பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.
விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.
முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.
முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.