‘ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்‘ என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? ‘எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது‘ என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
‘உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!‘ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
‘மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
‘உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை‘ என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது
‘இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!‘ என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
அல்குர்ஆன் 11: 42-48
அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. ‘நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!‘ என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?
(மேற்படி நூல் பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ‘ சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்‘ அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள்!‘ என்றார்கள். அதற்கு அம்மனிதர் ‘உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்!‘ என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய்‘ என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ‘ செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.
(அதே நூல் பக்கம்: 11, 12)
‘அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு‘ என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.
(அதே நூல் பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.
(அதே நூல் பக்கம் 143)
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.
(அதே நூல் பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்? அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
- காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்
- இசையில் மயங்கும் ஷெய்குகள்
- தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது ‘அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன்‘ எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3
‘நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்‘ என நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி), நூல்: முஸ்லிம் 3243
‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்‘எனவும் நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷாரலி), நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242.
‘செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்‘ என்று நபிகள் நாயகம் ஸல் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலி), நூல்: முஸ்லிம் 1435
‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்–குர்ஆன் 27:65)
நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்–குர்ஆன் 6:50)
“மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது– கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்–குர்ஆன் 50:16-18)