ஹஜ் உம்ரா கேள்வி பதில்கள்

துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பல உம்ராக்கள் செய்யும் போது ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்?mecca_1001378i

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர். இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற நேரத்தில் செய்வதை மார்க்கம் தடை செய்யவில்லை. ஒருவர் அவருக்கு வசதியான ஒருநாள் சனிக்கிழமை நோன்பு நோற்கிறார். இந்த நாளில் நபிகளார் நோன்பு நோற்றார்களா? இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்கக்கூடாது. காரணம் பொதுவாக நோன்பு வைக்கலாம் என்ற அனுமதியே இதற்குப் போதுமானது. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்றார்கள். அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர” என்றார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 46

கடமையான அமல்களில் ஒருவர் கூடுதலாக விரும்பி செய்யலாம் என்பதை “நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர’ என்ற நபிகளாரின் வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இதைப் போன்று ஹஜ் உம்ரா பற்றி பேசும் வசனத்திலும் அல்லாஹ் இதைத் தெளிவுபடுத்துகிறான். ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)

ஸஃபா, மர்வாவில் சுற்றுவது உம்ராவில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். இது தொடர்பாகப் பேசும் போது, “நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்; அறிந்தவன்’ என்று நன்மைகளை கூடுதலாகச் செய்ய விரும்புபவர் அதிகம் செய்யலாம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். இதைப் போன்று ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருதடவை செய்ய வேண்டிய கடமையாகும். அதை ஒருவர் விரும்பினால் கூடுதலாகவும் செய்யலாம் என்பதை நபிகளார் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் (1463)

எனவே ஒருவர் விரும்பினால் ஒரு பயணத்தில் கூடுதலாக உம்ரா செய்யலாம். ஆனால் கூடுதலாக உம்ரா செய்ய வேண்டுமென யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஸயீ செய்து, முடியைக் களைந்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது. தலைமுடியை மழிப்பது அல்லது குறைப்பது தான் உம்ராவின் முடிவாகும். இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது கத்தரித்ததும் உம்ரா செய்பவர் அதிலிருந்து விடுபட்டு விடுகின்றார். இதன்பிறகும் அதே உம்ராவில் நீடித்தல் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் அவர், தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இந்த எல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல்: புகாரி 1529

ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது. மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல்: புகாரி 319

வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1788

நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். துல்ஹஜ் பிறை 1 வரை பல உம்ராக்கள் செய்ய விரும்பினால் மேற்கண்ட முறைப்படித் தான் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு உம்ராவிலிருந்து விடுபட்டு, மறு உம்ரா செய்ய முடியுமே தவிர முதலில் செய்த உம்ராவில் இருந்தவாறே அடுத்த உம்ராவைச் செய்ய முடியாது.

கேள்வி பதில் ஏகத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.