்டும் என்று வருகிறதே தவிர இரண்டாவதில் இல்லை நான்காவதில் தான் இருக்கிறது என்றெல்லாம் ஹதீஸில் வரவில்லை.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?’ என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே’ என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) ‘நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்

பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!
என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 16455

மற்றொரு ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல்: புகாரீ 3370

பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.