ஜகாத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா ?

கேள்வி தனது செயல் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட தொகை ஜகாதாக வழங்குவேன் என்று அல்லாஹ்விடன் நிய்யத் வைத்து அது நிறைவேறியவுடன் காலதாமதமாக அந்த தொகையை சிறிது சிறிதாய் வழங்கினால் அது குற்றமா? 

Thamimul Ansari – india


பதில் : உங்கள் கேள்விக்குறிய பதிலைப் பார்ப்பதற்கு முன் நேர்ச்சை பற்றிய ஒரு தெளிவை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் போது “இறைவா எனக்கு இந்தப் பிரச்சினையை நீ நீக்கினால் உனக்கு நான் இதைச் செய்வேன்“ என்று கூறி இறைவனிடம் பலரும் நேர்ச்சை செய்கிறோம்.


இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.


இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.


உனக்காக நான் இதைச் செய்கிறேன்என்று இறைவனிடம் நாம் கூறும் போது அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.


அதனால் நேர்ச்சையைத் தவிர்க்குமாறு நபியவர்கள் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.
நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரி 6608, 6693
நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 6692
நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.


நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

துஆக் கேட்பதுதான் சிறந்தது.

அப்படியானால் நமது காரியம் சரியாக நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.


இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.


இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?’ என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.


உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாகஎன்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம் நேர்ச்சை செய்வதை தவிர்ந்து கொள்வதுதான் சிறந்தது என்றும் நேர்ச்சையினால் இறைவன் விதியில் எதனையும் மாற்ற மாட்டான் என்பதையும் மேற்கண்ட செய்திகள் மூலம் அறிந்தோம். ஆக நேர்ச்சை செய்வதை முதலில் தவிர்ந்து கொள்வது சிறந்தது.


அடுத்து ஸக்காத் கொடுப்பது என்பது நேர்ச்சை செய்யும் விஷயமல்ல. ஸக்காத் என்பது நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  அது நமது சொத்தில் இருந்து ஏழைகளுக்கு தானாகக் கிடைக்க வேண்டிய ஒரு பங்காகும். அதனை நேர்ச்சையில் சேர்க்கக் கூடாது.


நேர்ச்சை செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிய இஸ்லாம் யாராவது நேர்ச்சை செய்துவிட்டால் அதனை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது என்று சொல்கிறது.


அதாவது நேர்ச்சையினால் இறைவன் விதியில் உள்ளதை மாற்றப் போவதில்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருந்தாலும் யாராவது நேர்ச்சை செய்துவிட்டால் அவர்கள் அதனை கண்டிப்பாக நிறைவேற்றியே தீர வேண்டும்.

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 76:7)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (அல்குர்ஆன் 22:29)

உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695
மேற்கண்ட வசனங்கள் ஒருவர் நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. அதனை பகுதி பகுதியாக நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் எங்கும் அனுமதியில்லை.

 பதில் : ரஸ்மின் MISc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.