இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்

பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.
கல்லூரிகளை தேர்ந்தடுப்பது
கல்லூரியில் சேருவதற்கு முன் எந்த துறை எடுத்தால் அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பது பற்றியும் அங்குள்ள வசதிகள் பற்றியும் அதிக கவலைப்படும் பெற்றோர்கள் , தங்களுடைய பிள்ளைகளின் மார்க்க அறிவை பற்றி கண்டு கொள்வதே இல்லை.நாம் மேல் கூறிய காரணங்களை பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை அதோடு சேர்த்து மார்க்க செயல்பாடுகள் உள்ள கல்லூரிகளை பார்த்து தேர்ந்தெடுப்பது சிறந்தது.அதிக பணத்தை கொடுத்து பெரிய கல்லூரியில் சேர்த்து விட்டு தன்னுடைய பிள்ளைக்கு நாம் நல்ல எதிர்காலத்தை அமைத்துவிட்டோம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர்.எத்தனையோ மாணவர்கள் கல்லூரியில் போதை பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் ஆளாகியதால் மருத்துவமனையில் புலம்பும் பெற்றோர்களை நாம் பார்க்காமல் இல்லை.இதுமட்டுமல்லாமல் கல்லூரியில் காதல் வாயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது.முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.இதன் மூலம் பல தீய காரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.தம்முடைய மானத்தையும் உரிமையையும் இழந்துதான் படிக்க வேண்டும் என்றால் படிப்பை விட மானம் சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டும்.ஆகவே கல்லூரியின் தரத்தை மட்டும் பார்க்காமல் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எடையிட்டு மார்க்கத் தொடர்போடு இருக்கும் வகையிலான கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புகை,மது

ஒரு மாணவன் பள்ளி படிப்பு முடிக்கும் வரை தன் பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பதாலும் பள்ளியில் ஆசிரியரின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் புகை மது போன்ற தீய பழக்கங்களை நாடுவதில் அதிகம் வாய்ப்பு இல்லை.கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதால் ,புகைப் பழக்கத்திற்கும் மது பழக்கத்திற்கும் ஆளாகின்றனர்.இஸ்லாத்தில் போதை பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளது என்பது கூட தெரியாத முஸ்லிம் பெயர் தாங்கி மாணவர்கள் இருக்கிறார்கள்.சில மாணவர்கள் தவறு என்று தெரிந்தும் “கல்லூரியில் அனுபவிக்காமல் வேறு எப்போது அனுபவிப்பது” என்ற ஒரு கேடுகெட்ட தத்துவத்தை கூறிக்கொண்டு இந்த பழக்கத்தை தொடர்கின்றனர்.அல்லாஹ்விடம் தவ்பா செய்யக் கூட நேரம் இல்லாமல் அவருடைய மரணம் அவரை அடைந்தால் மறுமையில் அவரின் நிலை என்ன என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள்.
தீய நண்பர்கள் காரணமாகவே இதுபோன்ற பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுகிறது.இது போன்ற தீய நண்பர்களை தவிர்ப்பதே சிறந்தது.சிறு வயதில் குழந்தைகளை வளர்கும்போதே அவர்களிடம் மார்க்கத்தை பற்றியும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தீய விஷயங்களை பற்றி போதிக்காததும் இதற்க்கு காரணம்.
சிலர் புகை பிடிப்பதை மக்ரூஹ் என்றுக் கூறிக் கொன்று அவர்கள் செய்யும் தவறை நியாயப் படுத்துகிறார்கள்.இவர்களுடைய வாதம் நிச்சயமாக தவறானதாகும்.இவர்களுடைய தீய செயலை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவதை தவிர வேறில்லை.
 “நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; நல்ல அமல்களைச் செய்யுங்கள்”…  (அல்குர்ஆன் 2:168, 172, 23:51, 5:88)
“(மேலும்) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்”…     (அல்குர்ஆன் 2:195)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன் 7:31)
மது அருந்தும் பழக்கம் நபிகள் நாயகம் காலத்திலேயே இருந்ததால் நமக்கு மது அருந்த நேரடியான நேரடியான தடை இருக்கிறது.கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் அதிலும் நகரப்புற மாணவர்களிடம் அதிகமாக மது பழக்கம் நுழைந்து விட்டது.மது அருந்துவது எதார்த்தமாகவும் அருந்தாதவரை கேலி செய்வதும் மட்டம் தட்டுவதுமான நிலைமை இருந்து வருகிறது.இதில் இஸ்லாமிய பெயர் தாங்கி மாணவர்களும் போதையில் மிதக்கிறார்கள் என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.கல்லூரி வாழ்க்கையில மது அருந்தாதவர்களை நான்காக பிரிக்கலாம்.
1. வாய்ப்பு கிடைக்காதவர்கள் : இவர்களுக்கு மது அருந்தும் வாய்ப்பு கிடைத்தால் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது.
2. மதுவின் தன்மையையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பிடிக்காதவர்கள் : இவர்களுக்கு மது பிடிக்காவிட்டாலும் ,புகை போன்ற வேறு பழக்கிதிர்க்கு ஆளாகலாம்.
3. உடல் நலத்தால் மதுவை தவிர்ப்பவர்கள் : இவர்களை நண்பர்கள் வர்புருத்தினால் இவர்களும் படி படியாக மது பழக்கத்தில் நுழைந்து விடலாம்.
4. ஈமானில் உறுதியாக இருப்பவர்கள் : மேல் கூறிய மூன்று காரணங்களை விட இதுவே நிலையானதும் , சிறந்ததுமாகும்.இஸ்லாம் மது அருந்துவதை முழுமையாக தடை செய்துள்ளது என்பதை விளங்கி அதை உறுதியாக நம்பினால் ஷைத்தானால் வழிகெடுப்பது மிகவும் சிரமம்.சிறு வயது முதலே இஸ்லாத்தை அழகிய முறையில் ஊட்டி வளர்த்தல் இந்த தகுதியை உங்கள் பிள்ளைகளிடமும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)
தீய நண்பர்கள்
நண்பர்கள் என்றாலே தீயவர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை மாறாக தீய நண்பர்களையே இஸ்லாம் தவிர்க்க கட்டளையிடுகின்றது.அதுமட்டுமல்லாமல் நல்லவர்களுடன் தோழமை கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தக் கூடிய மார்க்கமாக இருக்கிறது.
மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4760)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (3336)
கல்லூரியில் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது அது சிறந்ததும் இல்லை.அந்த நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாக இருக்கிறது.கல்லூரியில் மட்டுமல்லாமல் அணைத்து நேரங்களிலும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.தீய குணம் கொண்டவரை நட்பு பாராமல் நல்ல குணம் கொண்டவரிடமே நட்பு கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது.ஊர் சுற்றுபவரிடமும்,புகை,மது அருந்துபவரிடமும்,பெண்களிடமும்,செல்வந்தர்களிடமும் நட்பு கொள்ள ஷைத்தான் தூண்டுவான்,அவர்களுடன் இருக்கும் உலக பொருட்கள் அழகாக காண்பிப்பான்.அதில் மயங்கியோருக்கு உலகிளில் மறுமையிலும் தோல்வியே காத்திருக்கிறது.
பெரும்பாலான தவறுகள் தீய நண்பர்களின் தூண்டுதளினாலேயே ஊக்குவிக்கப்படுகிறது.புகை,மது,ஊர் சுற்றுவது,சினிமாவிற்கு செல்வது போன்ற பழக்கத்தின் காரணம் தீய நண்பர்களாலேயே தொடங்கப்படுகிறது.நாம் தீய செயல் செய்யும்போது அதை தடுத்து நல்லதை அறிவுரை செய்பவர்களே நல்ல நண்பர்கள்.நல்ல நண்பர்களின் இன்னொரு அடையாளம் உங்களின் நல்லதிலும் கெட்டதிலும் துணை நிற்பார்கள்.தீய செயல் செய்யும் நண்பர்களை விட நம்மை தொழுகைக்கு அழைப்பவராகவும்,நாம் செய்யும் தீய செயல்களை சுட்டிக்காட்டி அதை தடுப்பவர்களையும் நண்பராக தேர்ந்தெடுப்பது இம்மையிலும் மறுமையிலும் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)
அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (7198)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (13)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (2442)
புனைப் பெயர்
கல்லூரியில் தங்களுடைய நண்பர்களை புனைபெயர் வைத்து அழைப்பதை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பாப்போம்.யாரை புனைப் பெயர் வைத்து அழைக்கிரோமோ அவருடைய மணம் நோவாத வகையிலும் அந்த புனைப் பெயர் நல்ல அர்த்தத்தை கொண்டதாக இருந்தால் புனைப் பெயரில் எந்த தவறும் இல்லை.அந்த புனைப் பெயர் மற்றவற்றின் மணதை புண்படுத்தும் விதமாகவும் அதை அவர் விரும்பாத பட்சத்திலும் அதில் தீய அர்த்தம கொண்டதாகவும் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அல் குர்ஆன் 49:11.
ஆண் பெண் சேர்ந்து படிப்பது
பெரும்பாலான கல்லூரிகள் ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளாகவே இருக்கிறது.பெரும்பாலான கல்லூரிகள் மாற்று மதத்தவரால் நடத்தப்படுவதால் வேறு வழி இல்லாமல் நாமும் அதுபோன்ற கல்லூரிகளே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறோம்.இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்லூரிகளில் கூட ஆண் பெண் சேர்ந்து படிக்கும் நிலையே இருந்து வருகிறது.இது மிகவும் வருத்தத்திர்க்கு உரிய விஷயம்.
எந்த வயதில் ஆண் பெண் உணர்ச்சிகள் பலவீனமாக இருக்குமோ ,எந்த வயதில் இரு பாலாரையும் பிரித்து வைப்பது அத்தியாவசியமா,எந்த வயதில் இரு பாலார் ஒன்றாக இருந்தால் அதிக கேடு வருமோ அந்த வயதில் இரு பாலாரையும் சேர்க்கும் இடமாக இன்று பெரும்பாலான கல்லூரிகள் இருந்து வருகின்றன.அதிகமான கல்லூரிகள் பெண்களை ஹிஜாப் பேணுவதை விட்டும் தடுக்கக் கூடியதாக இருக்கிறது.சில இடத்தில் மாணவிகளே ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.இஸ்லாமிய பெண் தன் கையையும்,முகத்தையும் தவிர வேறதையும் அந்நிய ஆண் முன் வெளிப்படுத்தக் கூடாது என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.(அல் குர்ஆன் 24:31)
ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்ற பெயரில் மிக சகஜமாக கை குலுக்கிக் கொள்வதும்,உரசிக்கொள்வதும்,சினிமா,பீச் என்று ஊர் சுத்துவதர்க்கு பெயர் நட்பு என்றும் அது அவர்களுடைய சுதந்திரம் என்றும் கூறிக் கொள்கின்றனர்.இந்த நட்புதான் பிற்காலத்தில் காதலாகவும் காமமாகவும் மாறுகிறது.இதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை.
 நபி (ஸல்) அவர்கள் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் “உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை. (புகாரி – 4891)
அதுமட்டுமல்லாமல் ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் இடத்தில் இரு பாலாரும் தனியாக இருக்கக் கூடிய நிலையும் ஏற்படலாம்.ஆண் பெண் தனியாக இருப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.ஆணும பெண்ணும் கல்லூரியில் மிக சுதந்திரமாக இருப்பதால் இருவரும் பீச்,சினிமா என்று சுத்துவது மிக சகஜமாகி விட்டது.இதை கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.
ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3006
சில ஒழுங்குகள் பேணப்படும் கல்லூரிகளில் ஆண் பெண் நேரடியாக பேசாமல் செல் போன் நம்பரை பரிமாறிக் கொண்டு நண்பர்கள் என்று ஆரம்பித்து காதலில் முடிகிறது.கிராமப்புறங்களில் காதல் என்று ஆரம்பித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் அதிகம்.நகரப்புறங்களில் மிகவும் கேடுகெட்ட மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து விட்டது.இன்று ஒருவனுடன் காதல் நாளை மற்றவருடன் காதல் என்று கேடுகெட்ட நிலையை நோக்கி இன்றைய நகரப்புற கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் ஆண்களும் இருக்கின்றனர்.தன்னுடைய கற்பை இழப்பது என்பது மிகவும் சாதாரணமாக இருக்கிறது.அது ஒரு புதிய புரட்சியாகவும் ட்ரெண்டாகவும் பார்க்கப் படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.இதில் இஸ்லாமிய பெயர்தாங்கி மாணவ மாணவியரும் விதிவிலக்கில்லை.ஆண் பெண் இடையே இருக்கவேண்டிய தொடர்பு இஸ்லாம் கூறும் வகையில் இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசிங்கங்களை தவிர்க்க முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அசிங்கமான வார்த்தைகள் 
வாலிபர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது தகாத அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவது பெருமை என்று நினைக்கின்றனர்.அதை ஒரு விளையாட்டாகவும் அதன் அர்த்தம் எவ்வளவு கேவலமானது என்பதையும் அறியாதவர்களாகவும் அது தன்னையும் தன குடும்பத்தாரையும் இழிவு படுத்துகிறது என்பதை கூட அறியாதவர்களாகவோ அல்லது மறந்தவர்களாகவோ அந்த வார்த்தைகளோடு பழகி விடும் காட்சியை நாம் பார்க்கிறோம்.இஸ்லாம் இதை வன்மையாக கண்டிக்கிறது.இதுபோன்ற வார்த்தைகளை ஒரு மூஃமின் பயன்படுத்தக் கூடாது.
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி 6243

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

ஹிஜாப்
சமீப காலங்களில், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களாக மாறி வருகின்றனர்.இவர்கள் இதுபோன்று மாறுவதற்கு இவர்களின் பெற்றோர்களே முதல் காரணம்.வெறும் பெயரளவில் இஸ்லாத்தில் ஏற்றிருக்கும் இவர்களுக்கு தன்னுடைய மகள் ஹிஜாப் சட்டத்தை பேனாதது பெரிதாக தெரிவதில்லை அதனால் அதை கண்டிப்பதும் இல்லை.தங்களுடைய பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை பற்றி ஒழுங்காக எத்தி வைக்காத காரணத்தினால் , மீடியாக்களை பார்த்து வளருவதாலும் ஹிஜாப் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை மறந்துவிட்டு அது நமக்கு கட்டுப்பாடு என்று நினைக்கின்றனர்.சிலர் ஹிஜாப் சட்டம் சிறந்தது என்று தெரிந்தும் தன்னை வித்தியாசமாக காட்டக்கூடாது என்பதற்காக ஹிஜாப் அணிய மறுக்கின்றனர்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
அல்குர்ஆன் 24:31
சில மாணவிகள் தங்களுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்பில் இருக்கும் மாணவர்களிடமும் ,ஆசிரியர்களிடமும் குலைந்து பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர்.இது நிச்சயமாக மானக்கேடான செயலாகும்.
நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன்: 33:32
சினிமா
பெரும்பாலான சீர்கேடு சினிமாவால் தான் ஏற்படுகிறது.தொழுகையை பேணாமல் இருப்பதற்கும்,தீய எண்ணங்கள் மனதில் உண்டாவதர்க்கும்,பணத்தை வீண் விரயம் செய்வதற்கும்,தீய பழக்கங்கள் உண்டாவர்க்கும் இந்த கேடுகெட்ட சினிமாதான் துணையாக நிற்கிறது.ஒரு சிலர் லாபம் ஈட்டுவதற்காக சமுதாயத்தையே படுகுழியில் தள்ளும் துறை தான் சினிமா என்பது.மாணவர்களே சினிமாவை தவிர்த்துக் கொண்டு உங்களுடைய உலக மற்றும் மறுமை வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்.
விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6243 அபூஹுரைரா (ரலி)
‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.
தொழுகை
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தொழுகையை மறந்தே வாழ்ந்து வருகின்றனர்.சினிமா,பீச்,உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல நேரம் இருக்கும் இவர்களுக்கு தொழுகைக்கு நேரம் இல்லையாம்.வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுவதோடு தம் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கின்றனர்.சிலர் ஜும்மா தொழுகையையும் அலட்சியப்படுத்துகின்றனர்.தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றி இவர்களுக்கு ஒழுங்காக எத்தி வைக்காததும் இறையச்சம் இல்லாததும் தான் இதற்க்கு காரணம்.
குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (அல் குர்ஆன் 74 : 45)
இஸ்லாமிய கல்லூரிகலாக இருந்தால் பள்ளிவாயில்கள் அதன் உட்புறத்தில் எழுப்பப்பட்டிருக்கும்.துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான கல்லூரிகள் இஸ்லாமியர்களின் கையில் இல்லை.இதுபோன்ற கல்லூரிகளில் தாமாக முயற்சி எடுத்து முஸ்லிம் மாணவர்களை ஒன்று திரட்டி தொழுதுக் கொள்ள வேண்டும்.தொழுகைக்கு வெளியே அனுமதிக்காத பள்ளிகளில் மாணவர்கள் ஒன்று திரண்டு கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தால் அனுமதி எளிதில் கிடைத்து விடும்.அப்படியும் அனுமதி அளிக்காவிட்டால் நீங்களே கல்லூரியில் ஒரு இடம் கேட்டு தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்.
இஸ்லாத்தை எத்தி வைப்பது
ஒவ்வொரு முஸ்லிமும் தமக்கு தெரிந்த ஒவ்வொரு மார்க்க விஷயத்தையும் மற்றவர்களிடம் எத்தி வைப்பது கடைமையாக இருக்கிறது.கல்லூரியில் நம்முடன் படிக்கும் மாணவர்களுடன் அரட்டை அடிப்பதற்கும்,பெண் மாணவிகளை பற்றி அவதூறி சொல்வதற்கும்,அசிங்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரத்தை வீண் சியும் நாம் என்றைக்காவது மார்க்க விஷயத்தை எத்தி வைத்திருப்போமா?மாணவர்களாக இருக்கும் அந்த வயதில் தான் எதையும் ஆராய்ந்து திறந்த மனதுடம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கும்.அவர்களுடைய மதத்திலேயே அவர்கள் சந்தேகத்துடன் தான் இருக்கின்றனர்.நல்ல முறையில் நீங்கள் அவர்களிடம் இஸ்லாத்தை எத்தி  வைத்து அல்லாஹ்வும் நாடினால் பலர் இஸ்லாத்தை தழுவும் வாய்ப்பு உள்ளது.நீங்கள் இஸ்லாத்தை எத்தி வைப்பதற்கு முன் உங்களையும் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும்.உங்களை பார்த்து இஸ்லாத்தை வெறுத்து ஓடி விடக்கூடிய நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3:110)
முஸ்லிம்கள் கல்லூரிகளை உருவாக்குதல்
உலக கல்வியுடன் மார்க்க கல்வியும் அவசியம் என்று மேடைகளிலும் கட்டுரைகளிலும் பதிவு செய்தால் மட்டும் போதாது , நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்கள் இஸ்லாமிய அடிப்படையில் கல்லூரிகள் அமைய உதவி செய்ய முன் வர வேண்டும்.பள்ளிவாசல்களை அளவுக்கதிகம் கட்டுவதிலும் , பள்ளிவாசல்களில் ஆடம்பரம் செய்வதிலும்,தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்வதிலும்தான் நம் சமுதாயத்தில் வாழும் செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை செலவு செய்கிறார்களே தவிர சமுதாய பணிகளுக்கு செலவிடுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது.சிலர் மார்க்கம் தடை செய்துள்ள திரையரங்குகளிலும்,மது கடைகளிலும் தங்கள் செல்வங்களை முதலீடு செய்கிறார்கள்.இவர்களுக்கு மார்க்க சிந்தனையும் இல்லை சமுதாய சிந்தனையும் இல்லை.தமிழகத்தில் நம்மை விட குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ள கிறித்தவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் நடத்துகின்றனர்.முஸ்லிம் மாணவர்கள் வேறு சமுதாய மக்களின் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படிக்க வேண்டி இருப்பதால் மார்க்க அறிவு இல்லாமல் மாற்று மத சாயலில் வளரும் குழந்தைகளாக இருக்கின்றனர்.இந்த நிலையை மாற்ற நம் சமுதாயத்தில் உள்ள செல்வந்தர்களும் நடுதிர வர்க்கத்தினரும் இணைந்து இஸ்லாமிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் அதிகப் படுத்த வேண்டும்.மிகவும் பின் தங்கிய நம் சமுதாயத்தை உலக அறிவிலும் மார்க்க அறிவிலும் முன்னேற்ற இதுவே சிறந்த வழி.
– முஹமது ரஃபீக்(FRTJ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

FRTJ
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.