திருமணம் சம்பந்தமாக TNTJ வின் நிலைபாடு

மார்க்கத்துக்கு முரணான காரியங்களுடன் நடத்தப்படும் திருமணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பிரச்சாரகர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தத் திருமணங்களை நமது பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியான நிலைபாட்டை ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.

ஆயினும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம் இல்லாமலும் பெரும் பொருட்செலவில் அதிகமான மக்களுக்கு விருந்தளித்து நடத்தப்படும் திருமணங்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து மாநில நிர்வாகிகளும், மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் தணிக்கைக் குழு உறுப்பினர்களும் கொண்ட கூட்டுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது அவரவர் சக்திக்கு உட்பட்ட விஷயம் என்ற வாதமும், குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களே பரக்கத்தானவை என்ற நபிமொழிக்கு இது முரணாக உள்ளதால் அதிகச் செலவில் செய்யப்படும் விருந்தைத் தவிர்க்க வேண்டும் என்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டன.

இது குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட்டது.

தனது சக்திக்கு உட்பட்டு ஒருவர் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது குற்றமாகாது என்றாலும் அது சிறந்ததல்ல. ஏனெனில் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அந்தக் காலத்தில் திருமணச் செலவு என்பது விருந்துச் செலவு மட்டும் தான். எனவே விருந்துக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்ப்பது தான் சிறந்தது என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

அனுமதிக்கப்பட்ட செயலுக்கு நாம் தடை போடவும் முடியாது. அனுமதிக்கப்பட்டதையும் சிறந்ததையும் சமமாகவும் கருத முடியாது என்ற அடிப்படையில் கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.
மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சமும் இல்லாமல் அதிகமான நபர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடத்தப்படும் திருமணங்களை நம்முடைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த திருமணங்களில் பேச்சாளர்களை அனுப்பி திருமண உரை நிகழ்த்துவதில்லை. 

மார்க்கத்திற்கு முரணில்லாத வகையிலும் விருந்துக்காக குறைந்த அளவு செலவிட்டும் நடத்தப்படும் திருமணங்களை நமது ஜமாஅத்தின் பதிவேட்டில் பதிவு செய்வதுடன் அந்தக் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் திருமண உரை நிகழ்த்த பேச்சாளரை அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதிகமானவர்களுக்கு விருந்து அளிப்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக திருமண மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்கள் அதிகமான செலவில் நடத்தப்படும் திருமணங்களாகக் கருதப்படும்.

திருமணத்தை வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நடத்திவிட்டு விருந்தை மண்டபத்தில் திருமண நாளிலோ அல்லது அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலோ கொடுத்தாலும் அந்தத்திருமணங்களும் அதிகமான செலவில் நட்த்தப்படும் திருமணங்களாகக் கருதப்படும்.

மேலும் வீடுகளில் நடத்தப்படும் திருமண விருந்துகள் குறித்து உள்ளூர் நிர்வாகிகள் கூடி அது அதிகமான செலவில் நடத்தப்படும் விருந்தில் சேருமா என்று முடிவு செய்து அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.

எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் எனும் பேரருள் அடங்கியுள்ளது என்பதாலும் அதைத் தான் மக்களுக்கு நாம் ஆர்வமூட்ட வேண்டும் என்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமாக உள்ள சமுதாயத்தில் நம்முடைய செயல்கள் ஏழைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற சமூக நலன் கருதியும் இவ்வாறு திருமண விருந்தில் இந்த வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

– TNTJ.NET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.