காபாவில் மலக்கு (?)

Name(பெயர்)  :  Mohamed Noorullah
Title(தலைப்பு) : காபாவில் மலக்கு (?)

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.(திருக்குர்ஆன் 2:3)

முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களில் ஒன்று மலக்குகள் இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். (ஆதாரம் : முஸ்லிம் 1) அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு புலப்படமாட்டார்கள். சிலர் காஃபாவின் மீது மலக்கு (?) இருப்பதைப் போல் ஒரு videoவை வெளியிட்டுள்ளனர்.மலக்குகளை இப்படி மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் வகையில் அனுப்புவதாக இருந்தால் காபிர்கள் கேட்டார்களே, அப்போதே அல்லாஹ் அனுப்பியிருப்பான். மனிதர்களை நபிமார்களாக அனுப்பிய போது நிராகரிப்பவர்கள் கூறியதைப் பாருங்கள் :

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 6:8

அவரது சமுதாயத்தில் (ஏக இறை வனை) மறுத்த பிரமுகர்கள் ‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை’ என்றனர்.
திருக்குர்ஆன் 23:24

‘இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில்நடமாடு கிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றனர்.
திருக்குர்ஆன் 25:7

‘அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்!’ என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்’ எனக் கூறினர்.
திருக்குர்ஆன் 41:14

அதற்கு அல்லாஹ்வின் பதிலைப் பாருங்கள் :

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.
திருக்குர்ஆன் 6:9

மலக்குகள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்பவர்கள்.அந்த வேலைகள் அல்லாமல் வேறு பணிக்காக இறைவன் மலக்குகளை அனுப்புவதாக இருந்தால் அநியாயக்காரர்களை அழிக்கவே அனுப்புவான். காஃபாவின் மீது படுத்துக் கிடக்கவெல்லாம் அனுப்பவே மாட்டான்.

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:8

மலக்குகளை இதற்கு முன்பு பார்த்திருந்தால் தான் இது மலக்கு என்பதை சொல்ல முடியும். மலக்குகள் இறக்கைகளோடு இருப்பர் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை வைத்து எதையும் வடிவமைக்கலாம்.
மலக்குகள் அல்லாஹ் நியமித்த பணியை செய்வதை தவிர வேறு வேலை எதையும் செய்ய மாட்டார்கள். காஃபாவின் மேல் படுத்துக் கிடக்கும் மலக்கு என்று குர்ஆனிலும் இல்லை ஹதீஸிலும் இல்லை.
மலக்குகளை படம் பிடிக்க முடியும் என்றால் ஒவ்வொரு மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் மலக்குகளை படம் பிடித்திருக்க முடியுமே, அல்லாஹ்வின் ஆணைப்படி நம்மை பாதுகாப்பதற்காக நம் கூடவே இருக்கும் மலக்குகளை பிடித்திருக்க முடியுமே, ஏதோ காஃபாவில் மட்டும் தான் மலக்குகள் இருப்பது போல் இந்த படத்தில் போட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தான் மலக்குகள் உள்ளனர். அதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா ?இப்போது ஏன் அது போல் மலக்கு வரவில்லை. இது போன்று எப்படியும் வடிவமைக்கலாம் என்பதை உணர்த்தும் வேறு விதமான படங்கள் : 

இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?மார்க்கத்தைப் பரப்பக் கூட முஸ்லிம்கள் பொய் சொல்வதற்கு அனுமதி இல்லை.ஆனால் சில முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தக்காளியில் அரபு எழுத்து, மீனில் அரபு எழுத்து இவைகளையெல்லாம் அற்புதம் என்கின்றனர். இறந்தது போல் ஒரு கொடூர உருவத்தைப் போட்டு இது ஓமனில் ஒருவருக்கு ஏற்பட்ட கப்ர் வேதனை என்கின்றனர், பள்ளிவாசலின் மேற்கூரை பறக்கிறது என்கின்றனர். இதனால் இஸ்லாத்தை பெருமைப்படுத்தலாம் என நினைக்கின்றனர். எதையும் நம்பும் சில முஸ்லிம்கள் வேண்டுமானால் சுப்ஹானல்லாஹ் அல்லாஹூ அக்பர் எனக் கூறிக் கொண்டு திரியலாம். இந்த பொய்களால் மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தின் மதிப்பு குறையவே செய்யும்.அல்லாஹ்வின் அற்புதங்கள், அத்தாட்சிகள் எவ்வளவோ இருக்கும் போது இத்தகைய பொய்களைப் பரப்புவதால் என்ன இலாபம். நாம் அனைவரும் பின்வரும் நபிமொழியை மனிதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 6

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.நான் படித்ததில் பிடித்ததை இவ்வலைப்பூவில் அனைவரிடமும் பகிர்ந்து மகிழ்கிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவருக்கே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.