பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.
மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?
மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?
இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.
“செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)
சிலர் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும் வாழ்த்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.இந்த வாதம் அவர்களுடைய அறியமயையே காட்டுகிறது.ஒரு தவறை செய்பவருக்கும் அந்த தவறை ஆதரிப்பவர்களுக்கும் அதற்க்கு உண்டான தண்டனை வழங்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதோடு அல்லாஹ் நின்று விடாமல் யாராவது தவறு செய்வதை கண்டால் அதை தடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.
صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح… وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)
எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்