ஸஜ்தா சஹ்வு


மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ, அல்லது குறைத்தாலோ, அல்லது கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும். 

தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை விட்டது தொழுகையின் போது உறுதியாகத் தெரிந்தால் ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
 அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி), நூல் : புகாரீ (829)
ரக்அத்களைக் குறைத்து தொழுதால் விடுபட்டதைப் பூர்த்தி செய்து ஸலாமுக்குப் பின்னர் மறதிக்கான ஸஜ்தா செய்து. பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு தொழுகை குறைக்கப்பட்டு விட்டது என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) துல்யதைன் கூறுவது சரி தானா? என்று கேட்க ஆம் என்றனர் மக்கள். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (482) 

தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக ஸலாமுக்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்யலாம். 

உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும். 

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), நூல் : முஸ்லிம் (990)

 மறதிக்காக செய்யும் ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.
                                                                                                       
 முஹம்மது இக்பால் 
  www.onlinepj.com
                                                                                                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.