நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்லிம்களால் நம்பப்படுகிறது.
இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து ஒருவர் தலைமாட்டிலும், மற்றொருவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.
இவருக்கு என்ன நேர்ந்துள்ளது என ஒருவர் கேட்டார். சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். சூனியம் வைத்தவன் யார் என ஒருவர் கேட்க, லபீத் பின் அஃஸம் என மற்றவர் விடையளித்தார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என ஒருவர் கேட்க சீப்பு, உதிர்ந்த தலைமுடி, பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். எந்த இடத்தில் என்று ஒருவர் கேட்க தர்வான் எனும் கிணற்றுக்குள் என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள்.
பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். அதை வெளியேற்றி விட்டீர்களா என்று நான் கேட்டேன். ‘இல்லை: அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கிணறு மூடப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இது புகாரி 3268-வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மாற்றங்களுடன் புகாரியின் வேறு சில எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது. (பார்க்க புகாரி 5763, 5765, 5766, 6063, 6391)
தமது மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலே உறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது என்றும்(புகாhp – 5765), இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் 23211 வது ஹதீஸூம் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் இந்த ஹதீஸ்கள் யாவும் ஏற்கத்தக்க அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை. ஆயினும் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்று கருதும் அளவுக்கு வேறு பல சான்றுகளும் கிடைக்கின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறியே நிராகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டை திருக்குர்ஆன் மறுக்கிறது.
அநியாயக்காரர்கள் தாம் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் என்று 17:47, 25:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
[box type=”note” ]சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்’ என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். திருக்குர்ஆன் (17:47)[/box]
அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா? என்றும் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்’ என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். திருக்குர்ஆன் 25:8
நபிமார்கள் பலரும் இவ்வாறு விமர்சிக்கப்பட்டதாக 26:153, 26:185, 17:101 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
[box type=”note” ]‘நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்’ என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 26:153 ‘நீர் சூனியம் செய்யப்பட்டவர்’ என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 26:185 தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! ‘மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்’ என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். திருக்குர்ஆன் 17:101[/box]
நபிமார்களுக்கு குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. அவ்வாறு கூறுபவர்கள் அநியாயக்காரர்கள், நிராகரிப்பவர்கள் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் வைக்கப்பட்டனர் எனக் கூறும் ஹதீஸ்களில் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்படுகிறது. உடல் பாதிப்பையாவது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். மனநிலை பாதிப்பை சாதாரணமாகக் கருத முடியாது.
செய்யாததைச் செய்ததாகக் கூறுவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் ஈடுபட்டதாக எண்ணுவதும் கடுமையான மனநிலை பாதிப்பைக் காட்டுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட நினைவில் வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது உண்மையாக இருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், அவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும். குர்ஆனுடைய ஒவ்வொரு வசனத்திலும் இதனால் சந்தேகம் ஏற்பட்டு விடும். ‘இது ஏன் அந்த ஆறு மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இருக்க முடியாது’ என்ற கேள்வி எழும். ஒவ்வொரு ஹதீஸிலும் இது போன்ற கேள்விகள் எழும்.
ஆனால், இம்மார்க்கத்தை,
[box type=”note” ]திருக்குர்ஆனை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் உறுதி மொழி தருகிறான்.இந்த அறிவுரையை நாமே அருளினோம். நாமே அதைப் பாதுகாக்கவும் செய்வோம் (திருக்குர்ஆன் 15:9)[/box]
இவ்வேதத்தைப் பாதுகாப்பது என்றால் அதைக் கொண்டு வந்தவரின் மனநிலையை முதலில் பாதுகாத்தாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனநிலையே பாதிக்கப்பட்டால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படாத நிலை ஏற்பட்டு விடும். இதன் காரணமாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
மனிதர்களையே அல்லாஹ் தனது தூதர்களாக நியமிக்கிறான். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன் தான் அனுப்பப்பட்டனர். தங்களைப் போலவே மனிதராக இருப்பவர், தங்களைப் போலவே உண்பவர், குடும்பம் நடத்துபவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் தூதர்களை அம்மக்கள் நம்ப மறுத்ததற்குக் காரணமாக இருந்தது.
தங்களைப் போலவே உள்ள ஒரு மனிதரை இறைவனின் தூதர் என்று மக்கள் ஏற்க மறுப்பது இயல்பானது தான் என்பதால் தான் எல்லாத் தூதர்களும் தம்மைத் தூதர்கள் என்று மெய்ப்பிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். எந்தத் தூதரும் அற்புதம் வழங்கப்படாமல் அனுப்பப்படவில்லை.(3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25, 64:6)
அற்புதங்கள் மூலம் தான் இறைத்தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்க முடியும் என்றிருக்கும் போது இறைத்தூதராக இல்லாதவரும், இறைவனின் எதிரிகளாக இருப்போரும் இறைத்தூதர்கள் செய்வதைப் போன்று அற்புதங்கள் நிகழ்த்தினால் இறைத்தூதர்களின் அற்புதத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். உம்மைப் போலவே உமது எதிரிகளும் செய்கிறார்களே என்று கேட்டு விடுவார்கள். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று விளங்கலாம்.
ஏதோ ஒரு கிணற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்தது அல்லாஹ்வின் தூதரின் மனநிலையை மாற்றியது என்றால் இது மிகப் பெரிய அற்புதமே. இத்தகைய அற்புதம் நடந்திருந்தால் இதையே காரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நிராகரித்திருப்பார்கள்.
‘அல்லாஹ் உங்களைத் தூதராக நியமித்ததை நாங்கள் பார்க்கவில்லை; நீங்கள் செய்து காட்டிய சில அற்புதங்கள் காரணமாகவே உங்களைத் தூதர் என நம்பினோம்; இப்போது உங்களையே புரட்டிப் போடும் அளவுக்கு உங்கள் எதிரிகள் அற்புதம் நிகழ்த்திக் காட்டிவிட்டதால் உங்களை எப்படி இறைத்தூதராக நாங்கள் ஏற்போம்’ என்று கேட்டிருப்பார்கள்.
ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய நிகழ்ச்சியை நடத்திக் காட்டி நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் தடம் புரளச் செய்ய மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்க முடியாது என்று தெரிகிறது.
மேலும் மூஸா நபியவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை எதிரிகள் சூனியம் எனக் கூறினார்கள். சூனியக்காரர்களுடன் போட்டிக்கும் ஏற்பாடு செய்தனர்.
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் செய்த வித்தையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது ‘மகத்தான சூனியத்தைச் செய்து காட்டினர்’ எனக் கூறுகிறான். (7:116)
அவர்கள் செய்த மகத்தான சூனியத்தினால் செய்ய முடிந்தது என்ன என்பது பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.
‘அவர்கள் தமது கைத்தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களின் சூனியம் காரணமாக அவை சீறுவது போல் அவருக்குத் தோற்றமளித்தது’ என்று 20:66 வசனம் கூறுகிறது.
அவர்கள் செய்தது சூழ்ச்சி தான் என்று 20:69 வசனம் கூறுகிறது.
[box type=”note” ]‘உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்’ (என்றும் கூறினோம்.) திருக்குர்ஆன் 20:69[/box]
அவர்கள் மக்களின் கண்களை வயப்படுத்தி பயமுறுத்தினார்கள் என்று 7:116 வசனம் கூறுகிறது.
[box type=”note” ]‘நீங்களே போடுங்கள்!’ என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். திருக்குர்ஆன் (7:116)[/box]
சூனியத்தின் மூலம் கண்களை ஏமாற்ற முடியுமே தவிர உண்மையில் எதையும் மாற்ற முடியாது என்பது இவ்வசனங்களின் மூலம் தெரிகிறது. சூனியம் என்பதற்கு மதிமயக்குதல் திசைதிருப்புதல் என்றும் பொருள்கொள்ளலாம் .பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ்கள் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்
[box type=”note” ]‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!(23:88-89)[/box]
பயானின் மூலம் ஒருவரை முடக்கவோ நோயாக்கவோ செய்ய முடியாது. ஆனால், அவரைக் கவரும் வகையில் பயான் செய்ய முடியும். அவர் விளங்கியிருந்த கருத்தை மாற்றி நம்முடைய கருத்துக்கு திருப்ப முடியும். இதுதான் ஸிஹ்ர் என்ற வார்த்தையின் பொருளாகும். மேற்கண்ட வசனத்திலும் ஸிஹ்ர் என்ற சொல் அந்த பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்மையாகவே மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுவது இதற்கு முரணாக அமைந்துள்ளது. மேலும் நபிமார்கள் அற்புதங்கள் கொண்டு வந்த போது எதிரிகள் அதை சூனியம் என்று கூறினார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 5:110, 6:7, 10:2, 10:76, 15:15, 21:3, 10:77, 27:13, 28:36, 34:43, 37:15, , 46:7, 54:2, 74:24, 61:6)
மூஸா (அலை)
[box type=”note” ]அப்போது அவர் தமது கைத் தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது. ‘இவர் தேர்ந்த சூனியக்காரராக (ஸிஹ்ர் செய்பவராக) உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?’ என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 7:107, 108, 109[/box]
[box type=”note” ]அவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் செய்த கூட்டமாக இருந்தனர். நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்த போது ‘இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)’ என்றனர். ‘உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் (ஸிஹ்ர்) என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் (ஸிஹ்ர் செய்பவர்கள்) வெற்றி பெற மாட்டார்கள்’ என்று மூஸா கூறினார். திருக்குர்ஆன் 10:75, 76, 77[/box]
[box type=”note” ]‘நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்’ என்று அவன் கூறினான். அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது. ‘இவர் திறமை மிக்க சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்)’ என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். ‘தனது (ஸிஹ்ர்) சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்? (என்றும் கேட்டான்).
திருக்குர்ஆன் 26:31, 32, 33, 34, 35[/box]
[box type=”note” ]மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது ‘இது இட்டுக்கட்டப்பட்ட (ஸிஹ்ர்) சூனியம் தவிர வேறில்லை; இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை’ என்றனர். திருக்குர்ஆன் (28:36)[/box]
[box type=”note” ]மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். ‘இவர் சூனியக்காரரோ (ஸிஹ்ர் செய்பவரோ) பைத்தியக்காரரோ’ எனக் கூறினான். திருக்குர்ஆன் 51:38, 39[/box]
[box type=”note” ]உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர் (என்றான்). நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது ‘இது தெளிவான சூனியம் (ஸிஹ்ர்)’ என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். ‘குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?’ என்று கவனிப்பீராக! திருக்குர்ஆன் 27:12, 13, 14[/box]
[box type=”note” ]மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். ‘பெரும் பொய்யரான சூனியக்காரர்’ என்று அவர்கள் கூறினர். திருக்குர்ஆன் 40:24[/box]
ஈஸா (அலை)
[box type=”note” ]‘மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப் படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது ‘இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை’ என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக! திருக்குர்ஆன் 5:110[/box]
[box type=”note” ]‘இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்’ என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது ‘இது தெளிவான சூனியம்’ எனக் கூறினர். திருக்குர்ஆன் 61:6[/box]
முஹம்மது (ஸல்)
[box type=”note” ](முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். ‘இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள். திருக்குர்ஆன் 6:7[/box]
[box type=”note” ]மக்களை எச்சரிப்பீராக! என்றும், நம்பிக்கை கொண்டோருக்குத் தம் இறைவனிடம் அவர்கள் செய்த நற்செயல் (அதற்கான கூலி) உண்டு என நற்செய்தி கூறுவீராக! என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? ‘இவர் தேர்ந்த சூனியக்காரர்’ என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 10:2[/box]
[box type=”note” ]அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. ‘இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?’ என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். திருக்குர்ஆன் 21:3[/box]
[box type=”note” ]நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது ‘மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? ‘இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே’ என்று கூறுகின்றனர். ‘அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம’ எனவும் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 28:48[/box]
நபிமார்கள் கொண்டு வந்த அற்புதங்களை சூனியம் என்று கூறி அவர்கள் மறுத்ததாக மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. சூனியம் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் தந்திர வித்தை என்று அவர்களே விளங்கியிருந்ததால் தான் இவ்வாறு கூறி அற்புதங்களை நிராகரித்தனர். உண்மையாகவே நடக்கும் அற்புதம் வேறு. சூனியம் என்னும் ஏமாற்று வித்தை வேறு என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.
இதிலிருந்து சூனியத்தால் உடலுக்கோ மனநிலைக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. மேற்கண்ட ஹதீஸ்கள் இதற்கும் முரணாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் என்ன செய்வது?
குர்ஆனைப் போலவே ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50க்கும் குறைவாக உள்ளன.
இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.
உதாரணத்திற்காக ஒரு ஹதீஸை நாம் சுட்டிக் காட்டலாம்.
[box type=”note” ]ஒரு குழந்தை அன்னியப் பெண்ணிடம் பால் அருந்தினால் பத்து தடவை அருந்தினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. அது குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்று ஆயிஷா (ரலி-) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 2634, 2635)[/box]
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை மேற்கண்ட வசனம் குர்ஆனில் இருந்தது உண்மை என்றால் அது இன்றளவும் இருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா (ரலி) கூறும் அந்த வசனம் குர்ஆனில் இல்லை.
மேற்கண்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டால் நபிகள் நாயகத்துக்குப் பின் குர்ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து வரும். இறைவனோ குர்ஆனை நாம் பாதுகாப்போம் என்கிறான். இதற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நாம் ஏற்காது விட்டு விட வேண்டும். இதை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது.
ஸாலிம் எனும் இளைஞர் அபூஹுதைபா (ரலி) வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ‘ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும்’ என்று கூறியதாக முஸ்லிம் 2638, 2636, 2639, 2640 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸையும் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும்.
முரண்பட்ட அறிவிப்புக்கள்
மேலும் ஆயிஷா (ரலி) அறிவிக்கும் அந்தச் சம்பவத்தில் பலவிதமான முரண்பாடுகளும் உள்ளன. அது இந்தக் கருத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது.
சூனியம் வைக்கப்பட்ட பொருள் அப்புறப்படுத்தப்பட்டதா? இல்லையா?
சூனியம் வைக்கப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தாமல் கிணற்றை மூடினார்கள் என்று புகாரி 5763, 3268, 5766 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
[box type=”note” ]எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது ‘அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினாh;கள்.புகாரி -3268, 5763, 5766[/box]
ஆனால், ‘நபி(ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்’ என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்களே சென்று அப்புறப்படுத்தினார்களா? ஆட்களை அனுப்பி அப்புறப் படுத்தினார்களா?
அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
சு+னியம் செய்யப்பட்ட தகவலை அறிவித்தது ஒரு வானவரா? இருவரா?
நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.
நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல்(அலை) வந்து ‘உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்’ என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புகளில் முரண்பாடு இருப்பதாலும் இந்தச் செய்தியில் ஏற்படும் சந்தேகம் அதிகரிக்கின்றது.
ஸூரதுல் பலக்கும், ஸூரதுந் நாஸூம் சூனியத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அருளப்பட்டதா?
திருக்குர்ஆனின் 113, 114வது அத்தியாயங்களின் அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த இயலும் என்று வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள் அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக 12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.
சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் இதில் ஏராளமான ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் கூறுகிறார்கள்.
இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவில் அருளப்பட்டதா? என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது என்பது தான் உண்மையாகும்.
அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் ‘இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டவை’ என்று கூறுகிறார்.
நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் மொழி பெயர்த்த தமிழாக்கத்தில் ‘இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை’ என்று கூறுகிறார்.
எங்கே அருளப்பட்டது என்பதற்கே ஆதாரம் கிடையாது என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக் கூறுவது கட்டுக்கதை என்பது உறுதியாகிறது.எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் யார்?
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்’ (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர்.
முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.
இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.
ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளுஃச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)
முடிச்சு என்றவுடன் நூலில் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில் உள்ள முடிச்சை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது (20:27) முடிச்சு என்று தான் கூறினார்கள். நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.
[box type=”note” ]‘ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (அபூதாவூத் 651)[/box]
தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண்பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும் சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
மேலும் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவேன் (பார்க்க திருக்குர்ஆன் 5:67) என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள் எனும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தை விட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அறிவிப்பாளர்களைப் பொருத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதை விட ஆதாரப்பூர்வமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு முரணாக இருப்பதால் திருக்குர்ஆனுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.
– Onlinepj.com
சூனியம் பற்றிய வீடியோக்களை காண [button color=”red” size=”small” link=”https://frtj.net/2014/02/sooniyam-video.html” target=”blank” ]Click Here[/button]
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.
Strictly Necessary Cookies
Strictly Necessary Cookie should be enabled at all times so that we can save your preferences for cookie settings.
If you disable this cookie, we will not be able to save your preferences. This means that every time you visit this website you will need to enable or disable cookies again.